சிங்கப்பூரில் பாவேந்தர் 131 சுழலும் சொற்போர் – இலக்கிய விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் பாவேந்தர் 131 சுழலும் சொற்போர் – இலக்கிய விழா

ஏப்ரல் 19,2021 

Comments

சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வானில் “ சுழலும் சொற்போர் “ எனும் புதிய உத்தியைக் கையாண்டு இதற்கெனத் தனிச் சுவைஞர்களையே உருவாக்கிச் சிறப்பித்து வரும் தமிழ் இலக்கியக் களம் பதினான்காவது முறையாக பாவேந்தர் பாரதிதாசனார் விழாவை – தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக ஏப்ரல் 18 ஆம் தேதி இணையவழி மிகச் சிறப்பாக நடத்தியது. செல்வி சுருதிலயா அழகுசுந்தரம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்வு தொடங்கியது. “ தமிழுக்கு அமுதென்று பேர் “ என்ற பாவேந்தரின் பாடலுக்கு செல்வி அசுதாவின் பரதம் அடுத்த அங்கமாக இடம் பெற்று சுவை கூட்டியது. பட்டிமன்றப் பேச்சாளரும் வைணவ பக்தி இலக்கியத்தில் புலமை மிக்கவருமான கண்ணன் சேஷாத்திரி - கனக சுப்புரத்தினம் பாரதிதாசனாக உருவெடுத்த வரலாற்றைத் தமக்கே உரிய பாணியில் வைஷ்ணவ சம்பிரதாய “ தாசானு தாச “ மரபினைப் பிரதிபலிக்குமாறு எடுத்துரைத்து எழிலுரை ஆற்றியது அனைவரையும் கவர்ந்தது. தமிழ் இலக்கியக் களத் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் நோக்க உரை ஆற்றுகையில் உவமைக் கவிஞர் சுரதாவின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வண்ணம் அவர் பெரிதும் முக்கியத்துவம் தந்த பாடல்களைப் பற்றி “ சுழலும் சொற்போர் “ நிகழ்வு ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினார்.
தமிழகத்தைச் சேர்ந்த காந்திகிராமப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஓ.முத்தையா சொற்போர் நெறியாளுநராகச் செயல்பட்டார். கவிஞர் சுரதா பெரிதும் முக்கியத்துவம் தந்து பாடியது தாய்மொழிச் சிந்தனையே என திருவாட்டி கலைச்செல்வி வைத்தியநாதன் வாதிட்டார். “ இல்லை ...இல்லை பகுத்தறிவுச் சிந்தனையே “ என கவிஞர் இறை மதியழகன் எதிர் வாதிட்டார். இவை இரண்டுமல்ல அவர்தம் பாடல்களில் திரைத்துறைப் பங்களிப்பே முக்கியத்துவம் பெற்றிருந்தது என இராம்குமார் சந்தானம் தமது வாதத்தை சமர்ப்பித்தார். மூவரும் அவரவர் வாதங்களை எடுத்துரைத்த பின்னர் சுழலும் சொற்போர் மரபுப்படி பேச்சாளர்கள் வினாக்கள் தொடுக்க சொற்போர் சூடு பிடிக்கத் தொடங்கியது. அனல் பறந்த வாத – பிரதி வாதங்களிடையே நெறியாளுநர் பல வரலாற்று நிகழ்வுகளைக் கூறிக் கலகலப்பை ஏற்படுத்தினார். மூவரின் வாதமும் நெறியாளுநரின் செய்திகளும் பார்வையாளர்கட்குப் பெரு விருந்தாக அமைந்தது. நிறைவாக நெறியாளுநர் முத்தையா மூவரின் வாதங்களும் சிறப்பாக இருந்தன – எனினும் கவிப்பேராசான் சுரதா பெரிதும் முக்கியத்துவம் தந்ததில் விஞ்சி நிற்பது தாய் மொழிக்கே எனத் தீர்ப்பளித்தார்.
நிகழ்விற்கு ஜோஸ்கோ பயண முகவாண்மை நிர்வாக இயக்குநர் போப்ராஜ் ( எ ) நாகை தங்கராஜ் தலைமை ஏற்றார். சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவர் இரா.தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கவுரவித்தார். தமிழ்மகன் கண்ணன் இணைப்புரை ஆற்றினார். ஆண்டுதோறும் அமைப்பின் சார்பில் பாவேந்தர் விருது வழங்கி கவுரவிப்பது வழமை எனினும் இன்றைய சூழல் கருதி இந்நிகழ்வு மேத் திங்களில் தனி விழாவாக நடத்தப்படும் என முனைவர் இரத்தின வேங்கடேசன் தமது நோக்கவுரையில் அறிவித்தார். முன்னதாக அண்மையில் காலமான சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சுப.அருணாசலம் – சின்னக்கலைவாணர் விவேக் ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சித்ரா மெய்யப்பன் நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us