சிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழிலின் 40ஆவது கூட்டம் இணைய வழி நேரலையாக நடைப்பெற்றது. மகாகவி பாரதியாரின் ‘வாழ்க நிரந்தரம்’ எனும் தமிழ் வணக்கப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. ஆடலும் பாடலும் என தொடங்கிய நிகழ்ச்சியில் செல்வி நந்திகா, மோகனப் பண்ணில் பாடினார். செல்வி அனன்யா நாகையா மற்றும் செல்வி மானசி இருவரும் தனித்தனியே பரத நாட்டியம் ஆடினர். திருமதி இராஜேஸ்வரி வினோத் வரவேற்புரை வழங்கினார். நிறுவனத்தின் தலைவர் தேனிசைப் புலவர் எல்ல.கிருட்டிணமூர்த்தி இயற்றிய “பொழிலொன்று பொழிலொன்று” எனும் பொழில் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பெற்றது. சிறுவர் அங்கம் நிகழ்ச்சியில் செல்வி சத்யமூர்த்தி சமிக்சா ‘பொது அறிவுரை’ எனும் தலைப்பில் பொது அறிவுச் செய்திகளை வழங்கினார். செல்வன் வியாச பிரகன் பாரதி வேடம் புணைந்து உரையாற்றினார். செல்வி.சத்யமூர்த்தி கனிச்கா மழலைப்பாடல் வழங்கினார். செல்வன் சிவ.வேதாந்தன் பாரதி வேடம் புணைந்து அவர் பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்.கதை கூறுதல் நிகழ்ச்சியில் செல்வன் ஆறுமுகன் சேதுமாதவன் ‘நட்பு’ எனும் தலைப்பில் பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழனின் சங்க கால நட்பை மேற்கோள் காட்டி உரையாற்றினார். செல்வி ஜீவஜோதிகா நளவெண்பாச் செய்யுளுக்கு இலக்கிய நயம் கூறினார்.தொடர்ந்து வந்த, அறிமுக உரையைப் பாவலர் எல்ல. கிருட்ணமூர்த்தி வழங்கினார். சங்க காலம் முதல் உப்பு வாணிகம் பொருளாதரத்தில் பெற்றிருந்தச் சிறப்பிடம், சங்க இலக்கியத்தில் உப்பினைக் ‘கடல்விளை அமிழ்து’ மற்றும் ‘வெண்கல் அமிழ்து’ என அழைக்கப் பெற்றது, உப்பு-உப்பளம்--சம்பளம் ஆனது, உரோம் நகரத்தில் salt சம்பளமாகக் கொடுத்ததால் salt என்ற சொல்லில் இருந்து-salary பிறந்தக் கதை என்பது முதல் உப்பிலியப்பப் பெருமாளுக்கு உப்பில்லாமல் உணவு படைக்கப்பெறுதல் வரை செய்திகளை ஆய்வுரையாக வழங்கினார்.அடுத்து, புதுச்சேரி, காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையத்தில் இருந்து தமிழியல் துறைத்தலைவர், முனைவர் ஔவை நிர்மலா சிறப்புரை வழங்கினார். தொடித்தலை விழுத்தண்டினார் எனும் புலவரின் இனி நினைந்து எனத் துவங்கும் புறநானூற்றுப் பாடல் வழி முதியவர்களின் இளமைக்கால நினைவுகளை எடுத்துரைத்தார். ஔவையார், பிசிராந்தையார் முதலான சங்ககாலப் புலவர்கள் நெஞ்சுரம் உடையவர்களாகவும் மன்னர்களுக்கு அறிவுரை வழங்கும் நிலையிலும் வாழ்ந்த நிலையை இக்காலத்துடன் ஒப்பிட்டு உரையாற்றினார். கவிதையும் கானமும் எனும் தலைப்பில் வெங்கடாசலபதி புதுக்கவிதை வழங்கினார். சித்த மருத்துவம் நிகழ்ச்சியில் திருமதி சாவித்திரி, துளசி மூலம் முகப்பொலிவை உண்டாக்குதல், நுரையீரல், கல்லீரல் எனும் அக உறுப்புகளைத் தூய்மைச் செய்தலுக்கான மூலிகை மருத்துவ விளக்கத்தை வழங்கினார். நாப்பிறழ் பயிற்சி விளையாட்டில் பார்வையாளர்கள் சிலர் விளையாடி மகிழ்ந்தனர். தாயும் சேயுமாக திருமதி.தேவிபாலா-செல்வி.நந்திதா நிகழ்ச்சியை அழகாக தொகுத்துரைத்தனர். திருமதி தேவிபாலா நன்றியுரை நல்கினார். நேரலையாக நிகழ்ச்சியை வழங்கும் பணியைத் திருமதி மகாஜபீன் ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் முகநூல் மற்றும் இணையவழி பார்த்து மகிழ்ந்தனர்.– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.