சிந்துவெளி எழுத்தாய்வாளர், முன்னாள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்துறையின் இயக்குநர், குமரிக்கண்டம் (1981) ஆவணப்படத்தின் திரைக்கதை ஆசிரியர், என்ற பன்முகம் கொண்ட பேரா. இரா. மதிவாணனின் 86- ஆவது பிறந்தநாள் விழா 01.07.2021 வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு இணைய வழியில், சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவினை உலகளாவிய இளந்தமிழர் குழு, ஐயை மற்றும் தென்புலத்தார் குழுக்களும் இணைந்து ஏற்பாடு செய்து, மதிவாணன் ஐயாவிற்கு குழுவினர்கள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டனர். அய்யாவின் குடும்பத்தினரும் பேரன் பேத்திகளும் உடனிருந்து அவரை வாழ்த்தினார்கள்.
ஐயா நிகழ்ச்சியின்போது தான் செய்த பணிகளை கருத்துரையாக வழங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்று சொல்லவேண்டும். சிந்துவெளி நாகரீகத்தின் எழுத்துக்களை எப்படி படிப்பது என்பதை கண்டறிந்து, அதோடல்லாமல் பல்கலைக்கழகத்தில் பலருக்கும் அவற்றை படிக்க கற்றுக் கொடுத்ததை பற்றி எடுத்துரைத்தார். பின்னர் குமரிக்கண்டம் என்ற ஆவணப் படத்தை எடுக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களையும் தெரிவித்தார். கிரேக்க மொழி நாடகத்தில் எப்படி தமிழ் வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன என்பதையும் எடுத்து கூறினார். தன்னுடைய தெலுங்கு மற்றும் கன்னட மொழி பெயர்ப்பு பணிகளைப் பற்றியும் எடுத்துச் சொன்னார். சாணக்கியன் பற்றிய ஒரு சம்பவத்தை கூறி அந்த வம்சத்தினரை மௌரியர்கள் ஒரு மூதாட்டியின் அறிவுரைகளை கொண்டு வென்றதை பற்றி அழகாக, கதையாகச் சொல்லி கூடியிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஒரு அகராதியை செய்ய தொடங்கிய பாவாணர் பற்றி கூறியபின் அதன் தொடர்ச்சியாக 29 அகராதிகளை தான் செய்த அனுபவத்தை எடுத்துக் கூறியதும் சிறப்போ சிறப்பு.
இந்த நிகழ்ச்சியை முன்நின்று நடத்த ஏற்பாடு செய்ததோடு அல்லாமல், ஒரிசா பாலு ஐயா அவர்கள் நிகழ்ச்சியை செவ்வனே ஒருங்கிணைத்து மதிவாணன் ஐயாவிடம் இருந்து தான் கற்ற விடயங்களை எடுத்துக் கூறி அவருக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் இந்தியா மட்டுமல்லாமல் பல நாட்டு ஆய்வறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு ஐயாவிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
அகராதிகளை மின் மயமாக்கும் பணியில் ஆர்வலராக இருக்கும் நார்வேயை சேர்ந்த இங்கர்சால் அவர்கள் ஐயாவின் அகராதி பணியை பாராட்டி நன்றியை தெரிவித்துக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
வலைத்தமிழ் பிரவீனா அவர்கள் அமெரிக்காவிலிருந்து ஐயாவைப் பற்றி அழகிய ஒரு கவிதையை படித்து தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவிலிருந்து பாகேஸ்வரி அவர்களும் ஜப்பானிலிருந்து சதீஷ் அவர்களும் ஆப்பிரிக்காவிலிருந்து அமுதா என்னும் நாச்சியார் அவர்களும் ஹாங்காங்கில் இருந்து சித்ரா அவர்களும் ஐயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
தமிழகத்தின் பேராசிரியர்கள் அரங்க மல்லிகா அம்மையாரும், கலைச்செல்வி அம்மையாரும், ரேணுகாதேவி அம்மையாரும், குழந்தை சுவாமி ஐயா அவர்களும், கலைச்செல்வன் ஐயா அவர்களும், தங்கள் வாழ்த்துக்களை மனமார தெரிவித்துக் கொண்டனர்.
- நமது செய்தியாளர் சித்ரா
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.