“ தமிழகத்தில் அறம் சார்ந்த ஆட்சி – ஆன்மிக அர (ற) சாட்சி அமையும். ஆன்மிகம் என்றால் என்ன ? உண்மையான – நேர்மையான – அன்பான – பேதமற்ற – பிரிவு பார்க்காத நிலை. அத்தகு ஆட்சி நிச்சயம் அமையும். சாதியால் – மதத்தால் – மொழியால் – இனத்தால் தோன்றும் தேவையற்ற சூழல் மாறி நல்நிர்வாகம் தரும் நல்லாட்சி தமிழகத்திற்கு கிடைத்தே தீரும். விவசாயிக்கு எல்லாம் தெரியும்.
விதைக்க – பயிரிட – விளைவிக்க – உழுது பொருள் உற்பத்தி பெருக்க விவசாயிக்குத் தெரியும். விவசாயிகள் பஞ்சபூதங்களை நன்கு அறிந்தவர்கள். காலத்தை நன்கு கணிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். மண்ணை வளமாக்கும் – மண்ணுக்கு உயிர் சேர்க்கும் வல்லமை மிக்கவர்கள். விவசாயத்திற்குப் பழுது சேர்ப்பவைகளைத் திறம்படத் தெரிந்தவர்கள். மனிதர்களைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியும். பருவம் அறிந்து பயிர் செய்பவர்கள்.
இயற்கைக் கடவுளை வழிபடுபவர்கள். எல்லோருக்காகவும் வாழ்பவர்கள் விவசாயிகள். அவர்கள் நலமாக இருந்தால் உலக உயிர்கள் அனைத்தும் நலம் பெறும். விவசாயிகளே இனி முக்கியத்துவம் பெறுவர். உலகில் பிரசித்தி பெற்றவர் – பெரும் பணக்காரர் என்றால் அவர் விவசாயி ஆகத்தான் இருப்பார் என்ற நிலைமை உருவாகும். இறையே தமிழகத்திற்கு நல்மாற்றம் வேண்டும் என உருக்கத்தோடு பிரார்த்தனை செய்யுங்கள். தமிழகம் நிமிர்ந்தால் தரணியே நிமிரும். பிரார்த்தனை செய்தால் கேட்டது கிடைக்கும் – கேட்டால் கிடைக்கும். வேண்டியதை வேண்டியவாறு பெறலாம். உனக்குள் இருக்கும் சக்தியை நம்பு. எந்த ஒன்றைப் பின்பற்ற வேண்டுமோ அதைப் பற்றி விட்டால் எல்லாம் கிடைக்கும். கடவுள் என்பது தனித்த பொருள் அல்ல. எல்லாமாக இருப்பது. கடவுளைப் பற்றி வீண்வாதம் செய்ய வேண்டியதில்லை. கடவுள் உங்களோடு இருக்கிறார். எண்ணத்தில் – செயலில் – சொல்லில் அது இருக்கிறது. கடவுளோடு இருக்க நீங்களும் கடவுளாகிறீர்கள். தெய்வத்தோடு இருக்க நீங்களும் தெய்வமாகிறீர்கள். இன்று தத்துவத்தை விட்டு விட்டு சம்பிரதாயங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் பிரபஞ்ச தத்துவம் – குரு தத்துவம் மலர வேண்டும். மகிமை வாய்ந்த குருவை சிந்தித்தால் எல்லா ஆனந்தங்களையும் பெறலாம். “ என ஜனவரி 10 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தென்கயிலை எனும் திருமூர்த்தி மலை பரஞ்ஜோதிநகர் உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்ற முப்பத்து ஓராவது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நிறைவு விழாவில் உரையாற்றுகையில் மகா மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில் “ நீ என்ன நினைக்கிறாயோ அது பிரபஞ்சமாக மாறும். ஒரு ஏழையும் பிரபஞ்சம் நினைத்தால் செல்வந்தனாக முடியும் கோழையும் வீரனாவான். கேட்டதைக் கொடுக்கும் காமதேனு – வேண்டியதைத் தரும் கற்பக விருட்சம் – எல்லாம் அருளும் சித்தாமணி குரு ஆற்றல்.
அதைப் பற்றிக் கொள்ளுங்கள். நீயே சத்தியம் – நீயே நித்தியம் – நீயே சகலமும். உன்னை நம்பு. தனி மனிதன் – குடும்பம் – சமுதாயம் – நாடு – உலகம் என அனைத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற இன்றைய கொரானாப் பெருந்தொற்றுத் தீமையிலும் நன்மைகளும் விளைந்திருக்கின்றன. நடுநிசியும் நெருக்கடியும் நெடுநேரம் நீடித்ததில்லை. நிலைமை மாறும். நம்பிக்கை வையுங்கள். இந்தப் பிரபஞ்சத்தைக் காக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. செயற்கைக் மூலிகை மருத்துவம் செயற்கை கோள்களால் மாசு ஏற்பட்டிருக்கிறது. நிலத்தில் – நீரில் காற்றில் – ஏன்? மனித அறிவிலும் மாசு ஏற்பட்டிருக்கிறது. இவைகள் களையப்பட்டாக வேண்டும். அன்னை பூமியைக் காப்பாற்றுவோம். பிரபஞ்சத்தைக் காப்பாற்றுவோம் – இயற்கையைக் காப்பாற்றுவோம். இந்த உலக சகோதரத்துவ ஆன்மநேய - சன்மார்க்க – சமதர்ம ஒருமைப்பாடு – ஆன்மிக மறுமலர்ச்சி மலரப் பரிபூரண நல்லாசிகள் “ எனத் தமதுரையை நிறைவு செய்தார்.
சரியாக காலை பத்து மணிக்குப் பிரணவாலயம் எனும் தவக்குடிலிலிருந்து வெளிப்பட்ட மகரிஷி பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். ஒரு நிமிட அமைதியுடன் விழா தொடங்கியது. குருகீதம் – தேசிய கீதம் – தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. அடுத்த அங்கமாக குருமாதா தலைமையில் எண்மர் அஷ்ட தீபம் ஏற்றினர். செல்வி பூரணசந்திராவின் “ வாழ்வினை அர்ப்பணித்தேன் “ என்ற பாடல் பரத நாட்டியம் விழாவுக்குச் சுவை கூட்டியது. சண்முகி – தியா உள்ளிட்டோரின் யோகா செய்முறை தொடர்ந்தது. டாக்டர் கார்த்தி – சரண்யா தம்பதியரின் மகன் – சின்னஞ் சிறு பிஞ்சின் யோகா செய்முறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி மகிழ வைத்தது. அறங்காவலர் – சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் கே.விநாயகம் தலைமை ஏற்க பொதுச் செயலர் கே.எஸ்.சுந்தரராமன் வரவேற்புரை ஆற்றினார். பிப்ரவரி 12 – இல் நடைபெறவிருக்கும் இயற்கைப் பாதுகாப்பு தினம் ( குருமகான் ஜெயந்தி ) மற்றும் மே மாதம் 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஞானவள்ளல் விழா - குண்டலினி மாநாடு பற்றி அறிவிக்கப்பட்டது. 31 ஆவது தவ வேள்வி தொடக்க விழா டி.வி.டி . கே.விநாயகம் வெளியிட புதுச்சேரி ஆச்சார்யா கல்வி நிலையத் தலைவர் அரவிந்தன் பெற்றுக் கொண்டார். அடுத்து பிரபஞ்ச நல வாழ்த்து – சர்வ சக்தி சித்தி மகா யக்ஞம் நடைபெற்றது. இன்றைய சூழல் கருதி மிகக் குறைந்த அளவே சீடர்கள் அனுமதிக்கப்பட்டனர். கலந்து கொண்டோர் முகக் கவசம் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். செல்வி.சத்யா நிகழ்வினை நெறிப்படுத்தினார். கலந்து கொண்டவர்களை மகரிஷி தனித் தனியே ஆசிர்வதிக்க விழா இனிதே நிறைவு கண்டது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.