சிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஜனவரி 12, 13, 14 ஆம் தேதிகளில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு பஞ்ச கால மஹா பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. மூன்று நாட்களும் சங்கல்பத்துடன் தொடங்கி புண்யாகவாசகம், அபிஷேகம் , வேத பாராயணம், ஸ்ரீ ஐயப்ப அஷ்ட்டோத்ரம் , பஜனை , மந்த்ர புஷ்ப சமர்ப்பணம் , சதுர் வேதம், லோக வீரம் , பஞ்ச ரத்னம், படிப்பாட்டு என்ற நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்ற போது பக்தப் பெருமக்கள் “ சுவாமியே சரணம் ஐயப்பா “ என சரண கோஷம் முழங்கியது மெய் சிலிர்க்க வைத்தது. அபிஷேகம் நிறைவு பெற்று சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ஐயப்பன் எழுந்தருளிக் காட்சியளித்தது கண்கொள்ளாக் காட்சியாகும். நிறைவு நாளில் ஹரிவராசனம் முத்தாய்ப்பு நிகழ்வாக அமைந்தது. இன்றைய சூழல் கருதி பக்தப் பெருமக்கள் முக கவசமணிந்து சமூக இடைவெளி விட்டு அமர்ந்து தரிசனம் செய்தனர். ஆலய நிர்வாகம் சுவாமி தரிசனத்திற்கும் பிரசாதம் பெறவும் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.