தென் கிழக்கு ஆசியாவில் தைப்பூசம் என்றாலே பக்தர்களுக்குக் காட்சி தருவது சிங்கப்பூர் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயமும் கோலாலம்பூர் பத்து மலை முருகன் ஆலயமுமே. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுப்பதும் – முடிக் காணிக்கை செலுத்துவதும் – பக்திப் பரவசத்தோடு ஆடிப் பாடிக் கொண்டாடுவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆனால் கோவிட் எனும் கொள்ளை நோய் கோலாகலத்தைக் குறைத்து விட்டதே தவிர மகிமையை எள்ளளவும் பாதிக்கவில்லை,
சிங்கப்பூர் குளக்கரைச் சாலை அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 17 ஆம் தேதியே களைகட்டத் துவங்கி விட்டது. புனர் பூசத் திருநாளில் மட்டும்தான் அண்ணன் விநாயகப் பெருமானும் முருகனும் ஒரே வீட்டில் ஒன்றாக இருப்பர் என்பது ஐதீகம். ஸ்ரீ தண்டாயுதபாணி தமது இல்லத்திலிருந்து வெள்ளி ரதத்தில் புறப்பட்டுத் தமது தாயார் சவுத் பிரிட்ஜ் சாலையிலுள்ள ஸ்ரீ மாரியம்மனிடம் ஆசி பெற்று – தமயன் உறையும் லயன் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு எழுந்தருளினார். இந்த நாளில் மட்டுமே இவர்கள் ஒருசேர பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள்பாலிப்பர். இவ்வாண்டும் இந்நிகழ்வு குறைவற நடைபெற்றது. அன்றே நகரத்தார் காவடியும் சமர்ப்பிக்கப்பட்டது.
வைகறையில் தமது இல்லமான குளக்கரை தண்டாயுதபாணி ஆலயம் வந்து அருள்பாலித்தார். 17 ஆம் தேதி நள்ளிரவு சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து தலைமைப் பண்டாரம் பால் குடம் தாங்கி குமரன் ஆலயம் வந்தடைந்து வேலுக்குப் பாலாபிஷேகம் செய்தார். தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்திய பாலாபிஷேகம் தொடர்ந்தது. முற்றிலும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட – முன் பதிவு செய்து கொண்ட பக்தர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. தண்டாயுதபாணி ஆலயத் தைப் பூசம் என்றாலே தலை வாழை இலை – அறுசுவை அன்னதானம் பக்தர்கள் கண்முன் தோன்றும் .இன்றைய சூழல் ஏக்கத்தைத் தோற்றவித்து விட்டது. மாலையில் தண்டாயதபாணிப் பெருமான் சர்வ அலங்கார நாயகராக தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி – ஓதுவார் மூர்த்திகள் திருமுறைகள் ஓத ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார். ஆலய மேலாண்மைக் குழுவினர் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.