சார்லட் நகரில் பெண்கள் நிகழ்த்திய தமிழ்ப் புத்தகக் கண்காட்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சார்லட் நகரில் பெண்கள் நிகழ்த்திய தமிழ்ப் புத்தகக் கண்காட்சி

செப்டம்பர் 08,2021 

Comments

 'என் புத்தகங்களில் இடம் பெற்றது போன்ற மாய மந்திரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நல்ல புத்தகங்களைப் படிக்கும் போது உங்களுக்குள் மாயங்கள் நிகழும் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை' என்பார் ஜே.கே ரௌலிங் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர்.

அமெரிக்காவில், முற்றிலும் பெண்களே நடத்தும் ஒரு தொடர் புத்தகக் கண்காட்சியை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா மற்றும்வல்லினச் சிறகுகள் மின்னிதழ், அட்லாண்டா நிறுவனர் முனைவர் தி.அமிர்தகணேசன்.

சென்னைப் புத்தகக் கண்காட்சி அளவிற்குப் பெரிய கண்காட்சியாக இந்த அமெரிக்கக் கண்காட்சியும் உருவெடுக்கும் என்ற நம்பிக்கையோடு வல்லினச் சிறகுகள் ஆசிரியர் ராஜி ராமச்சந்திரன் அட்லாண்டா, அட்லாண்டா தமிழ் நூலக நிறுவனர் பொன்னி சின்னமுத்து, உலகப் பெண் கவிஞர் பேரவையைச் சார்ந்த கவிஞர் மஞ்சுளா காந்தி, சென்னை, இந்தியா அடங்கிய திட்டக்குழு உறுப்பினர்களின்மேற்பார்வையில் புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தக் கண்காட்சியின் அமைப்பாளர் சார்லட்டைச் சார்ந்த இரம்யா ரவீந்திரன்.

தமிழகத்திலிருந்து புத்தகங்களை விவேகானந்தன் இராசேந்திரன் மற்றும் மஞ்சுளா காந்தி பெற்று அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு பெறப்பட்ட புத்தகங்கள்பற்றிய விவரங்களைக் கணினியில் உள்ளிடுவது, அந்தப் புத்தகங்களைச் சரியாக வகைப்படுத்துவது போன்ற பணிகளைச் சார்லட் தன்னார்வலர்கள் சாந்தி சுதாகர், அனுஷா பிரசன்னா, கிருத்திகா சுதாகர் மற்றும் இரமணி பாலசுப்பிரமணியன் கையாண்டார்கள்.

புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 14, 2021 அன்று காலை 10 மணி அளவில், சார்லட்டில் உள்ள பிராங்க் லிஸ்க் பூங்காவில் ஹார்ட்செல் என்ற குடிலில் தொடங்கியது. தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சிக்காக அட்லாண்டாவைச் சார்ந்த கவிஞர் கிரேஸ் பிரதிபா விழாவின் நேரலையை ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்வின் நேரலையைக் கீழுள்ள வலையொளி தளத்தில் காணலாம்.


https://www.youtube.com/watch?v=LaUvHgaMlzAபுத்தகக்கண்காட்சியை மேகலை எழிலரசன்,  நிடியா காஸ்பர், சாமுண்டேஸ்வரி அர்ஜுன், சுதா விஜயகுமார்,  பிரேமா ஷ்யாம், சுதாகர் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ் ராமநாதன் ஆகிய முக்கியப் பிரமுகர்கள் இணைந்து நாடா வெட்டித் துவக்கி வைத்தார்கள். அவர்களுக்கு ஈரோடு தமிழன்பனின் கவிதை நூல்கள் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டன.

நோக்கவுரை நல்கிய முனைவர் அமிர்தகணேசன் இந்தப் புதிய முயற்சியானது ஒரு நெடிய கனவின் தொடக்கப் புள்ளி, தமிழக எழுத்தாளர்கள் அமெரிக்க மண்ணில் கொண்டாடப்படுவதைப் போல, அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் மண்ணில் கொண்டாடப்படக் கூடிய நாளும் வரும் என்று பேசினார். 

வட அமெரிக்கத்தமிழ்ச் சங்கப் பேரவைத்தலைவர் கால்டுவெல் வேள்நம்பி புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற நேரலையில் வந்திருந்து வாழ்த்துச் செய்தி அளித்தார்.

அதன் பின் புதிய நூல்கள் வெளியீட்டு நிகழ்வு அரங்கேறியது. முதலாவதாக மருத்துவர் ஜெ. அம்பிகா தேவி நினைவு உலகளாவிய கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற நூல்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. அடுத்ததாக, அமெரிக்க வாழ் தமிழ் குழந்தைகள் படிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட 'கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்” என்ற எளிய இலக்கண நூல் வெளியிடப்பட்டது. கலைச்செல்வி கோபாலன் எழுதிய “தமிழ் எழுத்துக்கள் எழுதும் முறையும் ஒலிக்கும்முறையும்” என்ற நூல், அட்லாண்டா, இலில்பர்ன்பள்ளி மாணவர்கள் படம் வரைந்து, கதை எழுதிய எட்டு நூல்கள், மருத்துவர் நடராஜன் பெருமாள், சென்னை எழுதிய 'என்னாச முத்தழகி' மற்றும் பிரேமா ரவிச்சந்திரன், சென்னை எழுதிய 'விடியலின் மொழி' போன்ற நூல்கள் வெளியிடப்பட்டன.

அமெரிக்காவில் உள்ள தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைத்து வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (Association of Tamil writers of North America, ATWNA) என்ற அமைப்பு, புதுச்சேரி முனைவர் அமிர்தகணேசனால் நிறுவப்பட்டது. அதன் பெயர்ப் பலகை, சார்லட் தமிழ்ச் சங்கத் தலைவர் பாலா வேலாயுதத்தால் விமரிசையாகத் திறந்து வைக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் உரை நல்கிய மேகலை எழிலரசன்,“அமெரிக்காவில் இப்படிப்பட்ட புத்தகக் கண்காட்சியை இதுவரை கண்டதில்லை” என்று பாராட்டினார். சிறப்பு விருந்தினர் நிடியா காஸ்பர், புத்தகக் கண்காட்சி நிகழ்வினை நனவாக்கிய அனைத்து சார்லட் தன்னார்வலர்களுக்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்தார். புத்தக ஆர்வலர் செல்வராஜ் ராமநாதன் புத்தகக்கண்காட்சி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் மட்டுமன்றி, பல்வேறு  நாடுகளிலும் நடக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

கண்காட்சிக்கு வந்தவர்களுக்கென முகக் கவசங்களும், கையுறைகளும், ஒவ்வொரு புத்தக மேசையிலும் சானிடைசரும் வைக்கப்பட்டிருந்தன. பார்வையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குலுக்கல் முறையில் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இறுதியாக நன்றி உரை கூற வந்த வர்ணிகா ஆனந்த் மற்றும் ஸ்ரீவிதா அருண்சார்லட் தமிழ்ச் சங்கச் செயலவைக் குழு உறுப்பினர்களுக்கும், நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய சிறப்பு விருந்தினர்களுக்கும், ஊடகப் பங்காளர் ரேடியோ தூள் மற்றும் தமிழ் அமெரிக்கா டிவி நிறுவனர் ஆஸ்டினுக்கும் தங்கள் நன்றியைத் தெரிவித்தார்கள். புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெறப் பின்னிருந்து உழைத்த தன்னார்வலர்கள் சுதாகர் கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் தயாளன், செந்தில் தியாகராஜன், வீராச்சாமி ஜோதிமணி,  பிரசன்னா வீராச்சாமி, கலையரசி தாண்டவராயன், அரவிந்த் பிரான், அனீஸ் சுரேஷ்,  ரோகித் ஆனந்த்,  சிவஸ்ரீ அருண், அருண் திருநாவுக்கரசு, பாலசுப்ரமணியன் சுப்பையன், விமல் தியாகராஜ், ஆனந்த் திருநாராயணன் ஆகியோருக்கும் தங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்கள்.

கண்காட்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் தங்கள் கருத்துக்களை எழுதப் பார்வையாளர் புத்தகமும் வைக்கப்பட்டிருந்தது. தன்னார்வலர் ஹாசினிபாலசுப்பிரமணியன் குழந்தைகள் புகைப்படம் எடுக்க ஏதுவாகப் புத்தகங்களைப் பேசு பொருளாகக் கொண்டு கண் முகமூடிகளைத் தயாரித்துக் கொண்டு வந்திருந்தார். இதைப் பிடித்துப் புகைப்படங்கள் எடுப்பதற்கும் பல குழந்தைகள் ஆர்வம் காட்டினார்கள். ஈரோடு தமிழன்பனின் வாசிப்பைப் பற்றிய கவிதைகள் அங்குள்ள தூண்களில் ஒட்டப்பட்டிருந்தது, பார்வையாளர்களை வெகுவாகக்  கவர்ந்தது. கதை, கவிதை, வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் நூல்கள், கட்டுரை, சிறுவர் நூல், ஈரோடு தமிழன்பன் கவிதை நூல்கள் என்று பல்வேறு வகை நூல்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. பார்வையாளர்கள் பலரும் ஆர்வமாகப் புத்தகங்களை வாங்கிச் சென்றது மனநிறைவைத் தருவதாக இருந்தது. பள்ளிச் சிறுவர்களும் வந்திருந்து தங்களைப் போன்ற சிறார்கள் எழுதி இருந்த நூல்களைக் கண்டு உத்வேகம் அடைந்தார்கள்.

நம்மை விடச் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்தக் கொள்கைக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்தால் அந்தச் செயலை சிறப்பாகச் செய்யக் கூடிய ஆற்றலை இந்தப் பிரபஞ்சமே அள்ளிக் கொடுக்கும் என்பது இந்தப் புத்தகக் கண்காட்சி நிறுவிய ஒன்று. பல சாதாரண மனிதர்களின் சிந்தனையில் உருவான ஒரு கனவு, செயல்வடிவம் எடுத்த போது,அது இத்தகைய ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கும் என்பது யாரும் எதிர்பாராத ஒன்று. “வரப்புயர நீர் உயரும்” என்பது போலப் பல சாதாரணப் பெண்கள் இணைந்து அந்நிய மண்ணில் புத்தகக் கண்காட்சி என்னும் அசாதாரணச் சாதனையை நனவாக்கி இருக்கிறார்கள். இது போன்ற பல அசாத்தியங்களைச் சாத்தியம் ஆக்கக் கூடிய நிலையே வாழ்க்கையை அழகாக்குகிறது எனலாம்.கனவு காணுங்கள். புதியதோர் உலகம் பிறக்கும்.

- இரம்யாரவீந்திரன், சார்லட், வடகரோலைனாAdvertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us