ஹூஸ்டனில் அன்னையர் தின கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹூஸ்டனில் அன்னையர் தின கொண்டாட்டம்

மே 05,2021 

Comments

1974 ஆம் ஆண்டு அமெரிக்காவில், பால்டிமோர் நகரில் விழுந்த விதையொன்று விருட்சமாய் வளர்ந்து 26 நகரங்களில் கிளை பரப்பி மனிதநேயம் வளர்க்கும் ஆலமரமாய் திளைத்து நிற்கிறது. அதன் பெயர் தான்.’தமிழ்நாடு அறக்கட்டளை”. வசதி குறைந்த குழந்தைகளின் கல்வி மேம்பாடு, பெண்களின் முன்னேற்றம் என பல்வேறு சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களை செய்து வரும் இந்நிறுவனத்தின் ஹூஸ்டன் மாநகரக் கிளை ஆண்டுதோறும் அன்னையர் தின விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றது. இந்த ஆண்டும், அதன் தொடர்ச்சியாக, ஹூஸ்டன் கிளைத் தலைவர். திருமதி.மாலா கோபால் மிக விமரிசையாக கொண்டாட திட்டமிட்டிருந்தார். அவரின் சீரிய தலைமையில் மே மாதம் 2 ஆம் தேதி சனிக்கிழமையன்று, ஹூஸ்டன் மீனாட்சி கோயில் வளாகத்தில்,” அன்னையர் தின ஆரவாரம் “ என்ற பெயரில் இயல்,இசை, நாடகம் என்ற முத்தமிழ் விழாவாக பரிமளித்தது.
கதை மற்றும் கவிதைப் போட்டிகளுக்கு நடுவராக, திருச்செங்கோடு விவேகானந்தர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர்(தமிழ் உயராய்வுத்துறை) முனைவர். கவிதா ராஜசேகர் கலந்து கொண்டு கதை மற்றும் கவிதைகளை ஆய்ந்து வரிசைப்படுத்தி பரிசுகளை அறிவித்தார். இந்த போட்டிகளில் பலர் உற்சாகமாய் கலந்து கொண்டு, பரிசுகள் பெற்றனர். நடுவராக கலந்து கொண்ட முனைவர். கவிதா ராஜசேகர் படைப்புகளின் சிறந்த வரிகளையும் சிறப்பு அம்சங்களையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டது, படைப்பாளிகளுக்கு உற்சாகத்தையும், அவருக்கு இலக்கியத்தின் பால் உள்ள ஈர்ப்பையும் வெளிப்படுத்தியது. அடுத்த நிகழ்வாக களை கட்டியது, “திருக்குறள் திருவிளையாடல்”. அறம் மற்றும் பொருள் என்று இரு அணிகள் மோதினர். நிகழ்ச்சியை நடத்திய தமிழ் செம்மல்”குறள் இனிது” சோம.வீரப்பன் மிகவும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் நடத்திச் சென்றது அனைவரையும் கவர்ந்தது. அவருக்கு உடன் இணைந்து ஒருங்கிணைத்த நடராஜன் கிருஷ்ணனின் பங்களிப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
இளைஞர்களையும் பெரியோர்களையும் இப்போது வசப்படுத்தி வரும் குறும்படங்கள் பற்றிய குறும்சொற்பொழிவொன்றை அளித்தார் “காளிதாஸ்” தமிழ் திரைப்பட இயக்குனர் ஸ்ரீ செந்தில், அவர் குறும்படப் போட்டியில் முதல் பரிசை வென்றவர் என்பது அவரின் பேச்சின் ஆழத்தில் அறிய முடிந்தது. செவிக்குணவில்லாத சில நிமிடங்கள் வயிற்றுக்கு ஈய சற்று மதிய இடைவேளை தரப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிரடியாக வந்த அணிகளைக் கண்டு அனைவரும் அசந்தே தான் போனோம் எனலாம். ‘சும்மா அதிருதுல்ல ‘ என்று வந்த பேச்சாளர்கள் நம் உயர்நிலைப்பள்ளிப் பட்டதாரிகள். “தாய் சொல்லைத் தட்டாதே” என்ற தலைப்பில் விவாத விளையாட்டிற்கு குமரன் சிவப்பிரகாசம் தலைமையில் மேடையில் குழுமினர். தத்தம் தாய்மார்களின் கனவுகளை, ஆசைகளை கலாய்ப்புடன் கலகலப்பாய் பகிர்ந்து கொண்ட அதே நேரம், அவர்களுடன் தங்களுக்கு உள்ள அந்நியோன்யமான அன்பையும், அன்னையரின் கண்டிப்பு கசந்தாலும் கடைசியில் எப்படி தங்களுக்கு பயனுள்ளவையாக அவை அமைந்தன என்று ஆழமாக உணர்ந்து சொன்னதும் இந்நிகழ்வின் அருமையான நொடிகள் என்று தான் கூற வேண்டும்.
நம் குழந்தைகள் நகைச்சுவையோடு விவாதித்து அதே நேரம் தம் பெற்றோரின் பங்களிப்பையும் உணர்ந்து மனப்பக்குவத்தோடு பேசுவதை கேட்கும் போது, சான்றோன் எனக் கேட்டு பெரிதுவக்கும் தாயாக பலர் அரங்கில் இருப்பதை காண முடிந்தது. இளையோர்கள் பேசிய அழகுத் தமிழும், சரளமும் அனைத்துத் தமிழாசிரிய சமூகத்தை ஆனந்தத்தில் ஆழ்த்தி விட்டது. இநிகழ்வில் தொடர்ந்து, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும், Applied Research of the Texas Center for Superconductivity at the University of Houston என்ற டெக்சாஸ் ஆய்வு மையத்தின் இயக்குனருமான டாக்டர். வெங்கட் செல்வமாணிக்கம் ஊக்கம் மிகுந்த உரையினைத் தந்து சிறப்பித்தார். அவருடைய உரையில், இளையர்கள் தங்கள் குறிக்கோள் நோக்கிய விடாமுயற்சியை வலியுறுத்தியும், தமிழ்நாடு அறக்கட்டளை சமூகத்தொண்டோடு தமிழ் மொழி சேவையையும் செய்வதை பாராட்டியும் பேசி நிறைவு செய்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன், தமிழ்நாடு அறக்கட்டளை, 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருக்குறள் மனபாடப் போட்டியினை நடத்தியிருந்தது. இன்றைய நிகழ்வில், அப்போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. அனைத்து சமூக, உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளின் தகவல்களை குறிப்பிட்ட காலத்தில் சரியான முறையில் வழங்கி வரும், இந்தியா ஹெரால்டின் ஆசிரியர் சேஷாத்ரி குமாரை, மீனாட்சி கோயில் சங்கம், பாரதி கலை மன்றம் மற்றும் தமிழ்நாடு அறக்கட்டளை அனைத்தும் இணைந்து அவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் பாராட்டி கௌரவப்படுத்தினர். நிறைவுப் பகுதியாக வந்து நம்மையெல்லாம் இசைமழையில் நனையச் செய்தனர், 13 முதல் 25 வயதிற்குட்பட்ட சிறார்கள் மற்றும் இளையர்கள். அனைத்து பங்கேற்பாளர்களும் தத்தம் திறமைகளில் நம்மைத் திக்குமுக்காட வைத்தனர் .
அதிலும் குறிப்பாக, அபினவ் வெங்கட்ராமனின் உணர்வுபூர்வமான உள்ளத்தை உருக்கியப் பாடலும் குரலும் அனைவரையும் இருக்கைகளை விட்டு எழுந்து நின்று கைகளை தட்ட வைத்துவிட்டது. தமிழ்நாடு அறக்கட்டளை- ஹூஸ்டன் கிளையைச் சேர்ந்த டாக்டர் நளினி பாலச்சந்திரன் மற்றும் திருமதி. புனிதா தங்கராஜ் நன்றி நவில விழா இனிதே நடந்தேறியது. இப்போதைய பெருந்தொற்றுக் காலகட்டத்தில், கீழே குறிப்பிட்டோரின் பக்கத்துணை இல்லாமல் இந்நிகழ்வினை இவ்வாறு சிறப்பாக நடத்துவதற்கு சாத்தியமே இருந்திருக்காது. மீனாட்சி கோயில் நிர்வாகக்குழுவினைச் சேர்ந்த கண்ணன் மற்றும் டாக்டர். வடுகநாதன், பாரதி கலை மன்றத் தலைவர் கோவிந்தன் ஆகியோருக்கும், விழா சிறக்க பங்கெடுத்த பங்கேற்பாளர்களுக்கும், நிதியுதவி செய்த நிறுவனங்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் இருகரம் கூப்பி மனமார்ந்த நன்றியினை கூறி வணங்குகிறது தமிழ்நாடு அறக்கட்டளை. இந்நேரத்தில் சிறப்பு குறிப்பாக, ஊடக உதவி செய்த ரிஃப்ளெக்ஷன் மீடியாவின் உரிமையாளர் காலித் டலிசனுக்கு நன்றியை உரித்தாக்குகிறது. கொரோனா என்ற கொடியத் தொற்றின் கைகளில் சிக்கி மீண்டும் அல்லல்படும் நம் இந்திய உறவினர், விரைவில் விடுபட்டு நல்வாழ்வு பெற வேண்டும் என்ற மனமுருகும் பிரார்த்தனைகளில் தமிழ்நாடு அறக்கட்டளையும் கை கோர்த்து நலம் வேண்டி நிற்கின்றது விரைவில் விடியல் தெரியும் என்ற நம்பிக்கையோடு.
– தினமலர் வாசகர் தியாகராஜன் பேச்சியப்பன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us