சிங்கப்பூரில் ‘போற்றுவோம் கொண்டாடுவோம்’ | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ‘போற்றுவோம் கொண்டாடுவோம்’

ஏப்ரல் 03,2021 

Comments

‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் வரிகளுக்கேற்பச் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்லாது உலகெங்கும் தமிழ்மணத்தைப் பரப்பி வருபவர் சிங்கைத் தமிழ்ச் செம்மல் முனைவர் சுப. திண்ணப்பன். அவரின் அளப்பரிய தமிழ்ப் பணியைப் போற்றும் வகையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் 2020க்கான தமிழக அரசின் மொழியியல் அறிஞர் விருதை வழங்கிக் கௌரவித்திருக்கிறது. இதற்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் சிங்கப்பூரில் செயல்படும் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கமும், அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழுவும் இணைந்து "போற்றுவோம் கொண்டாடுவோம்" என்ற நிகழ்வை மார்ச் 21ஆம் தேதி இணையவழி அரங்கில் நடத்தியது.


‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி’ என்ற தமிழ்த்தாய் வணக்கத்தோடு தொடங்கிய நிகழ்வை வழி நடத்தினார் திருமதி அபிராமி சண்முகம். இணைய அரங்கிலே தமிழன்பால் இணைந்த இதயங்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு சௌந்தரராஜன். அடுத்த அங்கமாக, முனைவர் சுப. திண்ணப்பன் அவர்கள் ஆற்றிய சாதனைகளைப் பற்றிய காணொளித் தொகுப்பு ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து முனைவர் திண்ணப்பன் பற்றி ‘விருது வரும் தேடி விரைந்தொளிவார் ஓடி’ என்ற தலைப்பில் கவிதை மழை பொழிந்தார் அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழுவின் தலைவர் அ.கி வரதராஜன்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிங்கப்பூர் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான முனைவர் இரா. தினகரன் சிறப்புரை ஆற்றுகையில், நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழும் சுப. திண்ணப்பன் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும், சாதனைகளையும், தொண்டுகளையும் எடுத்துரைத்து அன்னாரின் தமிழ்ப்பணி பல்லாண்டு காலம் தொடர வேண்டும் என்று வாழ்த்துரைத்தார். மேலும், சிங்கப்பூரின் 6வது அதிபராகத் திகழ்ந்த எஸ். ஆர். நாதனுக்குத் தமிழ் ஆசானாக நின்று தமிழ் பயிற்றுவித்ததையும், 500க்கும் மேற்பட்ட தமிழரல்லாதவர்களையும் தமிழ் பேச வைத்த பெருமை அவர்களையே சாரும் என்றும் சிலாகித்துப் பேசினார்.


இதனைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் அ. இளங்கோ மற்றும் க. நெடுஞ்செழியன் இருவரும் சுப. திண்ணப்பனின் ஆன்மீகச் செயல்பாடு, பகுத்தறிவு கொள்கைகளைப் பற்றிய புரிந்துணர்வு, ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு அவர் ஆற்றி வரும் தொண்டு என்பது போன்ற அவர்களின் வாழ்வியல் நெறிமுறை நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாகத் திகழ்கிறது என்று அவர் தம் அனுபவங்களை எடுத்துரைத்தனர். பிறகு பேசிய அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழுவின் துணைத் தலைவர் இரா. புகழேந்தி மற்றும் அதன் உறுப்பினர் வி.ஆர்.அழகப்பன் இருவரும் சுப. திண்ணப்பனின் கல்விப்பணி குறித்தும், ஆன்மீகப்பணி குறித்தும் விரிவாக எடுத்துரைத்து அன்னாரின் தமிழ்ப்பணியும், சமூகப்பணியும் பன்னெடுங்காலம் தொடர வேண்டும் என்று வாழ்த்துரைத்தனர்.


இதனையடுத்து, சுப.திண்ணப்பனுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கமும், அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழுவும் இணைந்து பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர். இதன் பிறகு விழா நாயகரான சுப.திண்ணப்பன் ஏற்புரை வழங்கினார். வள்ளுவரின் கூற்றுக்கேற்ப தமிழுக்குச் சிகரமாய் இருக்கும் அகரத்தைப்போலப் பல்கலைக்கழகக் கல்விக்குச் சிகரமாக இருந்தவர்கள் அண்ணமலையாரும், அழகப்பரும் என்பதை எடுத்துரைத்து இக்கல்விக் கழகங்களின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தால் நடத்தப்படும் இப்பாராட்டு விழாவிற்கு நெஞ்சார்ந்த நன்றியுரைத்தார்.


பள்ளி பருவத்தில் அரும்பாக இருந்த இவரின் தமிழ் ஆர்வம் ஆன்றோர்கள் மற்றும் பேராசிரியர்களின் வழிகாட்டுதலால் மலர்ந்து பின்பு கனியாகக் கனிந்த வரலாற்றை நெகிழ்வோடு பகிர்ந்துகொண்டார். தமிழ் என்னை இயக்கியது நான் வெறும் கருவி மட்டுமே என்று கூறிக்கொள்ளும் அவர், படிபடியாகத் தான் கற்ற மொழியியல் அறிவே தன்னுடைய பல முயற்சிகளுக்கு அடித்தளமாக அமைந்தது என்பதை நினைவு கூர்ந்தார். எழுத்துத் திருத்தம் ஒரு கையேடு, எல்லோருக்கும் ஏற்ற தமிழ் என்ற நிகழ்ச்சி, ஆய்வுக் கட்டுரைகள், தமிழ் எழுத்துகள் ஒலிக்கின்றபொழுது ஒலி தசை நார்கள் எவ்வாறு ஒலிக்கின்றன என்பதைக் காணொளியாக எடுத்தது என்பன போன்ற மொழியியல் தொடர்பான முயற்சிகளே இந்த மொழியியல் விருதைப் பெறுவதற்கு என்னைத் தகுதியுள்ளவன் ஆக்கின என்பதை நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.


நிறைவாக, ‘சிங்கைத் தமிழ்க் காவலர்’ என்று அன்புடன் அழைக்கப்படும் முத்தழகு மெய்யப்பன் நன்றியுரை ஆற்ற, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. மேலும் அவர் தாம் அறிந்த இருபத்தொரு மொழிகளில் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்னும் தொடரால் வாழ்த்துத் தெரிவித்தது சிறப்புச் சேர்த்தது. கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் அரும்பெரும் பணிகளையும், தொண்டுகளையும் ஆற்றிப் பல விருதுகளைப்பெற்று புகழ்மாலைகளைச் சூடிக்கொண்டிருக்கும் சிங்கைத் தமிழ்ச் செம்மல் சுப திண்ணப்பனுக்கு எடுத்த இந்தப் பாராட்டு நிகழ்வு சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு என்றால் அது மிகையில்லை. தமிழ் சார்ந்த பல சிங்கப்பூர் அமைப்புகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


– தினமலர் வாசகர் கார்த்திகேயன் நடராஜன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us