“ தமிழ் ஒரு தெய்வ மொழி – தமிழ் மொழி பேசும் தமிழினம் தெய்விக இனம் – தமிழர் கொண்டாடும் பொங்கல் ஒரு தெய்விகத் திருவிழா. கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த இனம் தமிழினம் என்று புறப்பொருள் வெண்பா மாலையில் கூறிய கல்லாடரின் சொல்லாடல் தெய்வ வாக்கு. நம் முன்னோரின் செயல் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவை. தத்துவ தவ உயர் ஞானிகளாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். ஆடிப்பட்டத்தில் தேடி விதைத்தவைகளைத் தையில் அறுவடை செய்து பல்லுயிர் ஓம்பிப் பண்பாடு காத்தவர் நம் முன்னோர். அவர்தம் வாழ்க்கை உயர் வாழ்க்கை – உயிர் வாழ்க்கை. ஆன்மாவைச் சார்ந்த வாழ்க்கை. இவ்வான்ம வாழ்க்கையை எல்வோரும் வாழ வேண்டுமென்பதே அவர்தம் கொள்கை. உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது வாழ்ந்த வாழ்க்கை நமது முன்னோர் வாழ்க்கை. பிரபஞ்சத்தின் பேரறிவை – பேராற்றலை அறிந்தவர்கள் – உணர்ந்தவர்கள் நம் முன்னோராகிய தமிழர். அணுவை உணர்ந்தவர்கள் – அணுவுக்குள் இருப்பவைகளையும் அறிந்தவர்கள். பஞ்ச பூதங்களின் நுட்பத்தை அறிந்தவர்கள். அனைத்து உயிர்களின் இயல்புகளையும் உணர்ந்தவர்கள் தமிழர்.
மார்கழி நிறைவுறும் நாளில் போகி கொண்டாடப்படுகிறது. பயன்படுத்தியவைகளையும் – பயன்படாதவைகளையும் போக்கிப் புத்துணர்வு பெறுவது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்பது பழந்தமிழர் கோட்பாடு. அடுத்த நாள் சூரிய வழிபாடு. கண்டு – கேட்டு – உண்டு – உற்று – அறியும் ஐம்புலன்களையும் ஆள்பவன் இந்திரன் – ஐந்திறம் பெற்றவன். இந்த ஐம்புலன்களையும் ஆட்சி புரிகின்ற உயிரே இந்திரன். இந்தப் புலன்களை ஆட்சி புரிவது மனம். உயிருக்கு – மனதிற்கு வழிபாடாக அமைவது இந்திர விழா. முன்னர் நிகழ்ந்த இவ்விழா பின்னர் இயற்கைத் தெய்வ வழிபாடாக - நன்றி நவிலும் திருவிழாவாக மலர்ந்தது. அதுவே பொங்கல் திருவிழா. எல்லா உயிர்களும் சூரியனிலிருந்தே வந்ததால் சூரிய வழிபாடு. இந்த அயன மாற்றமே பொங்கல் விழா. பிரபஞ்சத் தோற்றத்தின் வெளிப்பாடே இத் தைத் திங்களில்தான் நிகழ்கிறது.
த் + அ = த ம் + இ = மி + ழ் இந்த ஐந்தெழுத்து மந்திரமே தமிழ். புள்ளியல் தோன்றி புள்ளியே கோடாகி – கோடே வரியாகி – வரியே வடிவாகி நிற்கின்றது. அந்தப் புள்ளியே மூலமாய் – அந்த மூலமே காலமாய் – காலமே சீலமாய் – சீலமே கோலமாய் - அந்தக் கோலமே ஞாலமாய்ப் பரிணமித்திருக்கிறது. அதை உணர்ந்தவர்கள் தமிழர்கள். கற்று உணர்ந்து கற்பிக்கும் ஆற்றல் பெற்றவர் தமிழர். உலகம் முழுவதும் சென்று உயிர்க் கலையான சாகாக் கலையை – மரணமிலாப் பெரு வாழ்வைக் கற்பித்தவர் தமிழர். ஆய கலைகள் அறுபத்து நான்கையும் வெளிப்படுத்தியவர் தமிழர். உலக மாந்தர் அனைவரும் தமிழர்களைப் பாது காத்திட வேண்டும். உலகில் தோன்றிய மூத்த மொழி – அதைப் பேசுவோர் மூத்த குடிமக்கள் அல்லவா ? பழைய கட்டடங்களை – பழைய பொருட்களைப் பாது காக்க வேண்டுமென்கிறோமே தொன்மை மிக்க பழந் தமிழரைக் காத்திடல் வேண்டாமா ? உயர்தனிச் செம்மொழியாம் தமிழைப் பாது காப்பதோடு தமிழினத்தையும் பாது காப்போம். பகுத்தறிவின் துணை கொண்டு – மெய்ப்பொருள் உணர்ந்து – தெய்விகத் தன்மையைப் பேணி வாழ்ந்து வாழ்வித்து உயர்வோம் தமிழர் உணர்ந்தால் தரணியே உயரும். தமிழர் திருநாளாம் இன்று குடும்பம் – சமுதாயம் – நாடு – உலகம் அனைத்தையும் காத்து – போற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழப் பரிபூரண நல்லாசிகள்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.