எப்படி தீபாவளி வரும் முன்பே நம் வீடுகளில் அதற்கான ஏற்பாடுகள் ஒரு மாதம் முன்பே துவங்குமோ,அதைப்போலவே நம் தமிழ்ச் சங்கத்திலும் நடந்தது தீபாவளிக்காக சிறப்பு நிகழ்ச்சிகளின் ஏற்பாடும்.
இந்த கொரோனா காலத்தில் இத்தனை வருடங்கள் கூடிக்கொண்டாடியது போல இவ்வருடம் நம் மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூட முடியாத பட்சத்தில், மக்களை சந்தோஷப்படுத்த இரு முக்கிய நிகழ்வுகளை ஒரே நாளில் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒன்று கலகலப்புக்கு சொந்தக்காரர், அனைவரையும் தன் பேச்சால் கவர்ந்தவர், மிகவும் எளிமையாய்,அன்பாய் பழகக்கூடியவர் கலைமாமணி திரு.கு.ஞானசம்பந்தன் அவர்களுடன்,'மறக்க முடியாத கனாக் காலம் பள்ளி வாழ்க்கையா? கல்லூரி வாழ்க்கையா?' என்ற தலைப்பில் சான் ஆண்டோனியோ பேச்சாளர்கள் -அசோக், ஆர்த்தி, செல்வகிரி, ஷீலா ரமணன், கௌதமன் மற்றும் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்ட அருமையான பட்டிமன்றம் நவம்பர் 21 ஆம் தேதி மெய்நிகர் நிகழ்வாக நடந்தது.
கொளுத்திப் போட்ட ஆயிரம் வாலா சரவெடியாக இப்பேச்சாளர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பேசியது அனைவர் மனதையும் கவர்ந்ததென்றே சொல்லலாம். இவர்களை பார்த்தால் பட்டிமன்றப் பேச்சில் புது அனுபவம் போலவே தெரியவில்லை என நடுவர் பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் அனைவரையும் கட்டிப்போடும் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. திரையிசைப் பாடகர்கள் சத்யன் மகாலிங்கம் மற்றும் பாடகி ரோஷிணியும் இணைந்து அட்டகாசமான பாடல்கள் மிக உற்சாகத்துடன் பாடி நம் மக்களை குளிர்வித்தனர். நேயர்கள் விரும்பிய பாடல்களை அனுப்பிய போது உடனுக்குடன் பாடி குஷிப் படுத்தினர். சத்யன் இரண்டாம் முறையாக நம் தமிழ்ச் சங்கத்திற்கு நிகழ்ச்சி அளித்தவர்.
இவ்வாறு தமிழ்ச் சங்கம் இத்தீபாவளியையும் மறக்க முடியாத ஒன்றாக மக்களுக்கு வழங்கியது மிகவும் பாராட்டுக்குரியது. சங்க தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்! இன்னும் சில போட்டிகள் இவ்வழியில் வரவிருக்கின்றன.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.