சிசெல்சு ஆலய விநாயக சதுர்த்தி மஹோத்ஸவ நிறைவு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்சு ஆலய விநாயக சதுர்த்தி மஹோத்ஸவ நிறைவு விழா

செப்டம்பர் 11,2021 

Comments

சிசெல்சு இந்துக் கோவில் சங்க ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலய விநாயக சதுர்த்தி மஹோத்ஸவ நிறைவு விழா செப்டம்பர் பத்தாம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. செப்டம்பர் முதல் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சதுர்த்தி விழா நாள்தோறும் விசேஷ பூஜைகள், அலங்காரங்கள், ஹோமங்கள், ஆராதனைகள் என தீவு முழுவதும் பக்திப் பிரவாகத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு நாளும் ஸ்ரீ விநாயகப் பெருமான் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. பத்தாம் தேதி காலை 6.30 முதல் 12.30 வரை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், யாகசாலை பூஜை, ஜபம், ஹோமம், த்வஜஸ்தம்ப பூஜை, நவசந்தி பலி நடைபெற்றது. தொடர்ந்து விநாயகப் பெருமான் சர்வ அலங்கார நாயகராக உள் வீதி உலா வந்து அருள்பாலித்தார். பின்னர் பூர்ணாஹீதி, சூர்ணோத்ஸவம் நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு பிரசிவிரான்ஸ் கடற்கரையில் தீர்த்தவாரியும் ஸ்ரீ நவசக்தி விநாயகருக்கு மஹாஅபிஷேகமும், கலசாபிஷேகமும் நடைபெற்று மஹா தீபாராதனை காட்டப்பட்டு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை ஆறு மணிக்கு மேல் மூலவர் ஸ்ரீ நவசக்தி விநாயகருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரமும் விசேஷ தீபாராதனையும் நடைபெற்றன. பின்னர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவர் ஸ்ரீ நவசக்தி விநாயகருக்கு சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் மஹா தீபாராதனை நடைபெற்றது மெய்சிலிர்க்க வைத்த காட்சியாகும்.

விசேஷ அலங்காரத்தில் ஜொலித்த ஸ்ரீ நவசக்தி விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி திரு வீதி உலா வந்த போது பக்தப் பெருமக்கள் அருள் பிரவாகத்தில் நெகிழ்ந்தனர். தொடர்ந்து த்வஜ அவரோஹணம் ( கொடி இறக்கம் ), சமஸ்த தேவதா விசர்ஜனம், சண்டிகேஸ்வரர் பூஜை, பைரவர் பூஜை, யஜமான உத்ஸவம், ஆச்சார்ய உத்ஸவம் நடைபெற்று ஸ்ரீ விநாயக சதுர்த்தி மஹோத்ஸவம் நிறைவு கண்டது.

தொலை தூரத்தில் ஒரு பிள்ளையார் பட்டியோ என பக்தர்கள் வியந்து மகிழ்ந்தனர். தலைமை அர்ச்சகர் தண்டபாணி சிவாச்சாரியாரின் அலங்காரங்கள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன. நாதஸ்வர இசை, தவில் இசை வாசித்து தெய்விக சூழலை உருவாக்கிய ஐயப்பன், பிரபாகரன் ஆகியோரது சேவை பாராட்டுக்குரியது. நாள்தோறும் திருமுறைப் பாராயணம் நடைபெற்றது செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது..

அத்தனைக்கும் முத்தாய்ப்பு வைத்தாற் போல இந்து சங்கத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை தம்மையே அர்ப்பணித்து விழாச் சிறக்கச் செய்ததை பக்தப் பெருமக்கள் பாராட்டியவாறுள்ளனர். சுருங்கக் கூறின் இன்னும் சில நாட்கள் இத்திருவிழா நீடிக்கக் கூடாதா என்ற ஏக்கத்தை பக்தர்களிடம் தோற்றுவித்தது எனலாம். திரண்ட பக்தர்கள் தனி மனித இடைவெளி விட்டு முகக் கவசமணிந்து கட்டுப்பாட்டுடன் வழிபட்டமை குறிப்பிடத் தகுந்ததாகும்.

- தினமலர் வாசகர் : சி.என்.பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி

செப்., 27 ல் கல்லூரிப் பயணம்: நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் 'அறிவரங்கம்' நிகழ்ச்சி...

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா

அக்., 2 ல் 'தமிழ் அறிஞர்கள் நாள்' விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us