உலகளாவிய இளந்தமிழர் குழுவும் தென்புலத்தார் தொல்லியல் குழுவும் இணைந்து கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு நடத்தும் மூன்று நாள் பயிலரங்கம் என்று ஏற்பாடு செய்யப்பட்டது நான்கு நாட்கள் பயிலரங்கம் ஆக மாறியது.
திரும்பிய பக்கமெல்லாம் தொல்லியல் தரவுகள் விரவிக்கிடக்கும், மலிந்திருக்கும் தமிழகத்தில் அகழ்வாய்வு மற்றும் அதைச் சார்ந்த துறையினரும் மிகக் குறைந்த அளவே உள்ளனர். அதனால் தமிழரின் தொன்மையை ஆய்வு செய்யும் பணியை மேற்கொள்ள பல தன்னார்வலர்களை உருவாக்கும் முயற்சியில் இந்தப் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நான்கு நாட்களும் பல நாடுகளை சேர்ந்த 90க்கும் மேற்பட்ட அகழாய்வில் விருப்பம் கொண்டவர்கள் கலந்து கொண்டனர். ஒரிசா பாலு ஐயா அவர்கள் தன்னுடைய அனுபவத்தை, தான் செய்யும் ஆய்வுகளைப் பற்றி கூறிய, அதே நேரத்தில் அவரது உதவியுடன் ஆய்வுகளைச் செய்யும் பலரும் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது இந்த பயிலரங்கின் சிறப்பம்சமாகும்.
அகழாய்வு மற்றும் அதன் தொடர்பான பல துறைகளைப் பற்றிய அறிமுகம் கொடுக்கப்படும் என்று தொடங்கிய பயிலரங்கில், முதன்முதலாக பேராசிரியை ரேணுகா தேவி அவர்கள் மொழியியல் ஆய்வு பற்றி மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறினார். அகழாய்வு துறையில் மொழியியலும் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து கொள்ள அது அடிகோலியது.
அடுத்து பல நாடுகளில் ஒரிசா பாலு அவர்களின் ஆலோசனைகளின் பேரில் ஆய்வு செய்து வரும் பலரும் தங்களது ஆய்வைப் பற்றி பகிர்ந்து கொண்டனர். அதில் தான்சானியா நாட்டில் இருந்து நாச்சியார் என்பவர் ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கும் தமிழுக்கும் ஆன தொடர்பை பற்றி எடுத்துரைத்து, அங்கு சிவலிங்கம் இருக்கும் குகையை பற்றியும் அவர்கள் பயன்படுத்தும் கருப்பு சிவப்பு பானைகளை பற்றியும் எடுத்து கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இளந்தமிழர் குழுவின் தலைவராக ஒருங்கிணைப்பாளராக இருக்கும் டார்வின் கண்ணா அவர்கள் தைவான் நாட்டில் இருக்கும் காவலன் என்ற பழங்குடியினரை பற்றிய ஆய்வினை பகிர்ந்துகொண்டார். காவலன் மக்களும் தமிழ் மக்களும் எப்படி பண்பாட்டு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை எடுத்துக் கூறினார்.
பின்னர் செஷல்ஸ் நாட்டில் இருந்து அலெக்ஸ் என்பவரும், லாவோஸ் நாட்டில் இருந்து சந்திரமோகன் என்பவரும், அயர்லாந்து நாட்டில் இருந்து லோகேஸ் என்பவரும் அமீரகத்திலிருந்து மோகன் பிரபு என்பவரும் தங்கள் நாட்டில் இருக்கும் தமிழ் பண்பாட்டு ஒப்புமைகள் பற்றியும் எடுத்துக் கூறினர். அமெரிக்காவிலிருந்து டி கே வி ராஜன் என்பவர் தான் கற்கும்போது அகழாய்வு துறையில் காஞ்சிபுரத்தில் செய்த ஆய்வைப் பற்றி எடுத்துக் கூறியது நம் தமிழகத்தில் அகழாய்வு எவ்விதம் நடக்கின்றது என்பதை அறிய உதவியது.
சாருமதி, இசையில் எப்படி உலக நாடுகளில் தமிழர் பண்பாட்டுக் கூறுகள் உள்ளன என்பதை விளக்கியதும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அத்துடன் 9 மொழிகளில் பாடக்கூடிய மற்றும் தொல்லிசை பற்றி கருவிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் சாருமதி அவர்கள் ஆப்பிரிக்க மொழியான சுவாகிலி மொழியில் ஒரு பாடலை மொழி பெயர்த்து சுவாகிலி மற்றும் தமிழ் மொழியில் பாடிக் காட்டியதும் நம் தமிழர் பண்பாடு எந்த வகையில் உள்ளது என்பதை புரிய வைத்தது. ஹாங்காங்கில் வாழும் முனைவர் சித்ரா, தன்னுடைய தமிழ் கொரிய தொடர்புகள் மற்றும் தமிழ் சுமேரிய தொடர்புகள் பற்றிய ஆய்வினை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
இரண்டாம் நாள் பயிலரங்கத்தில் மேலும் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தவர்களுக்கு, பல விஷயங்கள் பகிரப்பட்டன. பேராசிரியை ரேணுகா தேவி அவர்கள் காணக் கிடைத்த செப்பேடுகள் என்ற தலைப்பில் செப்பேடுகள் பற்றிய பல கருத்துக்களை எடுத்துக் கூறினார். குமரிக்கண்டம் ஆய்வை அரசு எடுத்துச் செய்ய வேண்டும் என்று வழக்கை பதிவு செய்த திரு நாராயண மூர்த்தி அவர்கள் தன்னுடைய அனுபவங்களையும் தான் ஆய்வுசெய்த கிளியனூர் கோலியுத்து பாறை ஓவியங்களைப் பற்றியும் அதில் வரையப்பட்டிருந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்த கொமோடோ என்ற விலங்கை பற்றியும் எடுத்துக் கூறினார். மீண்டும் சாருமதி அவர்கள், தன்னுடைய அகழாய்வு அனுபவத்தையும் தமிழின் தொல் வடிவங்களான தமிழி மற்றும் வட்டெழுத்து பற்றியும் எடுத்துக் கூறினார். இளம் தமிழர் குழுவைச் சேர்ந்த லோஷன் ஆஸ்திரேலியாவில் தான் பெற்ற தமிழ் கல்வி பற்றியும் அதில் பெற்ற சிறப்பு இடத்தைப் பற்றியும் எடுத்துக் கூறினார். மீனாக்ஷி தொல் எச்சங்களை பற்றிய தன்னுடைய ஆய்வு அனுபவங்களை பற்றியும் எடுத்துக் கூறினார்.
மேலும் ஹாங்காங்கில் இருந்து முனைவர் சித்ரா அவர்கள், குறியீடு, நாயக்கர்கள், சடங்குகள், பழக்கவழக்கங்கள் இவை நான்கின் ஊடே இழையோடிக் செல்லும் மதிப்புகளை கூறும் வெங்காய கோட்பாடு மூலமாக, எப்படி பண்பாட்டு ஒப்புமைகள் செய்வது என்பதை எடுத்துக் கூறினார்.
மூன்றாம் நாள் கருத்தரங்கில் மீண்டும் பேராசிரியை ரேணுகா தேவி, மொழி ஆய்வுகளைப் பற்றி மேலும் பல கருத்துக்களை எடுத்துக் கூறினார். தொல் இசையில் ஆய்வுகளை செய்து வரும் லியோன் அவர்கள் ஆஸ்திரேலியா பழங்குடியினரின் டிஜிடரிடு என்ற நீண்ட குழல் கருவி பற்றியும் மகுடியைப் பற்றியும் கூறி, வாசித்து, அதில் அவர் செய்த ஆய்வுகளை பற்றியும் மிகவும் அழகாக எடுத்துக் கூறினார். பங்கு கொண்டவர்களின் விருப்பத்தின் பேரில், மூன்று நாள் பயிலரங்கம், நான்காம் நாளும் தொடர்ந்தது. இதில் இளந்தமிழர் குழுவைச் சார்ந்த அபிஷேக், பொன்னிவளவன், சர்வேஷ், ரக்ஷிதா, சவுண்ட் மணி ஆகியோர் தாங்கள் செய்து வரும் ஆய்வுகளைப் பற்றி எடுத்துக் கூறியது இன்றைய இளைஞர் மத்தியில் தமிழரின் தொன்மையை அறியும் ஆர்வத்தை எடுத்துக் காட்டியது.
அகழாய்வு துறையில் பட்டங்களை பெற்ற அக்ஷரா என்பவர் பலவகையான அகழாய்வுகள் பற்றியும் ஆய்வுகள் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றியும் மிகவும் விளக்கமாக எடுத்துக் கூறினார். யாழினை மீட்டுருவாக்கம் செய்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையைச் சார்ந்த தருண் அவர்கள் தன்னுடைய அனுபவத்தை எடுத்துக் கூறினார்.
ஒரிசா பாலு ஐயாவுடன் இணைந்து பல ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் சுற்றுப்புற சூழல் இயலில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ள சுடலை அவர்கள், மரக்காணம் ஊரில் ஆமைகள் பற்றியும் இறால் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ள சர்வேஷ் குமார் அவர்கள், ஊட்டி மலைக்காடுகளில் இருக்கும் பழங்குடியினரை பற்றி ஆய்வுகளைச் செய்யும் மதிமாறன் அவர்கள் தாங்கள் செய்த ஆய்வுகளைப் பற்றி எடுத்துக் கூறினர். பங்கேற்றவர்கள் தாங்கள் வாழும் இடங்களில் தாங்கள் கண்ட பொருட்களைப் பற்றி எடுத்துக் கூறியது தமிழகத்தின் தொடர்புகள் எப்படி பிற மாநிலங்களில் இருக்கின்றது என்பதை அறிய உதவியது. இது இனி வரும் காலங்களில் ஒருவர் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட வழி வகுத்துள்ளது.
நான்கு நாட்களிலும் இந்தப் பயில் அரங்கத்தை இளந்தமிழர் குழுவைச் சேர்ந்த டார்வின் கண்ணாவும் பவித்ரா என்பவரும் சிறப்பாக நெறியாள்கை செய்து கொடுத்தனர். தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் நடத்தும் அகழ்வாய்வு மற்றும் கல்வெட்டியல் பட்டயப் படிப்பை கற்கும் மாணவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்தப் பயிலரங்கத்தில் பங்குகொண்ட அனைவரது ஆர்வத்தையும் நன்றாக காண முடிந்தது. அடுத்த வாரமும் இந்தப் பயிலரங்கம் தொடர உள்ளது.
இளந்தமிழர் குழுவினர் தமிழகத்தின் அகழாய்வு இடங்களைக் கொண்ட தமிழர் பண்பாட்டு வரைபடம் ஒன்றை தயாரித்து வருவதை பற்றி எடுத்துக் கூறினர். மேலும், தமிழரின் தொன்மை கொண்ட பல தகவல்களையும் காணொளிகளையும் கொண்ட தமிழ் பண்பாட்டு பெட்டகம் தயாரிக்கும் திட்டத்தை பற்றியும் கூறி அதற்கு ஆய்வாளர்களை தங்கள் ஆய்வு பற்றிய விவரங்களை பின்னர் தருமாறும் கேட்டுக் கொண்டனர்.
– நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.