சம்யுக்தா பிரபுவின் சிந்தை கவர் நாட்டிய நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சம்யுக்தா பிரபுவின் சிந்தை கவர் நாட்டிய நிகழ்ச்சி

செப்டம்பர் 16,2021 

Comments

 தத்வம் நாட்டியப் பள்ளியின் மாணவியான சம்யுக்தா பிரபுவின் பரதநாட்டிய நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம், 15-ஆம் தேதி ஸ்டாஃபோர்டு சிவிக் சென்டரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பள்ளி இறுதி ஆண்டு மாணவியான சம்யுக்தா கல்வி, பரதக்கலை இரண்டையும் ஒன்றுக்கொன்று குறைவில்லாமல் சிறப்பாகக் கற்று வருகிறார். 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் தனது அரங்கேற்றத்தில் அனாயாசமாக நடனமாடி அனைவரின் பாராட்டையும் பெற்ற இவர், அத்துடன் நின்று விடாமல், தன் திறமையை மேலும் வளர்த்துக் கொண்டு ஹூஸ்டனில் தனது நாட்டிய நிகழ்ச்சியை மிக அற்புதமாக வழங்கினார்.

வழுவூர் சம்பிரதாயப்படி தோடய மங்களத்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. அடுத்து, கம்பீர நாட்டை ராகத்தில் ஊத்துக்காடு வெங்கட சுப்பைய்யரின் “ஶ்ரீ விக்னராஜம் பஜே” கம்பீரமாக ஒலிக்க, சம்யுக்தாவின் நடன நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஆரம்பித்தது.அதனைத் தொடர்ந்து, ஹம்ஸத்வனி ராகத்தில் தஞ்சை நால்வர் இயற்றிய நடேச கவுத்துவமும், ராகமாலிகையில் அமைந்த மண்டூக சப்தமும் மிகவும் நேர்த்தியாக இருந்தன.மண்டூக சப்தத்தில் கஜேந்திர மோட்சத்தை சம்யுக்தா அழகாக அபிநயித்து ஆடினார்.

அடுத்ததாக, சாருகேசி ராகத்தில் அமைந்த லால்குடி ஜெயராமனின் “இன்னும் என் மனம்” வர்ணம் நிகழ்ச்சியின் சிகரமாக அமைந்திருந்தது. சம்யுக்தாவின் அபிநயமும், அடவுகளும் அபாரமாக இருந்தன. ஒவ்வொரு ஜதியும் அற்புதமாக இருந்தது. குரு லாவண்யா பிரபுவின் குருவான கலைமாமணி ராதாவின் பிரத்தியேக முத்திரையான மிருதங்க ஜதி அனைவர் நெஞ்சங்களையும் கவர்ந்து விட்டது.

கோவர்த்தன கிரியைத் தூக்கி நிறுத்தி ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்து, இந்திரன் கர்வத்தை கண்ணன் அழித்த நிகழ்வும், பாரிஜாத மலரை கண்ணன் ருக்மிணிக்கு பரிசளிக்க, பொறாமை கொண்ட சத்யபாமா தனக்கு பாரிஜாத மரத்தையே கண்ணன் அளிக்க வேண்டும் எனக் கூற, அவ்வாறே செய்த கண்ணன் அந்த மரத்திலிருந்த அத்தனை மலர்களும் அருகில் இருக்கும் ருக்மிணியின் தோட்டத்தில் விழும்படி செய்து குறும்புடன் பொறாமை தவறானது என்பதை உணர்த்திய “பாரிஜாத பரிணயமும்” சம்யுக்தாவின் அழகிய விழிகளின் அபிநயத்தில் சிறப்பாக வெளிப்பட்டன. பக்தி, அன்பு, பிரிவால் உண்டாகும் வேதனை என அனைத்து பாவங்களையும் அருமையாக வெளிப்படுத்திய சம்யுக்தாவிற்கு நமது பாராட்டுக்கள்.

அடுத்ததாக, கமாஸ் ராகத்தில் அமைந்த அன்னமாச்சார்யரின் டோலாயாம் பதத்தில் மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தின் சிறப்பை ஆடிய சம்யுக்தா, “ நீ மாடலே மாயனுரா” ஜாவளிக்கு மிகவும் அநாயாசமாக சிருங்கார ரசத்தை அபிநயித்து ஆடினார். லால்குடி ஜெயராமனின் மோகன கல்யாணி தில்லானாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

நிகழ்ச்சியை சாரிகா கிருஷ்ணன் திறம்பட தொகுத்தளித்தார். சிலம்பம் ஹூஸ்டன் பரதநாட்டியப் பள்ளியின் நிறுவனர் குரு லாவண்யா ராஜகோபால் சிறப்பு விருந்தினராக வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்துப் பேசினார்.கண்களுக்கு விருந்தாக அமைந்த இந்த நாட்டிய நிகழ்ச்சியின் இசைக் குழுவினரின் அருமையான இசை, செவிக்கு விருந்தாக அமைந்திருந்தது. 

 தீபிகா சரணின் சிறப்பான, இனிமையான பாட்டும், சரணின் திறமையான மிருதங்க வாசிப்பும், சசிதரின் நயம் மிக்க வயலின் இசையும் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது.குரு லாவண்யா பிரபுக்கு துணையாக டாக்டர் மாதுரியும் நட்டுவாங்கம் இசைத்தார்.பாரம்பரியம் மிக்க பரதக்கலையை, அதன் தூய்மை சிறிதும் மாறாமல் தனது மாணவியருக்கு திறம்படப் பயிற்றுவிக்கும் குரு லாவண்யா பிரபுக்கு மென்மேலும் வெற்றிகள் குவிய எமது வாழ்த்துக்கள்.

- செய்திக்குறிப்பிலிருந்து ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us