கென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் திருவிழா மிக சிறப்பாக ஜனவரி 16ஆம் தேதி நிகழ்நிலை நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு, யூட்யூப் பிரிமியர் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பிரபல டிவி தொகுப்பாளர் ஆதவன் விழாவை தொகுத்து வழங்க, நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன், சண்முகவடிவேலு இன்று ஒரு திருக்குறள் சொல்ல, தலைவர் உரையுடன் இனிதாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த விழாவின் சிறப்பு அம்சமாக 26 குழந்தைகளும், 20 பெரியவர்களும் பங்கேற்று அவர்களுடைய கலைத்திறமையை மிருதங்க வித்துவானாக, பாரதியாக, முருக கடவுளாக, பாடகர்களாக, நாட்டியர்களாகவும் மற்றும் சிறு நகைச்சுவை நாடகமாகவும் வலம்வந்து நிகழ்ச்சியை அலங்கரித்தார்கள். அதுமற்றுமின்றி தமிழின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் சிறப்பு நிகழ்ச்சியாக அரங்கேற்றப்பட்டது.
700க்கும் மேற்பட்ட நபர்கள் நிகழ்நிலை யூட்யூப் வாயிலாக, அமெரிக்கா, இந்தியா மற்றும் பிற உலக நாடுகளில் இருந்தும் நிகழ்ச்சியை சிறப்பாக கண்டுகளித்தனர். பதவியை முடித்துச்செல்லும் தற்போதைய செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் புதிய செயற்குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்து அவர்களை வாழ்த்தி வரவேற்கப்பட்டது.
அதுமட்டுமன்றி நடிகர்கள் நெப்போலியன், எஸ்.வி. சேகர் மற்றும் பின்னணி பாடகர்கள் தீபக், அரவிந்தும் கென்டக்கி தமிழ் குடும்பங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து, தற்போதைய செயற்குழு உறுப்பினர்களின் செயல்பாடுகளை பாராட்டிய குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சி துணைத்தலைவரின் நன்றி நவிலலுடன் இனிதே முடிவடைந்தது.
கொரோனாவினால் நிகழ்நிலை வாயிலாக நடந்த இந்த பொங்கல் திருவிழா இனிதே நடந்திருந்தாலும், தமிழ் சங்கத்தின் பாரம்பரியமான உணவு விருந்து மற்றும் நண்பர்களோடான நேருக்குநேர் கலந்துரையாடல் போன்றவை இடம்பெறாத ஏக்கத்தை தந்தது. இருப்பினும் இந்த நிகழ்நிலை நிகழ்ச்சி ஒரு புதிய அனுபவத்தையும் மற்றும் ஒரு புதிய வாழ்வு முறையும் கற்று கொடுத்ததுடன் இதன் நினைவு நம்மனதோடு பலவருடங்கள் நிலைத்திருக்குமென சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
– தினமலர் வாசகர் செந்தில் வேலன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.