அவதார் அவார்ட்ஸ் விருதுக்கான சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். சுரேன்ராவ் பற்றி அவதார் அவார்ட்ஸ் வெளியிட்டுள்ள குறிப்பில்...
ஆனந்த ராவ் மற்றும் நிர்மலா தேவி தம்பதியினரின் நான்காவது பிள்ளை தான் சுரேன்ராவ். இவரின் குடும்பத்தில் மொத்தம் 7 பிள்ளைகள். அவரின் கடைக்குட்டி தம்பி இரண்டு வயதிலேயே நோய் காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு மொத்தம் 3 அண்ணன்கள் மற்றும் 2 தம்பிமார்கள்.
இவர் 01.04.1992 –ஆம் ஆண்டில் கூலிம் மாவட்டத்திலுள்ள புக்கிட் செலாரோங் எனும் சிறிய தோட்டத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் அன்பும் கண்டிப்பும் நிறைந்தவர்கள். அதே வேளையில் கல்வியில் அக்கறை கொண்டவர்கள். இவர் ஆரம்பக்கல்வியை விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் துவங்கினார். இவர் ஆரம்பக் காலத்திலேயே கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் உள்ளவர் என்றால் அதுமிகையாகாது.
சுரேன்ராவ் தம் இடைநிலைக்கல்வியைச் சியோமின் என்ற சீனப்பள்ளியில் தொடர்ந்தார். இப்பள்ளி கூலிம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீனப்பள்ளியாக இருப்பினும், அவர் தம் திறமையை அங்கும் வெளிக்காட்ட மறுக்கவில்லை. அப்பள்ளியில் அவர் தலைமை மாணவராகப் பொறுப்பேற்றார். திறமைக்கு எவ்விடமும் சரிதான் என்பதற்கு இவர் ஓர் உதாரணம். ஆரம்பப் பள்ளியிலேயே பலதுறைகளில் வெளுத்து வாங்கியவர் , இடைநிலைப்பள்ளியிலும் தொடர்ந்து சாதித்தார். பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், பாடல் என தமக்குள்ளிருந்த முழுத்திறமையையும் பலமொழிகளில் வெளிப்படுத்தி சிறந்த மாணவராகவும் சக நண்பர்களின் தோழமையையும் பெற்றவராகத் திகழ்ந்தார்.
இடைநிலைப்பள்ளியில் படிவம் ஐந்துவரையிலும் (SPM) பயின்றார். தம் பள்ளிப் பருவத்தை முடித்த இவர் எஸ்.பி.எம் முடிவிற்காக காத்திருந்தார். அவ்வேளையில் பகுதி நேரமாக தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவரின் எதிர்கால ஆசை விமானத்துறையில் பணிபுரிவது. ஆனால், குடும்பத்தின் வறுமை மற்றும் பெற்றோரின் ஆசையின் காரணமாக இவர் ஆசிரியர் துறையில் கால்பதித்தார். தன் ஆசிரியர் கல்வியை ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தில் 5 ஆண்டு பயின்றார். அங்கு பயிலும் சமயத்தில் இவர் மாணவர்களின் பிரதிநிதியாகவும் 2 ஆண்டுகள் தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி, பல நிகழ்ச்சிக்குத் தலைவராகவும் செயல்பட்டுவந்தார். ASTRO வானவிலில் ஓரங்க நாடத்தைப் பார்த்திருப்பீர்கள். இவர் தம் கல்லூரி இந்திய மாணவர்களை மூன்று குழுவாகப் பிரித்து இப்போட்டிக்கு அழைத்துச் சென்று ,மூன்றாவது நிலையைத்தட்டிச் சென்றார். இப்பெருமை இவரையேசாறும்.
5 ஆண்டுகள் தம் கல்வியை முடித்த இவர் ஆசிரியர்பணியைச் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியில் தொடங்கினார். தம் ஆசிரியர் பணியைத் தொடங்கிய இவர் எப்பொழுதும் மாணவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே எண்ணி உழைப்பவர். பள்ளியில் திடல்தடப்போட்டியில் இவரின் சேவை அளப்பெரியது. பணியைத் தொடங்கிய முதல் ஆண்டில் இவரின் பள்ளி மாவட்ட ரீதியில் முதல் இடத்தையும், இவரின் மாணவன் மற்றும் மாணவி மாநில அளவில் நடைபெற்ற திடல்தடப் போட்டி விளையாட்டில் வீராங்கனைப் பட்டத்தையும் வெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
அதுமட்டுமின்றி, இவரின் முதலாம் ஆண்டு ஆசிரியர் பணியில் இவர் JURULATIH UTAMA RIMUP தேர்வு செய்யப்பட்டார். குறுகிய காலத்திலேயே இப்பதவியைப் பெறுவது எளிதல்ல. இவர் அனைத்துலக மற்றும் தேசிய அளவில் புத்தாக்கப் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்று உள்ளார் .இதைத் தவிர இவர் பல புத்தாக்கப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.
இவர் தமிழின் பால் கொண்ட பற்று பலசாதனைகளைப் புரியதூண்டியுள்ளது. 2019- ஆண்டில் இவர் தம் பெயரை மலேசிய சாதனை புத்தகத்தில் பதித்துள்ளார். இவர் 12 மணி நேரம் இடைவிடாது தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் சாதனை படைத்துள்ளார். ஒரு தமிழ் ஆசிரியராக பணிபுரியும் இவர் ,தம் துறையிலேயே சாதித்தது பெருமையாக உள்ளது. தமிழுக்கு இவரால் முடிந்த அளவுக்கு தமிழின் சிறப்பை மலேசியா சாதனை புத்தகத்தில் பதிக்க முடிந்தது.
அதுமட்டுமின்றி, 2019- ஆண்டு வானவில் சாதனையாளர் விருதும் பெற்றார். இது போன்ற பல விருது பெற்று உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவரின் சாதனை இத்தோடு நில்லாமல், ஆசிய சாதனை புத்தகத்திலும் தம் பெயரைபதிக்க ஆவல் கொண்டுள்ளார் ஆசிரியர் ஆ.சுரேன்ராவ்.
உடலாலும் உள்ளத்தாலும் செய்யும் உண்மையான முயற்சிகளே வெற்றியைச் சுவையுள்ளதாக ஆக்கும்! எனவே, வெற்றியை நோக்கிய பயணத்தை ஒரு போதும் நிறுத்தாதீர்கள்! களைப்பாக இருக்கிறதா சிறிது ஓய்வு எடுங்கள்! ஒவ்வொரு நாளையும் ஒரு புது நாளாக எண்ணவும்! வெளிச்சம் கிடைக்கும்!
– நமது செய்தியாளர் வெங்கடேசன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.