ஜெர்மனியில் உங்கள் நிறுவனத்தை தொடங்குவது எப்படி? | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜெர்மனியில் உங்கள் நிறுவனத்தை தொடங்குவது எப்படி?

பிப்ரவரி 24,2021 

Comments

12ம் நூற்றாண்டு ஔவையாரின் "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு", இந்த 21ம் நூற்றாண்டுக்கும் சாலப்பொருந்தும். படித்துமுடித்து வேலை தேடி தொழிலாளியாய் பெரும்பாலானோர் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்க, 'முதலாளியாகியும் தான் பார்ப்போமே!' என்று ஒரு சிலர் மட்டுமே அந்த நேரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். தொழிலாளிக்கு 8 மணி நேர உழைப்பு என்றால் முதலாளிக்கோ 24 மணி நேரமும் உழைப்பு தான். தினம் தினம் தன் அறிவையும் அனுபவத்தையும் கூர் தீட்டிக்கொண்டே இருக்கவேண்டும். படிப்பு ஒருபுறம் என்றால் அனுபவம் இன்னொருபுறம். கொஞ்சம் அசந்து உட்கார்ந்தாலும் அடுத்தவர் நம்மை முந்திக்கொண்டு போய் விடுவார்.

சொந்தமாய் நிறுவனம் ஆரம்பித்து அதன் நெளிவு சுளிவுகளை அறிந்து லாபம் வர தொடங்கியவுடன் அடுத்த கட்டத்துக்கு நகரலாம் என்று மனதில் தோன்றும். ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் தொழிலை விரிவு படுத்தலாமே என்ற இந்த எண்ணம் எட்டிப்பார்க்கும். நம் தயாரிப்புகள் நல்ல தரத்துடன் தானே இருக்கின்றன, வெளிநாட்டு மக்களும் நம் தயாரிப்பை பயன்படுத்தினால் நன்றாக இருக்குமே, நம் தயாரிப்புக்கு உலக அளவில் சந்தை பெருகுமே என்ற எண்ணம் வரும். அதற்கு வெளிநாட்டில் கிளை நிறுவனத்தை ஆரம்பித்தால் வாடிக்கையாளரை எளிதாக தொடர்பு கொள்ளலாமே என்று நினைப்பர். ஆனால், எப்படி ஆரம்பிப்பது, யாரை தொடர்பு கொள்வது, எந்த நாடு நம் கிளை நிறுவனத்தை ஆரம்பிக்க உகந்தது? என்று ஆயிரம் கேள்விகள் அவர்கள் மனதில் எழும். அந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கப்போகிறது இந்த தொடர். அதாவது ஜெர்மனியில் உங்கள் நிறுவனத்தை அல்லது கிளை நிறுவனத்தை ஆரம்பிக்க என்னென்ன செய்யவேண்டும் என்று விரிவாக அலச இருக்கிறது இந்த தொடர் கட்டுரை.

ஐரோப்பாவின் ஜெர்மனியைப் பொறுத்தவரையில் இந்தியர்களின் உற்பத்திப்பொருட்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்தியாவிலிருந்து வருடந்தோறும் நிறைய பொருட்களை ஜெர்மனி இறக்குமதி செய்கிறது. 2019 ம் ஆண்டைப் பொறுத்த வரையில் இந்தியாவிலிருந்து கரிம வேதிப்பொருட்களை (organic chemical) 1.08 பில்லியன் யூரோ ( இந்திய ரூபாயில் ஏறத்தாழ 950 கோடி ரூபாய்) மதிப்பிற்கு ஜெர்மனி இறக்குமதி செய்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இயந்திர உதிரி பாகங்கள், சென்சார் வகைகள், டெக்ஸ்டைல்ஸ் & துணி வகைகள், மருத்துவ உபகரணங்கள், தோல் பொருட்கள், இரும்பு மற்றும் ஸ்டீல் பாகங்கள், காலணிகள் என்று இந்திய உற்பத்திக்கு வருடந்தோறும் ஜெர்மனியில் வரவேற்பு கூடிக்கொண்டே போகிறது. இயந்திர உதிரி பாகங்களைப்பொறுத்தவரையில் அதுவும் 2019 ம் ஆண்டு ஏறத்தாழ ஒரு பில்லியன் யூரோ அளவிற்கு இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு ஏற்றுமதியாகியிருக்கிறது. அப்படியானால் ஜெர்மனி தான் நம் நிறுவனத்தை தொடங்க சரியான இடம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

ஐரோப்பாவின் எகானாமியில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ஜெர்மனி, நல்ல தரமான பொருட்களை என்றுமே இருக்கரம் நீட்டி வரவேற்கும். நம் தமிழ் நாட்டு மக்கள் தொகையும் ஜெர்மனியின் மக்கள் தொகையும் ஏறத்தாழ ஒன்று தான். ஆனால் நிலப்பரப்பில், தமிழ்நாட்டை விட இரண்டேமுக்கால் மடங்கு அதிகம். பி.எம்.டபிள்யு, ஓப்பல், ஆடி என்று இங்கு உற்பத்தியாகும் உலகத்தரம் வாய்ந்த கார்கள் அதிகம். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இங்கு வாழ்கிறார்கள். அதனால் அன்றாடத் தேவைக்கான இந்திய பொருட்களுக்கும் இங்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அன்றாடம் உணவுக்காக பயன்படுத்தும் காய்கறிகள், மசாலா பொருட்கள் முதல் அழகு சாதன பொருட்கள் வரை நம்மூர் பொருட்களின் தேவை கூடிக்கொண்டே போகிறது.

ஜெர்மனியில் உங்கள் தொழில் நிறுவனம் இருக்கும் பட்சத்தில் உங்கள் உற்பத்தி பொருட்களை ஜெர்மனி மட்டுமல்லாது ஐரோப்பா முழுக்க சந்தை படுத்த ஏதுவாக இருக்கும். உலகின் நடக்கும் எக்ஸிபிஷன்களில் மூன்றில் இரண்டு பங்கு வர்த்தக கண்காட்சிகள் ஜெர்மனியில் தான் நடக்கின்றன. இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கும் போது உங்களின் தயாரிப்புகளின் மீது பிற நாட்டவர்களின் பார்வை படியும். அது உங்களின் தயாரிப்பை உலகின் பிற பாகங்களுக்கு கொண்டு செல்ல வழி வகுக்கும். பிரெக்சிட் நிகழ்வுக்குப் பிறகு, ஐரோப்பாவை தலைமையிடமாக கொள்ள ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரையே பல நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கின்றன. அதனால் பன்னாட்டு நிறுவனங்களோடு எளிதில் தொடர்பு கொள்ளவும் அவர்களுடன் கூட்டுத் தொழில் அல்லது தொழில் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கும் வசதியாக இருக்கும்.

இந்த தொடரில் , ஜெர்மனியில் உங்கள் நிறுவனத்தை அல்லது நிறுவனத்தின் கிளையை தொடங்குவது எப்படி, யாரை எப்படி அணுகவேண்டும், அது உங்கள் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள எப்படி உதவும் என்பன போன்ற விஷயங்களை விரிவாக அலச இருக்கிறோம். முதலில் இந்தியர்கள் இங்கு புதிதாக தங்கள் நிறுவனத்தை எப்படி தொடங்குவது, அதற்கு யாரை அணுகவேண்டும், என்னென்ன டாக்குமெண்ட் ரெடி செய்யவேண்டும், என்பன போன்ற விஷயங்களைப் பார்ப்போம்.

இந்தியாவில், ஒரே உரிமையாளர்(Sole Proprietorship), பாட்னர்ஷிப் கம்பெனி, பிரைவேட் லிமிடெட், பப்ளிக் லிமிடெட் என்று பல விதங்களில் நிறுவனங்களை நாம் பார்த்திருப்போம். அது மாதிரி ஜெர்மனியிலும் உண்டு. GmbH, ஒரு நபர் கம்பனி, GbR, UG, GmbH&Co. KG என்று பலவகைகளில் நிறுவனங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக வரும் வாரத்தில் காண்போம்.

(தொடரும்)
-தினமலர் நிருபர் ஜேசு ஞானராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us