'வாழ்வியல் இலக்கியப் பொழில்' அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ‘பொழில் இலக்கியப் பொங்கல்-2021’ சிறப்பு நிகழ்ச்சி கடந்த 09-01-2021 (சனிக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு ZOOM வழியாக நடைபெற்றது. மூவர் குத்துவிளக்கு ஏற்றிய பின்னர், அகிலேஷ் பிரசாத் ‘வாழ்க நிரந்தரம்’ என்ற தமிழ் வணக்கப் பாடலைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
மாலைப்பொழுதில் இலக்கியப் பொழிலில் இளைப்பாறி, இலக்கியப் பொங்கலை சுவைக்க வந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார் செயலவை உறுப்பினர் உஷா கிருஷ்ணமூர்த்தி. வாழ்வியல் இலக்கியப் பொழில் நிகழ்ச்சிகளில் எப்போதும் சிறுவர்கள் அங்கம் இருக்கும். முதலில் ஜோஷிக்கா ‘தமிழ்’ பற்றி உற்சாகமாக பேசினார். ‘கலித்தொகை’ நூலில் வரும் பாடல்களோடு வந்தார் சனா கான். ‘மூதுரை’ பாடல்களோடு வந்தார் நந்திகா. ‘நான் ஏன் இலக்கியம் படிக்கிறேன்’ என்ற தலைப்பில் தன்னுடைய சொந்த அனுபவங்களை கூறினார் ப்ரித்தீவ். சிலப்பதிகாரத்தில் வரும் சில பாடல்களோடு வந்தார் ஜீவஜோதிகா.
தொடர்ந்து வந்த அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி, அமைப்பின் நோக்கங்கள், திட்டங்களை செயல்படுத்தும் முறைகள், எதிர்கால விருப்பங்கள் ஆகியவற்றை நோக்கவுரையில் வழங்கினார். விழாவிற்கு தலைமையேற்ற ‘தமிழறிஞர்’ முனைவர் சுப.திண்ணப்பன் தலைமையுரையாற்றினார். பொழில், இலக்கியம் மற்றும் பொங்கல் ஆகிய சொற்களை தனித்தனியே பொருளோடு விளக்கம் கொடுத்து, அமைப்பு நடத்திவரும் தமிழ்ப்பணி பற்றி வெகுவாக பாராட்டினார். மூவர் சிற்றுரைகள் வழங்கினர். முதலில் கலைவாணி இளங்கோ ‘ சிங்கப்பூரில் சங்கத்தமிழ் கூறுகள்’ என்ற தலைப்பிலும், பவித்ரா கண்ணன், ‘குண்டலகேசி கூறும் சித்தாந்தம்’ என்ற தலைப்பிலும், முனைவர் சத்யபாமா முத்தமிழ்ச்செல்வன் ‘அறம் செய விரும்பு’ என்ற தலைப்பிலும் இலக்கியச் சுவை நிரம்ப இலக்கியப் பொங்கலை படைத்தனர். தொடர்ந்து வந்த முனைவர் அ.வீரமணி தம்முடைய வாழ்த்துரையில், இந்த அமைப்பு செய்யும் பணிகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும், எதிர்காலத்தில் அவருடைய முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களையும் பயன்படுத்திக்கொள்ளவும் ஆலோசனை வழங்கினார்.
விழாவின் முக்கிய அங்கமாக ‘பொழில் வாழ்த்துப் பாடல்’ வெளியிடப்பட்டது. இணையம் வழி வெளியிட தயாராக இருந்த சிறப்புரையாளர் சிங்கப்பூர் தொழிலதிபர், அபிராமி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் சி.பழனியப்பன் அவர்கள் வலையொளி (YouTube) மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார், சிங்கப்பூரில், வாழ்வியல் இலக்கியப் பொழில் செய்யும் பணிகளை விவரிக்கும் அந்த பாடலை, அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி எழுதி மெட்டமைக்க, தமிழகத்தின் கோயமுத்தூரிலிருந்து இரவீந்திரன் பாட, அவருடைய புதல்வர்கள் இர.சந்தோஷ் மற்றும் இர.நித்தின் இசையமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல் வெளியீட்டிற்கு பின் வந்த சிறப்புரையில் அமைப்பின் வளர்ச்சியைப் பாராட்டியும் எதிர்காலத்தில் எவ்வாறு தமிழ் சமுதாயத்திற்கு பயனுள்ளதாக அமையவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருந்த தமிழகத்தின் தமிழ் வளர்ச்சி, தமிழ்ப்பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திரு.க பாண்டியராஜன் அவர்கள், அவசரமாக கூடிய பொதுக்குழு கூட்டத்தினால் பங்கேற்ற இயலாத நிலையை அமைப்பின் பொருளாளர் முனைவர் தேன்மொழியாள் விவரித்தார். விழாவின் அடுத்த முக்கிய அங்கமாக ‘பொழிலின் பயணம் நவம்பர் 2017 முதல் இன்று வரை’ என்ற சிறப்புக் காணொளியும் வெளியீடு கண்டது. கடந்த 38 மாத நிகழ்ச்சிகளின் முக்கிய பகுதிகளை விவரிக்கும் இந்த காணொளி அமைப்பின் இணையப் பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
நன்றியுரை வழங்கிய முனைவர் தேன்மொழியாள் மறவாமல் யாவரையும் மனதார நினைவுகூர்ந்து நன்றியுரைத்தார். தொடக்கம் முதல் இடையிடையே குறிப்புகள், வழங்கி பல்வேறு வகையில் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சென்றனர் இரேஜேஸ்வரி இரமேஷ்குமார் மற்றும் பவித்ரா கண்ணன்.
சுவையான ‘பொழில் இலக்கியப் பொங்கல்’ நிகழ்ச்சி முடிவுக்கு வர, இனிமையாக தமிழ்க் குடும்பங்கங்கள் பல, கலந்துகொண்ட நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.