பத்மஸ்ரீ முனைவர் ஸ்ரீதர் வேம்பு உடன் இணையவழியில் சந்திப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பத்மஸ்ரீ முனைவர் ஸ்ரீதர் வேம்பு உடன் இணையவழியில் சந்திப்பு

ஆகஸ்ட் 30,2021 

Comments

 பாரதத்தின் பெருமை குழு உறுப்பினர்கள் அறிஞர்களுடன் சந்திப்பு என்ற மூன்றாவது நிகழ்வை ஞாயிறு ஆகஸ்ட் இருபத்தி ஒன்பதாம் தேதி இணையவழியில் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற சோஹோ இணைய நிறுவனத்தின் நிறுவனரான முனைவர் ஸ்ரீதர் வேம்பு உடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அவர் தமிழகத்தின் கிராமங்களின் நிலையை அறிந்தவர். இந்தியாவின் தலைசிறந்த கல்விக் கூடமாக விளங்கும் ஐஐடி சென்னையில் படித்து அமெரிக்காவில் சிறந்து விளங்கும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இருபத்தி ஐந்து ஆண்டு காலமாக சோகோ நிறுவனத்தை நிறுவி நம் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர். பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் யூடியூபிலும் முகநூலிலும் கலந்துகொண்டு அவரது ஊக்கப்படுத்தும் உரையினை கேட்டு பயன்பெற்றனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிங்கப்பூரிலிருந்து சுவாமிநாதன் இறை வணக்கப் பாடலை பாடினார். அடுத்து மலேசியாவில் இருந்து சித்தார்த்தன் பிரகாஷ் ஒரு திருக்குறளை கூறி அதன் பொருளையும் எடுத்துரைத்தார். அதற்கு அடுத்து நாசிக்கில் சேர்ந்த விவேக் சஞ்சய் பாட்டில் கபீர்தாசர் இரண்டு வரிகள் பாடலை விளக்கத்துடன் கூறினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக முனைவர் ஸ்ரீதர் வேம்புவை ஹாங்காங்கை சேர்ந்த ஹர்ஷிதா முகுந்தன் அறிமுகப்படுத்தினார்.

முனைவர் ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய உரையில், தான் எப்படி அமெரிக்காவில் பணி புரிந்த போது இந்தியாவின் ஏழ்மை நிலையை கண்டு, கிராமங்களில் வாழும் மக்களின் நிலையை உயர்த்த தென்காசி என்ற ஊரில் தன்னுடைய நிறுவனத்தை நிறுவி யதைப்பற்றி கூறி, அவர் அங்கு தன்னுடைய பணியாளர்களை எப்படி தேர்வு செய்தார் என்பதையும் கூறினார். பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழி பாடத்தை படித்தவர். கணிதத்திலும் அறிவியலிலும் இருந்த ஆர்வம் அவரை முனைவர் பட்டம் வரை எடுத்துச் சென்று ஒரு பேராசிரியராகவும் அல்லது ஆய்வாளராகவும் ஆவதற்கான சூழ்நிலை இருந்தாலும் தொழில் ஆரம்பிப்பதில் எந்தவித திறனும் இல்லாமல் ஒரு தொழில் நிறுவனத்தை தான் தொடங்கியதை பற்றியும் எடுத்துக் கூறினார்.

தான் ஒரு தொழில் அதிபராக ஆனதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதும் பட்டி தொட்டிகளில் வாழும் மக்களின் ஊதிய நிலையை உயர்த்துவதும் தான். தன்னுடைய உரையில் எப்படி ஒரு அடிப்படை பொருட்களை நாம் சிறப்பாக செய்து உலகச் சந்தையில் பெயர் பெறும்படி செய்ய முடியும் என்பதை ஒரு கத்தரிக்கோல் ஒரு கத்தியையும் எடுத்துக்காட்டாகச் சொல்லி விளக்கினார். தொழில்நுட்பத்தில் ஒரு காலத்தில் சிறப்பாக இருந்த இந்தியா ஏன் பின்னடைவை கண்டிருக்கிறது என்பதை ஒரு உதாரணத்துடன் எடுத்துக் கூறினார்.

இந்தியாவில் செய்யப்படும் எந்த பொருட்கள் ஆனாலும் அதை செய்ய பயன்படுத்தும் எந்திரம் வெளிநாடுகளிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. அந்த எந்திரம் காலப்போக்கில் காலாவதி ஆன பின்பு அந்த தொழிற்சாலை மூடப்பட்டு விடுகிறது. அதற்கு முக்கிய காரணம் அந்த எந்திரங்களை பற்றிய அறிவும் அதை மேம்படுத்தப்பட வேண்டிய அறிவும் நம்மிடம் குறைவாக இருப்பதே காரணம். அதனால் இத்தகைய எந்திரங்களை நாமே செய்து அதை மேம்படுத்தவும் முயற்சி எடுத்துக் கொண்டால் நம்மாலும் உலகச் சந்தையில் சிறப்பான பொருட்களை தரமுடியும் என்பதை எடுத்துக் கூறினார்.

நாம் உலக அரங்கில் இந்தியாவை முன்னிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் எடுத்துக் கூறினார். வெறும் பள்ளிக் கல்வி மட்டுமே போதாது. வெறும் மதிப்பெண்கள் போதாது. நம் மக்கள் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்ய தேவைப்படும் எந்திரங்களை நாமே செய்து, அதை இயக்கும் அறிவை பெறுவது முக்கியம். அதை ஒரு சிறு பொருளிலிருந்து கூட ஆரம்பிக்கலாம். இன்றைய இளைய தலைமுறையினர் இணையதளத்தில்செலவிடும் நேரத்தை ஏதோ ஒரு பொருளை செய்து செலவிட்டால், அது அவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் நாட்டிற்கும் அது பயனுள்ளதாக இருக்கும் என்பதை திறம்பட எடுத்துக் கூறினார். நாம் நமக்குத் தேவையான பொருட்களை நாமே செய்து கொள்ளும் அறிவை கல்வியை பெறவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொள்ளவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

அவருடைய பேச்சுக்கு பிறகு ஒரு மணி நேரம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தார் இந்த கேள்வி பதில் பகுதியை கல்லூரி மாணவி அகங்க்ஷா வராடே சிறப்புடன் நடத்தினார். நிகழ்ச்சியை சென்னையைச் சேர்ந்த சரண்யா சிறப்பாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் பாரதத்தின் பெருமை குழுவை நிறுவி, ஆலோசகராக இருக்கும் ரவிக்குமார், நிகழ்ச்சி பற்றியும், நம் நாட்டு விஞ்ஞானிகளின் செயல்பாட்டு திறனை பற்றியும் அதை நாம் எப்படி மேல் எடுத்துச் செல்வது பற்றியும் உரை நிகழ்த்தினார். ஸ்ரீதர் வேம்பு ஐயாவை முன்னுதாரணமாகக் கொண்டு மாணவர்கள் செயலாற்ற வேண்டும் என்றும் மிகக் குறைந்த செலவில் இணையதளம் இந்தியாவில் இருப்பதை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அறிவுரையையும் தந்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் லண்டன் நகரிலிருந்து அக்ஷத் ஜெகன்நாதன் அவர்கள் நன்றியுரையை கூறினார். இறுதியாக தாராப்பூரில் இருந்து தேவிகா நாயர் வந்தே மாதரம் பாடலைப் பாடி நிகழ்வு இனிதே முடிவுற்றது. இந்த நிகழ்ச்சியை இனிதே ஏற்பாடு செய்து நடத்திக் காட்டிய முரளி சுப்பிரமணியம் மற்றும் அவரது குழுவினருக்கு அனைவரும் பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்கள். இனிவரும் காலத்திலும் இத்தகைய சிறப்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதாக குழுவினரும் உறுதி கொடுத்தனர்.

- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us