அட்லாண்டாவில் 175 தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டு சாதனை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அட்லாண்டாவில் 175 தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டு சாதனை

செப்டம்பர் 21,2021 

Comments

 அட்லாண்டாவில் 175 தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டு இளம் எழுத்தாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். தமிழ் கூறும் நல்லுலகின் வரலாற்றிலேயே, முதல் முறையாக அட்லாண்டாவைச் சேர்ந்த கம்மிங் தமிழ்ப் பள்ளியும், Tamiezhuthapadi.org உம் இணைந்து, செப்டம்பர் 12. 2021 அன்று 175 இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பயணம், “நான் ஏன் தமிழ் படிக்க வேண்டும்” என்று கேட்ட அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழ்க் குழந்தையிடமிருந்து தொடங்கியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழை நோக்கி அவர்களை வலுக்கட்டாயமாக இழுப்பதைவிட, தமிழை அவர்கள் கையிலேயே கொண்டு போய்ச் சேர்த்தால் என்ன என்று தோன்றியது. 

கம்மிங் தமிழ்ப் பள்ளிக்கென்று ஒரு சிறார் நூலகம் அமைக்கலாம் என்ற எண்ணம் வலுவாகத் தோன்ற ஆரம்பித்தது. நூலகம் அமைக்கலாம் என்று தோன்றியவுடன் முதலில் தேட ஆரம்பித்தது சிறுவர் புத்தகங்களைத்தான். தற்காலத்திற்கு ஏற்ப, இன்றைய தலைமுறை அதிகம் அன்றாடம் பார்க்கும் விடயங்களைக் கொண்ட புத்தகங்கள் தமிழில் மிக அரிதாக இருந்தன. எங்கேயும் நினைத்த மாதிரி புத்தகம் கிடைக்கவில்லை. தமிழுக்கென்று ஒரு தளம் அமைக்க முடிவு செய்து, நாமே உருவாக்கலாம் என்ற எண்ணம் உந்தித் தள்ளியதால் உருவானதுதான் Tamiezhuthapadi.org என்ற இணையதளம். இது தமிழுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. 

நிகழ்நிலையில் புத்தகத்தை வெளியிடும் செயல்முறையையும், அதற்கான செயலியையும் உருவாக்க ஆறு மாதங்கள் ஆயின. இந்தச் செயலி மூலம் உருவாகும் ஒவ்வொரு புத்தகமும் பதிப்புரை உரிமத்தின் கீழ் சில விதிவிலக்குகள் கொண்டிருக்கிறது. அதாவது, நான் வெளியிட்ட ஒரு புத்தகத்தை நீங்கள் உங்கள் கற்பனைக்கேற்ற மாதிரி எழுதியும் வெளியிடலாம், வண்ணப் படங்களையும் அவ்வாறு செய்து வெளியிடலாம். Creative Commons, அதாவது ஒருவருடைய படைப்பை copyright என்ற பெயரில் அவர்களே வைத்திராமல் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற கருத்துப்படிவமே அது.

இளம் எழுத்தாளர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர் குழுவுடன் இணைந்து 175 புத்தகங்களயும் சமர்ப்பித்தவுடன், நாங்கள் உடனே இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. இதற்கென்று ஒரு தன்னார்வலர்கள் குழு அமைத்து ஒவ்வொரு புத்தகத்தையும் சரி பார்த்துப் பதிவேற்றினோம். அவ்வாறே சிறார்கள் எழுதிய நிகழ்நிலைப் புத்தகங்கள், அச்சேறி வழுவப்பான காகிதங்களில் வண்ணப் புகைப்படங்கள் கொண்ட அழகிய புத்தகங்களாக உருவாயின. 

செப்டம்பர் மாதம் 12ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணி அளவில் அனைத்து இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களையும் ஒரே மேடையில் வெளியிட்டோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு அட்லாண்டாவைச் சேர்ந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்துத் தந்ததோடு, குழந்தைகள் எழுதிய புத்தகங்களையும் வெளியிட்டுத் தந்தனர். 

எழுத்தாளர் இராமகிருஷ்ணன் காணொளி மூலம் எங்கள் இளம் எழுத்தாளர்களைப் பாராட்டியது அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும். ஜியார்ஜியாவின் உலக மொழிகள் மற்றும் உலகளாவிய வேலை முயற்சிகளுக்கான திட்ட நிபுணர் பேட்ரிக் வாலஸும் குழந்தைகளைப் பாராட்டி ஊக்குவித்தார்.

மக்கள்தம் போக்கினில் மாறுதல் வருந்தொறும்

தக்கபற் புதுப்புதுப் பனுவல்கள் எழுந்ததொறும்

செம்மையில் திரியாத் தீந்தமிழ் தனிலவை

அமைதலால் என்றும்வாழ் ஆக்கம் உடைத்தென

அறிவோர் வியப்புடன் ஒருங்கே போற்றிட

அருந்தமிழ் காலத்தை வென்றுதான் விளங்குதே!!

என்ற பாடலுக்கேற்ப, இந்தச் சாதனை வெற்றிகரமாக அரங்கேறியது. இந்த வெற்றி மிக்க மகிழ்ச்சியளித்தாலும் நாங்கள் எங்கள் பயணத்தின் அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டோம்.குழந்தைகளின், இல்லை, இல்லை, இளம் எழுத்தாளர்களின் படைப்புக்களை, கீழே உள்ளஇணையதளத்தின் இணைப்பில் சென்று அவசியம் படியுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

https://tamilezhuthapadi.org/

இந்த நேரத்தில் இந்தச் சாதனையைப் படைத்த, படைக்க உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை இப் பத்திரிக்கையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- தீபா அகிலன், முதல்வர், கம்மிங் தமிழ்ப்பள்ளி, அட்லாண்டா, ஜியார்ஜியா

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி...

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா

அக்., 19 - நவம்., 19 வரை மலேசியாவில் மெய்நிகர் பெருவிழா...

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை நிர்வாகிகள் (2021- 2022)...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us