சிங்கப்பூரில் முத்தமிழ் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் முத்தமிழ் விழா

ஏப்ரல் 18,2021 

Comments

நாற்பதாண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் – சித்திரைத் திங்களில் – 15 ஆம் ஆண்டுத் தமிழ் மொழி விழாவில் தனது 26 ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவினை ஏப்ரல் 17 ஆம் தேதி இணையம்வழி அனைவரின் இதயத்தை மகிழ்விக்குமாறு முத்திரைத் திருவிழாவாக மிகச் சிறப்பாக நடத்தியது. பரதம் – சிறார்களின் மாறு வேடப் போட்டி – மாணவ மணிகளின் பேச்சுத் திறன் வெளிப்பாடு – உள்ளூர் எழுத்தாளருக்குத் தமிழவேள் விருது – சிறப்புச் சொற்பொழிவு என தேனென இனித்த தெவிட்டாப் பல்சுவை நிகழ்வுகளைப் படைத்து அசத்தியது. எழுத்தாளர் கழகச் செயல் தலைவர் நா.ஆண்டியப்பன் எழுதிய “ உலகில் தோன்றிய முதல் மொழி “ பாடலுக்கு சிங்கப்பூர் பிரபல பாடகர் பரசு கல்யாண் - ஐயர் லட்சுமி ரவி இசையமைத்துப் பாடிய – மில்லத் அகமதின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் காணொலித் தொகுப்போடு நிகழ்வு அற்புதமாகத் துவங்கியது. சங்க இலக்கியங்கள் – வரலாறு – தமிழை உயர்த்திய தலைவர்கள் எனப் பாடலின் பின்னணி வியக்க வைத்தது. ஆடல் கலையே தேவன் தந்தது என்ற பாடலுக்கு கீர்த்தனா – ஜெகன் பாபு பரத நாட்டியம் அடுத்து இடம் பெற்று அதிர வைத்தது. விழாவில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற எழுநூறுக்கும் மேற்பட்ட மாணவ மணிகளின் தமிழார்வத்தைப் பறை சாற்றும் வண்ணம் போட்டிகளில் வெற்றி பெற்ற தொடக்கப் பள்ளி முதல் பல்கலை ஈராக அனைவருக்குமான பரிசளிப்பு விழா மற்றுமொரு பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க நிலை 5 – 6 பேச்சுப் போட்டியில் நந்திதா – கீதா லட்சுமி – நேவல் போஸ்கோ ஆகியோர் பரிசு பெற்றனர்.
தொடக்கநிலை 1 – 2 மாணவர்களுக்கான மாறு வேடப் போட்டியில் ப்ரஹர்ஷிதா மதுசூதணன் ( அம்பை வேடம் ) முதற் பரிசும் - துரியோதணன் வேடமிட்ட பஸ்டின்ராஜ் இரண்டாவது பரிசும் – திரௌபதியாக வந்த லட்சண்யா ரமேஷ் மூன்றாவது பரிசும் பெற்றனர். தொடக்க நிலை 3 – 4 மாணவர்களுக்கான கதை சொல்லும் போட்டியில் யாழினி சிவபிரகாஷ் முதற் பரிசும் – அம்ஜத்கான் அக்ஷத் இரண்டாவது பரிசும் ரமேஷ் ஆனத்னா மூன்றாவது பரிசும் பெற்றனர். பாலர் பள்ளிக்கான மாறு வேடப் போட்டியில் சங்கர்ராம் அபினவ் பாரதி முதற் பரிசும் நிகாஜ்தினி சித்தி வினாயக மூர்த்தி இரண்டாவது பரிசும் வசுனந்தா முத்துக்குமார் மூன்றாவது பரிசும் பெற்றனர்..
முத்தாய்ப்பு நிகழ்வாக இவ்வாண்டுக்கான தமிழவேள் விருது அறிவிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தளபதிகளுள் ஒருவரும் விடுதலைக் கவிஞருமான 92 வயது நிரம்பிய வை.சுதர்மன் இவ்வாண்டுக்கான தமிழவேள் விருதாளராக பலத்த கரவொலிக்கிடையே அறிவிக்கப்பட்டார். இவருக்கு முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் முஸ்தபா அளித்துள்ள நான்கு பவுண் தங்கப் பதக்கம் – பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு விருந்தினர் விக்ரம் நாயர் கவுரவித்தார்.
சொல்லுக்குச் சொல் மொழி பெயர்ப்புப் போட்டியில் விஜயா பார்கவி முதற் பரிசும் ராஜ வெங்கட்ராமன் இரண்டாவது பரிசும் சுரேஷ் அனிகா மூன்றாவது பரிசும் பெற்றனர். பத்தி மொழி பெயர்ப்பில் சபீயுல்லா முஜிபுல்லா முதற் பரிசும் – தீக்ஷனா கௌதம் இரண்டாவது பரிசும் – அன்பொர் யஷ்வத் மூன்றாவது பரிசும் பெற்றனர். உயர்நிலைப் பள்ளி 4 – 5 க்கான சிறுகதைப் போட்டியில் இளங்கோவன் – ஸ்ரீதர் கனிக்ஷா பரிசு பெற்றனர். தொடக்க கல்லூரி மாணவர்களும் பரிசு பெற்றனர். பொதுப் பிரிவுக்கான சிறுகதைப் போட்டியில் ஹேமலதா முதற் பரிசும் பிரேமா மகாலிங்கம் இரண்டாவது பரிசும் ராஜ ராஜன் தமிழ்ச் செல்வி மூன்றாம் பரிசும் பெற்றனர். கதைக் களத்தில் பங்கு பெற்றவர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது. இவர்களனைவரும் ரொக்கப் பரிசு மழையில் நனைந்தனர்.
நிறைவு அங்கமாக தமிழகத்தைச் சேர்ந்த காவல் துறை மேனாள் அதிகாரி அ.கலியமூர்த்தி “ கரையற்ற கல்வியும் வரையற்ற மொழியும் “ என்ற தலைப்பில் விஸ்வரூபத் திருக்காட்சி அளித்தார். அவரது உரையில் 1947 ஆகஸ்டு 14 நள்ளிரவில் தலைவர் ராஜாஜி வழிகாட்டுதலில் திருவாடுதுறை குருமகா சந்நிதானம் தங்க முலாம் பூசிய செங்கோலை லார்டு மௌண்ட் பேட்டனிடம் அளிக்க பண்டித ஜவஹர்லால் நேரு பெற்றுக் கொண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாறிலிருந்து இன்றைய தமிழ் மொழி நிலை வரை கருத்துக் கருவூலக் களஞ்சிய சொற்பொழிவு இடம் பெற்றது. “ கடையனுக்கும் கடைத்தேற்றம் “ என்ற டால்ஸ்டாய் – காந்தியடிகள் உரையாடல் – வார்தாவிலே ராஜாஜிக்கும் அவரது மகனுக்கும் நடந்த ஆங்கில உரையாடலைக் கண்டித்து “ யங் இந்தியாவிலே “ எழுதுவேன் என காந்தியடிகளின் எச்சரித்தது – 1948 செப்டம்பர் 14 – இல் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழ் மொழியேஇடம் பெற காயிதே மில்லத் பண்டித நேருவிடம் உரைத்தது – கால்டு வெல் – ஜி.யூ.போப் – அண்ணல் வினோபா – முதலியோர் மட்டுமல்ல சங்க இலக்கியங்கள் நடமாடின. கல்வியின் இன்றியமையாமை மற்றும் தாயின் பெருமை கூறி நிறைவு செய்த அவர்தம் உரை வரலாற்றுச் சிறப்புடையதாய் அமைந்தது. விழாவிற்கு செம்பவாங் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினரும் கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவருமான விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
முன்னதாக அண்மையில் மறைந்த சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சுப.அருணாசலம் மற்றும் நகைச் சுவை நடிகர் விவேக் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக செயலாளர் கிருத்திகா வரவேற்புரை ஆற்றினார். தலைமை உரை ஆற்றிய நா.ஆண்டியப்பன் சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் பயன்பாடுகளில் தமிழ் மொழிப் பொத்தானைப் பயன்படுத்த வேண்டுகோள் விடுத்தார். சரவணன் சண்முகம் நிகழ்வினை நெறிப்படுத்தினார். கவிஞர் கோ.இளங்கோவன் நன்றி நவில விழா இனிதே நிறைவு பெற்றது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us