ஹூஸ்டன் ஷூபாணி குமாரின் பரத நாட்டிய அரங்கேற்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹூஸ்டன் ஷூபாணி குமாரின் பரத நாட்டிய அரங்கேற்றம்

செப்டம்பர் 17,2021 

Comments

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற அவ்வையின் கூற்றுப்படி இந்நாளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் திரவியத்தை தேடுவது மாத்திரமல்லாமல், தமிழக கலையையும் பேணிப் பாதுகாத்து வருகிறார்கள் என்பதை நினைவுறுத்தும் வகையில், ஷூபாணி குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஹூஸ்டன் மாநகரத்தில் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் நாள் மிகச் சிறப்பாக நிகழ்ந்தது.

நான்கு வயதிலிருந்து சிரத்தையுடன் தான் பயின்ற பரதக் கலையை வார்த்தெடுத்து வந்திருந்த அனைவரின் மனம் கவர்ந்த அற்புத விருந்தாக வழங்கினார் ஷுபாணி குமார். ஷுபாணியின் குரு, உலகப் புகழ்பெற்ற ஆச்சார்யா ரத்னா குமார். தன் நாட்டியத்தின் மூலமாகவும், தன் சீடர்களின் மூலமாகவும், தன் புத்தகங்கள் மூலமாகவும், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பரதக் கலையை உலகெங்கும் பரப்பி வரும் ஆச்சார்யா ரத்னா குமார், தன் சிஷ்யை ஷிபானியை பெரும் வாஞ்சையுடனும், பெருமையுடனும் வாழ்த்தி ஆசிர்வதித்துப் பேசியது அரங்கேற்றத்தின் முத்தாய்ப்பாக இருந்தது. ஆச்சார்யா ரத்னா குமார், ஷுபாணியை தனது இன்னொரு மகளைப் போல நேசித்தது அவரது பேச்சில் தெள்ளத் தெளிவாக இருந்தது.

சிவனின் மூத்த மகனான விநாயகரை வணங்கி அவர் ஆசி பெற்றுத் துவங்கிய நிகழ்ச்சி, வர்ணத்தில் தமிழ்க்கடவுள் முருகனின் திருவிளையாடல்களை மிக நேர்த்தியாக சித்தரித்தது வந்திருந்தவர்களின் உள்ளத்தை வசீகரித்தது என்றால் மிகையாகாது. பின்னர் ஷுபாணி தில்லை நடராஜனின் ஆனந்தக் கூத்தையும், பாற்கடல் அலை மேல் உறையும் விஷ்ணுவின் அவதாரங்களையும், திறம்பட அரங்கில் காண்போர் உள்ளம் குளிரும் வகையில் நிகழ்த்தி அனைவரின் மனத்தையும் கவர்ந்தார் ஷுபாணி.

ஓவியனுக்கு தூரிகையும், வர்ணமும் தேவை. இசை கலைஞனுக்கு இசைக்கருவி தேவை. ஒரு நர்த்தகி, வெறும் வெளியைத் தன் உடலசைவால், முக பாவத்தால் கட்டமைப்பதில் மூலம் காண்பவரின் மனதில் சோகத்தையும், சந்தோஷத்தையும் உருவாக்க முடியும் என்ற அற்புதம், நல்லிசையுடன் நிகழுங்கால் விளையும் மனமகிழ்வு பன்மடங்காகும் என்பதை ஷுபாணியின் அரங்கேற்றம் உறுதி செய்தது.

ஷுபாணியின் தந்தை செந்தில் குமார் அய்யப்ப பக்தர். இந்த நிகழ்ச்சிக்கு செந்தில் குமாரின் அய்யப்ப குரு நம்மார வெங்கடேசனின் மகள் நித்யா வெங்கடேசன், நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார். ஷுபாணி குமார், நாட்டிய அரங்குகளில் அதிகம் நிகழ்த்தப்படாத வீரமணியின் அய்யப்பனின் "சரி நிகர் சமானம் யார் அய்யா?" என்ற பாடலைத் தன் முழு அர்ப்பணிப்புடன் நிகழ்த்தியபோது, அரங்கில் இருந்த அனைவரும் கட்டுண்டு இருந்தனர். ஹூஸ்டன் அரங்கில் தன்னிச்சையாக எழுந்த "சுவாமி சரணம் அய்யப்பா!", என்ற முழக்கம், ஷு பாணியின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த ஆசிர்வாதமாகத் தான் கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம், குரு ஆச்சார்யா ரத்னா குமார் தெரிவு செய்த தமிழ்ப் பாடல்களை செல்வி சுதிக்ஷணா வீரவல்லியின் அற்புதமான குரலும், வாசு கோவிந்தராஜனின் மிருதங்கமும், பிரணவ் பிரவீனின் வயலினும் செவிக்கு விருந்தாக அமைந்தன . நடன மேடையின் அலங்கரிப்பும், நடனத்துடன் ஒத்திசைவுடன் நிகழ்ந்த ஒளியமைப்பும் ( வேணுகோபால் ஜோசியுலா) , நடன அரங்கின் வரவேற்பு இடங்களில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த சிலைகளும், மலர் அலங்காரங்களும், ஷுபாணியின் நாட்டியத்திற்கு பொருத்தமாய் இருந்த உடைகளும் (ஆஹாரா டைலர்ஸ்), கண்ணுக்கு விருந்தாக இருந்தன.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஷுபானியின் அண்ணன் கோபி தன் தங்கையின் நிகழ்ச்சிக்கு தன் நண்பர்களுடன் செண்டை மேளம் அடித்து கலகலப்புடன் வரவேற்றது மாத்திரமல்லாமல், தன் தங்கையின் நாட்டிய பயணத்தைப் பற்றி நகைச்சுவையுடன் பேசி ஒரு இலகுவான சூழலை உருவாக்கினார். ஷுபானியின் பெற்றோர்கள் செந்தில் குமாரும் அவரது துணைவியார் ப்ரியா குமாரும், கடந்த வருடத்தில் தம் வாழ்வில் நிகழ்ந்த சில கடினமான தருணங்களைக் கடக்க ஷுபாணியின் நாட்டியம் உதவியது என்று கூறினர். அது மாத்திரமின்றி, சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மாதவியின் அரங்கேற்றத்தை நுட்பமாக பதிவு செய்துள்ளார். அதே பாரம்பரியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர், தமிழ் நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் தொடரப்பட்டு வருகிறது என்பது, எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் உலகம் தொற்று நோயால் அவதி பட்டுக் கொண்டிருக்கும் காலத்திலும் எதிர் காலத்தைக்க குறித்த ஒரு நம்பிக்கையை அளிக்கிறது என்று குறிப்பிட்டது மனதுக்கு நிறைவானதாக இருந்தது.

செவிக்கும் கண்ணுக்கும் மனதுக்கும் அளிக்கப்பட விருந்துடன், நடன நிகழ்ச்சி முடிந்த பின்னர் வந்திருந்த அனைவருக்கும் சுவையான விருந்து அளிக்கப்பட்டது. அரங்கில் நண்பர்கள் சந்தோஷமாக உணவுகளைப் பரிமாறி, கேலியுடனும், கிண்டலுடனு ம் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தது, வந்திருந்தோர் அனைவருக்கும் ஒரு மனதிற்கு நிறைவான ஒரு நல்ல தினமாக அமைந்தது. அன்றிரவு சூரியன் மறைந்த போது ஹூஸ்டன் நகரம் தன்னுள் இன்னொரு திறமையான நர்த்தகியை அடையாளம் கண்டு கொண்டது. "சென்றிடுவீர் எடுத்த திக்கும், கொணர்ந்திங்கு சேர்ப்பீர் கலைச் செல்வங்கள் யாவும்", என்றான். ஷுபாணி போன்ற இளைய தலைமுறை, நம் கலைச் செல்வங்களை மேலை நாடுகளுக்கு கொண்டு சேர்க்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.

-ராஜா முத்துப்பிள்ளை செய்தி குறிப்பிலிருந்து ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)

சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற நிர்வாகிகள் ( 2021)...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us