ஈழத்தின் தலைநகர் என்று சொல்லப்படும் திருகோணமலையில் காணப்படும் மிக பெரிய குளம் கந்தளாய்குளம். வரலாற்றுடன் பல தகவல்களை தன்னகத்தே கொண்டு தற்போது பெயர் திரிபுகள் பலவற்றை சந்தித்து வரும் பகுதி. கண்டிப்பாக ஈழத்தமிழர்கள் கந்தளாய் குளத்தை பற்றியும் அதன் பெருமையையும் தெரிந்து வைத்து இருப்பதுடன் அடுத்த சந்ததிக்கும் வாய்வழியாகவும் எழுத்து வடிவிலும் கொண்டு சேர்க்க வேண்டியது கடமையாகும்.
இன்றும் திருகோணமலை கந்தளாய், தம்பலகாமம் மற்றும் அதை அண்டிய விளைநிலங்களுக்கு நீர்ப்பாசனத்துக்கும் ஒட்டுமொத்த திருகோணமலையின் குடிநீர் விநியோகத்துக்கும் கந்தளாய்குளமே பயன்படுகின்றது. இது 135 (135 000 000 கனமீட்டர்) மில்லியன் கனமீட்டர் கொள்ளளவு உடையது.
பண்டையில் திருகோணமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை மூன்று பற்றுக்களாகப் பிரித்தனர். மாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில் சதுர்வேதமங்கலம் என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது.
இந்த ஊரில் பெரியகுளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடகசௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டுமன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது.
பிற்காலம் அநுராதபுரத்தில் இருந்து அரசாண்ட புவனேயகயவாகு என்னும் மன்னன் சமணனாக மதம் மாறி திரிசங்கபோதி என்ற மற்றுமோர் நாமத்தை பெற்றான் என்று திருக்கோணாசலப் புராணம் கூறுகின்றது. இவ்வேந்தன் சைவ ஆலயங்களை இடித்தழிக்கும் நோக்கில் படைகளுடன் காட்டு வழியே சதுர்வேதமங்கலத்தை நோக்கி வந்தபோது, அவனது தீயஎண்ணத்துக்கு தெய்வ தண்டனையாக திடீரென அவன் கண்கள் பார்வை குன்றி குருடாகியது.
மன்னனும் படைகளும் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து அவ்விடத்திலேயே கூடாரமிட்டுத் தங்கினர். கவலையில் மூழ்கிக் கிடந்த அரசனின் கனவில் ஒரு முதியவர் தோன்றி உன் தீயஎண்ணத்துக்குத் தகுந்த தண்டனை பெற்றாய் ஆயினும் இறைவனைத் துதித்து தர்மசீலனான குளக்கோட்டன் அமைத்த நன்னீர்க் குளத்தில் தீர்த்தமாடினால் உன் துயர் அகலும் என்று கூறி மறைந்தார்.
அப்பெரியாரின் கூற்றுக்கமைய பக்திப் பரவசம் அடைந்த அரசன் திருக்குளத்தில் தீர்த்தமாடியபோது, அதிசயிக்கத்தக்க விதமாகக் கெட்டுப்போன கண்பார்வை மீண்டும் ஒளிவீசி பிரகாசித்தது. கெட்டுப்போன கண்தழைத்த காரணத்தால் திருக்குளம் என்று வழக்கில் இருந்த பெயர் மறைந்து கண்தழை என்ற காரணப்பெயரே வழங்கலாயிற்று. அடுத்துள்ள சதுர்வேதமங்கலம் என்ற பெயரும் மறைந்து, கண்தழை என்ற பெயரே ஊருக்கும், குளத்துக்கும் வழங்கப்படலாயிற்று.
இப்பெயரே காலப்போக்கில் திரிந்து கந்தளாய் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நோக்கு கண்விளங்கக் கண்ட நுவலரும் கயத்துக்கன்பால் தேக்கு கண்டழையாமென்னச் சிறந்ததோர் நாமம் நாட்டிக் கோக்குலதிலகனாய குளக்கோட்டு மன்னன் செய்த பாக்கியம் விழுமி தென்னா வியந்தனன் பரிந்து மன்னோ.(திருக்கோணேஸ்வரபுராணம்)
பிரமாண்டமான நீர்த்தேக்க அணைக்கட்டின் இருபுறங்களிலும் பாலை, வீரை, தேக்கு, முதிரை போன்ற மரங்கள் வானுயர வளர்ந்து அணைக்கட்டை அழகு செய்தன.
அணைக்கட்டின் உச்சியில் நின்று பள்ளத்தாக்கைப்போல் தெரியும் கந்தளாய் என்ற ஊரைப் பார்த்தால் ஊரில் நெடிதுயர்ந்து நிற்கும் தென்னை மரஉச்சியில் காலை வைத்து விடலாம் போல் தோன்றும். இன்று இதுபோன்ற அரிய பலசரித்திரங்கள் மாற்றப்பட்டுவிட்டன. அணைக்கட்டோரங்களில் நின்று அழகு செய்த வான்தருக்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. பழைமையில் இந்தப் பகுதியில் இன்னொரு தெய்வீகச் சிறப்பும் காணப்பட்டது. அணைக்கட்டுக்கு பாதுகாப்பாக குளக்கோட்டனின் வேண்டுதலுக்கமையவே, நாராயணமூர்த்தியால் அணைக்கட்டோரம் விநாயகர் ஆலயம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்குளத்திலிருந்து குதித்தோடி வரும் பேராறு படிப்படியாக உள்ள கற்பாறைகளில் விழுந்து சலசலத்த ஓசையுடன் ஆலயத்தை வலமாக வளைந்து அஞ்சலி செய்து செல்வது பார்க்கப் பரவசமூட்டுவதாக இருக்கும்.
ஆற்றோரம் எங்கும் பலாமரங்கள் காய்களைச் சுமந்து கொண்டு நிற்கும் காட்சி மனதிற்கு உவகை ஊட்டுவதாக இருக்கும். இத்தகைய அழகுமிகு இயற்கைக் காட்சிகள் இன்றில்லை. ஆலயத்தை சுற்றி வளைத்து ஓடிய ஆற்றின் கிழக்குப் பகுதியைத் தூர்த்து குடியிருப்புக்களை உண்டாக்கிவிட்டார்கள். ஒருகாலத்தில் இந்த பழம் ஊரில் வேதம் ஓதும் மறையோர்கள் வாழ்ந்ததும் அதன் காரணமாக சதுர்வேதமங்கலம் என்ற காரணப்பெயர் இருந்ததும் அடியோடு மாறிவிட்டது. நாடு சுதந்திரமடைந்த பின் துரித வளர்ச்சி அடைந்து கந்தளாய்ப்பட்டினம் என்ற பெயரே நிலைகொண்டுள்ளது.
1986 இல் கந்தளாய் நீர்த்தேக்கம் உடைத்துக் கொண்டபோது நாராயணமூர்த்தியால் ஸ்தாபிக்கப்பட்ட அணைக்கட்டு விநாயகர் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டாலும் சைவப்பெருமக்கள் ஆலயத்தைத் திரும்பக் கட்டி இருப்பது பாராட்டுக்குரியதாகும். 1986 ஏப்ரல் 20 மாலை 3 மணிக்கும்உடைப்பெடுத்தது.180 பேர் உயிரிழந்தனர். 1200 வீடுகளும் 2000 ஏக்கர்நிலமும்அழிவடைந்தது.
ஆபத்தில்இருந்தகாலம்
எச்சரிக்கப்பட்டகாலங்கள்
29 March 2011
31 December 2003
7 August 2005
கட்டியது அக்கிரபோதி என்னும் வலிந்ததிரிப்பு
கந்தளாய் நீர்தேக்கத்தை அமைத்தவன் இரண்டாம் அக்கிரபோதி என்று சிறீலங்கா சரித்திரம் கூறுகிறது. ஆனால் இம்மன்னனுக்கு முன் ஆட்சி செய்த முதலாம் அக்கிரபோதி மின்னேரியாக்குளத்தைக் கந்தளாயுடன் இணைக்க ஒரு கால்வாயையும் வெட்டினான் எனச் சரித்திரம் முன்னுக்குப்பின் முரணாகக் குறிப்பிடுகிறது.
கந்தளாய்க்குளம் இருந்தபடியால்தானே முதலாம் அக்கிரபோதி கால்வாய் வெட்டிவந்தான் என்றும் ஆகிறது. முதலாம் அக்கிரபோதி கந்தளாய்க்கு கால்வாய்வெட்டி வந்தான் என்ற சரித்திரத்தின் கூற்று முதலாம் அக்கிரபோதியின் ஆட்சிக்கு முன்பும் கந்தளாயில் குளம் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றது. இதுபோக கந்தளாய் அண்மித்தபகுதி அக்போபுர என்று மெல்ல மெல்ல பெயர் மாற்றப்பட்டு வருகின்றது.
வென்றரசன்குளம்
திருமலை இராஜ்ஜியத்தின் ஒருபகுதியாக இருந்த சதுர்வேதமங்கலத்தை இன்றைய கந்தளாயை தென்னிலங்கை வேந்தன் ஒருவன் வென்றான். அவன் வென்றரசன் என்றே அழைக்கப்பட்டான். ஏற்கனவே இருந்த கந்தளாய் குளத்தின் கிழக்குப்புற அணைக்கட்டுடன் தானும் ஒரு குளத்தை அமைத்தான் இவன். அந்தக்குளம் வென்றரசன்குளம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
அணைக்கட்டின் உச்சியில் நின்று குளத்தின் நீர்ப்பரப்பைப் பார்த்தால் கடல் போலவும், கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியை நோக்கினால் கட்டு பெரியமலை போலவும் தெரியக்கூடியதாகக் குளம் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டதெனக் காவியம் கூறுகிறது. இந்தக் குளத்தின் அணைக்கட்டை முதல்முதலாக பார்ப்பவர்கள் வியப்பிலாழாமல் இருக்க முடியாது. இயந்திர சாதனங்கள் அற்ற அந்தக் காலத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான அணையை அமைக்க இலட்சக்கணக்கான சனங்கள் தினந்தோறும் வேலை செய்தாலும் பல்லாயிரம் வருஷங்களாவது செல்லுமே என்ற எண்ணம் எவருக்கும் வரவே செய்யும் .
- நமது செய்தியாளர் ஞானகுணாளன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.