அமெரிக்கா - டெக்சாஸ் மாகாணம் - டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் 2021 பொங்கல் விழா ஜனவரி 16,17 மற்றும் 18 ஆகிய நாட்களில் தமிழர் பண்பாடு, கலை, பாரம்பரியத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் மூன்று நாள் திருவிழாவாகக் சிறப்புற நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ் மரபு இசை கலைஞர்கள், சாதனையாளர்கள், தமிழறிஞர்கள், சித்த மருத்துவர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் குழந்தைகள் கலந்துகொண்டு சிறந்த சொற்பொழிவுகளையும் கலைநிகழ்ச்சிகளையும் வழங்கிச் சிறப்பித்தார்கள். முதல் நாள் விழா நெய்வேலி இராமலட்சுமி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வெற்றிச்செல்வனின் வரவேற்புரையோடு தொடங்கியது. தொடர்ந்து, தாய்த் தமிழின் வேர்ச்சொல் உலக மொழிகளில் எவ்வாறு மறைந்துள்ளது என்பதை டாக்டர் அரசேந்திரன் விளக்கி உரைத்தார். அடுத்து, சின்னத்திரை புகழ் செந்தில் இராஜலட்சுமியின் நாட்டுப்புறப் பாடல் நிகழ்வு காற்றில் கலந்து மனமெங்கும் நிறைத்தது. மேலும், திணை நிலவாசிகள் ஒருங்கிணைப்பில் தமிழ் மற்றும் உலக இசைக்கருவிகள் ஓர் உலா என்னும் தமிழிசையின் தொன்மையை லியோன் பாப் ஜேம்ஸ், சாரு, இயக்குநர் பாகு ஆகியோர் பாடியும் இசைத்தும் விளக்கியும் வியப்பில் ஆழ்த்தி மகிழ்வித்தனர். இரண்டாம் நாள் நிகழ்வில் தமிழ்ச் சங்கத்தின் செயலர் திருமதி சுமிதா கேசவன் வரவேற்க, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் ஆர்.பால கிருஷ்ணனின் ஜல்லிக்கட்டு விளையாட்டின் தொன்மை தொடக்கம் தொடர்ச்சி என்பதான தமிழ் மரபு வீர விளையாட்டு குறித்த விரிவான தரவுகளோடு கூடிய உரையுடன் தொடர்ந்தது. அடுத்து, தமிழர் மெய்யியலில் தமிழர் அணுவியம் குறித்து பேராசிரியர் டாக்டர் நெடுஞ்செழியன் சிறந்த ஆய்வுரையை வழங்கினார். இவரைத் கால்டுவெல் வேள்நம்பி சிறப்புச் செய்தார். தொடர்ந்து, டிவி புகழ் நவீன் நகைச்சுவை நேரம் அனைவரையும் மகிழ்வித்தது. அடுத்து, மகத்துவம் நிறைந்த சித்த முத்திரைகள் குறித்து பேராசிரியர் எம்.மணிவண்ணன், டாக்டர் எம். சாலை கல்பனா தேவி ஆகியோர் பலருக்கும் பயன்பட எடுத்துக் காட்டி விளக்கினர். தொடர்ந்து, குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளும் சிறுதானியத்தில் பொங்கல் சமைப்பது உட்பட பல்வேறு போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. அடுத்து மூத்த நடிகர் டெல்லி கணேஷ் தலைமையில் குடும்பத்தின் பிக்பாஸ் கணவரா– மனைவியா என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டி மன்றம் நடந்தது. தொடர்ந்து, மரபுக் கலையில் ஒன்றான மல்லர் கம்பம் குறித்து தமிழ்நாடு மல்லர் கம்ப கழக நிறுவனரான ஆசான் உலகதுரையின் சிறப்புரையும் தொடர்ந்து முனைவர் க.கணேஷ் பயிற்சிபட்டறையில் உருவான இளைஞர்கள் குழந்தைகள் பங்குபெற்ற மல்லர் கம்பம் நிகழ்த்தி காட்டப்பட்டது.நிறைவாக, சூப்பர் சிங்கர் வின்னர் பிரிதிகாவின் இசை விருந்து படைக்கப்பட்டது. மூன்றாம் நாள் நிகழ்வு தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் வள்ளலாரின் வரவேற்போடு தொடங்கியது. அடுத்து, பாடகி மஹதி மற்றும் குழுவினரின் மங்கள இசை மற்றும் நடனத்தோடு தொடர்ந்தது. தொடர்ந்து, மனோஜ் பாலகிருஷ்ணனின் ஜீ பூம் பா - மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளுக்குப் பின் நிறைவாக, ரோபோ சங்கரின் பல் குரல் நிகழ்ச்சியும் திண்டுக்கல் சரவணனின் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இக்கொண்டாட்டத்தின் மூன்றாவது நாள் நிகழ்வில் முத்தாய்ப்பாக நீர் மேலாண்மை குறித்து இந்திய அரசின் எழுத்தாளர்களுக்கான உயரிய விருதான சாகித்திய அகாடமி விருதைத் தனது 'சூல்' நாவலுக்காக 2019 ஆம் ஆண்டு வென்ற எழுத்தாளர் சோ.தர்மன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாடினார். அவரது இலக்கிய பணியைச் சிறப்பிக்கும் விதமாக அவருக்கு 'இலக்கியச் சூலர் ' பட்டமும் ஒரு இலட்ச ரூபாய் விருது பணமும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவரை MTS-ன் தோற்றுநரும் முன்னாள் தலைவருமான பால் பாண்டியன் சிறப்பித்தார். தமிழ்ச்சங்கத்தின் 2021 பொங்கல் திருநாள் நிகழ்வுகளை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2021-2022 ஆம் ஆண்டுக்கான சங்க நிர்வாகக்குழுவும் தன்னார்வலர்களும் ஒருங்கிணைத்துச் சிறப்புற நிகழ்த்தினர்.– தினமலர் வாசகர் வெற்றிச் செல்வன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.