சிசெல்ஸ் ஆலயத்தில் அன்னாபிஷேக கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிசெல்ஸ் ஆலயத்தில் அன்னாபிஷேக கோலாகலம்

அக்டோபர் 21,2021 

Comments

 ஐப்பசி மாதம் சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும் மாதமாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஏனெனில் அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறார். ஐப்பசி மாத பௌர்ணமியன்று விரதமிருந்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும். திருமணமான பெண்கள் விரதமிருந்தால் புத்திர பாக்கயமும் கணவனுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும். 

சிவபெருமானின் லிங்கத் திருமேனிக்கு ஐப்பசி பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும். சமைத்த சாதம், காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த எம்பெருமானுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. “ அன்னம் பர பிரம்மம் “ என உணவை இறைவனாகப் பாவிப்பது இந்து தர்மம். உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான இரையையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் நிகழ்வே அன்னாபிஷேகம். இந்த வேளையில் யஜுர் வேதம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். சோறுதான் சொக்கநாதர், சோறு கண்ட இடம் சொர்க்கம் என அன்னாபிஷேகத்தைக் காண்பது பற்றிக் குறிப்பிடுவதுண்டு. 

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிவபெருமானுக்குத் தனி சன்னதி இல்லையாயினும் மரலிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் வெகு விமரிசையாகச் செய்யப்பட்டது. அன்னம், காய்கறிகள், திராட்சைப் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது கண் கொள்ளாக் காட்சியாகும். 

முழுநிலவுப் பெருநாளை முன்னிட்டு சிவகாமி உடனுறை நடராஜப் பெருமானுக்கு வாசனாதித் திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனைகளும் நடைபெற்றன .நடராஜப் பெருமான் தங்கக் கவசமணிந்து சர்வ அலங்கார நாயகராக எழுந்தருளி அருள்பாலித்தார். அஷ்டபுஜ துர்க்கை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. லலிதா திரிசதி பாராயணமும் அர்ச்சனையும் செய்யப்பட்டன. 

அன்னாபிஷேகப் பொருட்கள் மாலையில் கலைக்கப்பட்டு வருகை புரிந்த பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக வழங்கப்பட்டது. ஸ்ரீகாந்த் சிவாச்சார்யாரின் அன்னாபிஷேக அலங்காரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தலைமை அர்ச்சகர் தண்டபாணி சிவாச்சார்யார் அன்னாபிஷேக மகிமை பற்றி எடுத்துரைத்தார். ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புறச் செய்திருந்தார்.

- தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி

டிசம்., 18 பாரதியாரின் இலக்கியப் படைப்புகளை நினைவு கூறும் போட்டி நிகழ்ச்சி...

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

நவ. 27, அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி...

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்

நவ.26, அஜ்மானில் ரத்ததான முகாம்...

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை

டிசம்., 11 வியக்க வைக்கும் தமிழர் கட்டடக்கலை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us