சான் ஆண்டோனியோ இந்துக் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோ இந்துக் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா

ஏப்ரல் 12,2021 

Comments

 மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா'
'முருகா,,நினைத்தபோது நீ வரவேண்டும்,
நீல எழில் மயில் மேலமர் வேலா-நான்

நினைத்தபோது நீ வரவேண்டும்.'


ஹெலோடஸ் மலை மேலே அமைந்திருக்கும் சான் ஆண்டோனியோ இந்துக் கோவிலில் அழகே உருவாய் அமர்ந்திருக்கும் முருகனுக்கு பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 4 ஆம் தேதி கோலாகலமாய் கொண்டாடி மகிழ்ந்தோம். ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பாய் நடக்கும் உத்சவம் இது.
இக்கோவிலுக்கு வரப்பிரசாதமாய் கிடைத்த மிகச் சிரத்தையான அர்ச்சகர்கள் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி பட்டர் மற்றும் ஸ்ரீ இராமலிங்க சாஸ்திரி. இவர்களால் கோவில் மேலும் பொலிவு பெற்றுக்கொண்டு வருகிறது என்பதே மிகச் சிறப்பு.

இக்காலத்தின் கொரோனா சூழலுக்கு ஏற்ப தகுந்த முறைப்படி பாதுகாப்புடன் இவ்வருடமும் பால் குடங்களும்,காவடியும் என அட்டகாசமாய் நடைபெற்றது.


கோவில் மலை மேல் அமைந்திருப்பதால் மலை அடிவாரத்தில் அர்ச்சகர்கள் முருகன்,வள்ளி-தெய்வானை உற்சவ மூர்த்திகளை பூஜைகள் செய்து பின் தயாராக வைத்திருந்த பால் குடங்களை பால் குடம் எடுப்போருக்கு அளிக்க, வேறெங்கும் இல்லாத சிறப்பான 145 படிக்கட்டுக்கள் கொண்ட இம்மலை மேல், பால் குடத்துடன் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என கோஷமிட்டு கொண்டு பக்தர்கள் முருகனை தரிசிக்க, கீழிருந்து மேலே ஏறிச் செல்லும் போது நம்ம ஊரின் அனுபவத்தை, நம் மண்ணின் ஞாபகத்தை அனைவர் மனதிலும் உண்டாக்கி விட்டார் முருகப்பெருமான்!
மேலே சென்று சமத்தளத்தை அடைந்த பின் ஆண்களும் பெண்களும்,குழந்தைகளும் முருகனின் திருப்பாடல்களுக்கு பால் குடங்களுடன் கும்மி ஆடியதும் மிக அருமை!
பின்னர் அனைத்து வகை அபிஷேகங்களும்,அர்ச்சனைகளும்,சர்வ அலங்காரங்களும், தூப-தீபாராதனைகளும் என ஆறுமுகனுக்கு அமர்க்களமாய் நடந்தது. பங்குனி உத்திரத்தின் முக்கியத்துவமும், இந்நாளின் சிறப்பும் அழகாய் விளக்கியும்,பாடல்கள் பாடியும் மகிழ்ந்ததில் பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர் என்றே சொல்லலாம்.

சேர்மன் திரு.மாதவ்ராவ் கோவிந்தராஜூ மற்றும் கோவில் நிர்வாகிகளின் ஒத்துழைப்பும், சேர்மன் திரு.ராஜேந்தர் தூசு கலந்து கொண்டதும் பாராட்டுதலுக்குரியது. அனைத்து பூஜைகளும் நிறைவு பெற்ற பின், பக்தர்கள் கொண்டு வந்த விதவிதமான அறுசுவை உணவு வகைகள் அனைவருக்கும் பஞ்சாமிர்தத்துடன் பிரசாதமாக வழங்கப்பட்டது.


இத்தனை பெரும் விழா இத்தனை சிறப்பாக நடக்க ஒரு மிகப்பெரிய திட்டமிடல் வேண்டும் அல்லவா? அதனை மிகச் சரியாகச் செய்து, இவரிவர் இந்தெந்த வேலைகளை பொறுப்பாக செய்ய தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்து ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்தே தம் முழு உழைப்பையும் போட்டு பங்குனி உத்திர விழாவை கோலாகலமாக ஆக்கிய பெருமை திரு.அரவிந்தன்-திரு.நற்குணன் மற்றும் அவர்கள் குழுவிற்கே சாரும்! உளமார்ந்த சேவைகள் செய்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!
விழாவின் ஏற்பாடுகள் பற்றி அரவிந்தனிடம் பேசிய போது விழா சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் முந்திய இரு நாட்கள் தூக்கமே வரவில்லை,எங்களால் முடிந்ததை தயார் செய்து விட்டோம்,இனி நடத்திக்கொடுப்பது உன் பொறுப்பே என முருகனிடம் விட்டுவிட்டதாகச் சொன்னார். வேலவன் வேண்டியதை கொடுத்துவிட்டார் என்பதே உண்மை!
'முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!'
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us