மார்கழித் திங்களில் வரும் மூல நட்சத்திரமும் அமாவாசையும் நிறைந்த சுப யோக சுப தினம் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் ஜென்ம தினம். இந்த நன்னாள் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஜெயந்தி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் 24 அடி உயரத்தில் விஸ்வ ரூப ராமபக்த ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஜனவரி 12 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஜனவரி மூன்றாம் தேதி முதல் பத்து நாட்கள் காலையில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் மூல மந்திர ஹோமம் – பஞ்ச சூக்த ஹோமம் – விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றன. இதே போல மாலையில் சிங்கப்பூர் தட்சிண பாரத பிராமண சபாவைச் சேர்ந்த இருபது பேர் அமர்ந்த இலட்சார்ச்சனையும் விசேஷ தீபாராதனையும் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது. நிறைவாக ஜெயந்தி நாளில் விசேஷமாகத் தருவிக்கப்பட்ட ஐநூறு லிட்டர் பசும் பாலைக் கொண்டு ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்குப் பாலாபிஷேகம் செய்யப்பட்டது மெய் சிலிர்க்க வைத்தது. காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிய பாலாபிஷேகம் பதினோரு மணிக்குத் தான் நிறைவு பெற்றது. பின்னர் ஆலயத் தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தமக்கே உரிய பாணியில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவது – வெற்றிலை மாலை சாற்றுவது – ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது போன்றவற்றின் தத்துவங்களை விரிவாக விளக்கியது பக்தப் பெரு மக்களுக்குப் பெரு விருந்தாக அமைந்தது. ஹநுமன் சீதா பிராட்டியிடம் கணையாழியைக் கொடுத்த போது – சீதா தேவி மகிழ்ந்து அங்குள்ள கொடியைப் பறித்து மாலையாக அணிவித்து ஆசிர்வதித்ததால் வெற்றிலை எனப் பெயர் வந்தது என தலைமை அர்ச்சகர் விளக்கமளித்தது பக்தர்களுக்குப் புதிய செய்தியாக இருந்தது. மாலையில் ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் ஜொலித்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்றைய சூழலைக் கருதி பக்தர்கள் ஐம்பது ஐம்பது பேராக சந்நிதிக்கு அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தரிசித்தனர். காலையில் சுமார் 2000 பேரும், மாலையில் சுமார் 1500 பேரும் கலந்து கொண்டனர். அனைவரும் வசதியாக தரிசனம் செய்யவும் பிரசாதம் பெறவும் ஆலய மேலாண்மைக் குழுவினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். வழக்கமாக சர்வ அலங்கார நாயகராக சுவாமி வலம் வருவது இவ்வாண்டு சூழல் கருதி கைவிடப்பட்டது.– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.