'வாழ்வியல் இலக்கியப் பொழில்' அமைப்பின் தீபாவளி சிறப்புக் கவியங்கமாக ‘பொழில் பன்னாட்டுக் கவியரங்கம்-003’ நிகழ்ச்சி 22-11-2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5.00 மணிக்கு ZOOM வழியாக நடைபெற்றது.
சிங்கப்பூர் 'வாழ்வியல் இலக்கியப் பொழில்' என்ற தமிழ் அமைப்பின் மாபெரும் மூன்றாவது கவியரங்கமான ‘தீபாவளி சிறப்புக் கவியரங்கமாக வந்த பொழில் பன்னாட்டுக் கவியரங்கத்தில் ச.இரமேஷ், நிகழ்ச்சியை தன் இனிமையான் குரலால் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வந்த திருமதி.துளசிமணி, கவிபாட வந்திருந்த கவிஞர்கள் அனைவரையும் தனித்தனியே சிறு அறிமுகம் தந்து வரவேற்று மகிழ்ந்தார். இணையம்வழி இணைந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த பார்வையாளர்களையும் வரவேற்றார். வாழ்வியல் இலக்கியப் பொழில் என்பது ஓர் அழகிய பூம்பொழில் எனவும் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தார்.
பல்வேறு நாடுகளில் இருந்து கவிஞர்கள் 16 பேர் கலந்துகொள்ளும் பன்னாட்டுக் கவியரங்கத்தில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, இந்தியா மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளில் இருந்தும், பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.“இயற்கை ஒளி” என்ற கவியரங்க தலைப்பிற்கு, சிங்கப்பூர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்ற இந்த கவியரங்கத்தில், சிவகங்கை மாவட்டம் அமராவதி புதூரை சேர்ந்த புலவர் இராம.வள்ளியப்பன் அவர்கள் தொடக்கக் கவியாக ‘செங்கதிரோன்’ என்ற துணைத்தலைப்பில் கவிதையைப் படைத்தார். அவரை தொடர்ந்து வந்த 16 கவிஞர்கள் கவி பாடினர். செங்கதிரோன்; நிறைமதியாள்; நிரல் ஒளி; மலைத்தீபம்; பிறைநிலவு; வால் விண்மீன் ஆகிய துணைத்தலைப்புகளில் கவி பாடினர்.
செங்கதிரோன் என்ற துணைத்தலைப்பில், சிங்கப்பூரிலிருந்து முத்து இராஜசேகரன் மற்றும் எ.வெங்கடாசலபதி; புதுச்சேரியிலிருந்து க.சரவணன்; சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்து அ. அனோத்ஜீவ் மற்றும் பிரியா மூர்த்தி; ஓசூரிலிருந்து மணிமேகலை; புதுக்கோட்டையிலிருந்து வீக. பொன்னையா ஆகியோரும், நிரல் ஒளி என்ற துணைத்தலைப்பில், சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்து கவிஞர் சரளா விமலராசா; நிறைமதியாள் என்ற துணைத்தலைப்பில், சிங்கப்பூரிலிருந்து முனைவர் இராஜி ஶ்ரீனிவாசன் மற்றும் மலேசியாவிலிருந்து கலைவாணி மோகன் ஆகியோரும், மலைத்தீபம் என்ற துணைத்தலைப்பில், சென்னையிலிருந்து த.காயத்ரி மற்றும் சியாமளா ரகுநாதான் ஆகியோரும், பிறைநிலவு என்ற துணைத்தலைப்பில், சிங்கப்பூரிலிருந்து இரமேஷ்குமார் மற்றும் காரைக்குடியிலிருந்து சை.சபிதா பானு ஆகியோரும் கவி படைத்தனர்.
பொழிலில் புத்தம்புது முறையில் கவியரங்க இலக்கணம் – பொதுவாக கவியரங்கம் என்றால் என்றால் கவி பாடுவோர் தமிழ் வணக்கம், தலைமை வணக்கம், அவை வணக்கம் என தொடங்கி தம் கவிதையை ஒரே சுற்றில் வாசிப்பார்கள். தமிழ்க் கவியரங்க உலகில் முதன்முறையாக இரண்டு சுற்றுகளாக அமைந்த இந்த கவியரங்கத்தில், கவிஞர்கள் தமிழ் வணக்கம்; தலைமை வணக்கம்; சக கவிஞர்கள் வணக்கம்; அவை வணக்கம்; துணைத்தலைப்பிற்கு கவிதை முக்கால் பாகமும் என முதல் சுற்றில் அமைய 17 பேரும் கவிபாடிய பின்னர் இரண்டாம் சுற்றில் கால் பாகம் துணைத்தலைப்பிற்கு கவிதை பாடி நிறைவாக இந்த சமுதாயத்திற்கு தேவையான தம் கருத்தை வலியுறுத்தியும், தமிழுக்கு நன்றியுரைக்கும் வரிகளோடு பாடியது புதுமையாகும்.
இறுதியாக பார்வையாளர்கள் கருத்துரைத்தல் அங்கத்தில் இருவருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடக்கம் முதலே ச.இரமேஷ் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்திய விதம் அருமை. பங்கெடுத்த அனைத்து கவிஞர்களுக்கும் இணையம்வழி “பாராட்டுச் சான்றிதழ்” அனுப்பிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.