எங்கள் திருகோணமலை நகரத்து மண்ணில் இதயமாய், முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் உதயமாய், எங்கள் நகரத்து மக்களின் மனங்களில் இமையமாய், திருக்கோணேஸ்வரத்தை கண் கொண்டு பார்த்தபடி இருந்து, எங்கள் கோணேசபூமியை காத்தபடி அமர்ந்து, அன்னை ஶ்ரீ பத்திரகாளி எங்கள் நகரத்து மக்கள் எல்லோருக்கும் அருள் பாலிக்கின்றார்.
எல்லா ஆலயங்களையும் போலே இந்த ஶ்ரீ பத்திரகாளி ஆலயத்திற்கும் தல வரலாறு கர்ணபரம்பரைக் கதையாக உண்டு என்பதால் காளி தேவியின் சிறப்பை விளக்கி அந்த தலவரலாற்றுக் கதைகளை சுருக்கமாக தருகின்றேன்.
காளி தேவியானவள் காலத்திற்கும், மாறுதல்களுக்கும் தேவியாகக் கருதப்படுவதோடு, அந்த கங்காளனின் துணைவியாக காலங்களை கட்டுபடுத்தக்கூடியவராகையால், அந்த அன்னையை ஆதி பராசக்தி என்று நம்பிய எமது நகரத்தில் வாழ்ந்த எம் மண்ணின் முன்னோர்கள் அந்த தேவி மீதிருந்த அச்சத்தின் காரணமாக பண்டையகாலத்தில் இந்த ஆலயத்தின் மீது பயபக்தியுடனுன் ஆலயச் சூழலில் ஆச்சாரத்துடன் அனுஷ்டானமாக நடந்து கொண்டார்கள்.
இந்த ஆச்சாரத்தை புறக்கணித்து அனுஷ்டானங்களை மறந்து எகத்தாளமாக நடந்து அம்பாள் சன்னிதானம் முன்பாக தன் தலைவிரி கோலமாக இறுமாப்புடன் தன் தலையை திருப்பிச் சென்ற யாவகப் பெண்ணுக்கு அவர் தலையை அப்படியே இருக்க அம்பாள் செய்ததாகவும் எவராலும் அந்த யாவகப் பெண்ணைக் குணப்படுத்த முடியாத போது தன் தவறை உணர்ந்து பத்திரகாளித் தாயை வேண்டிய அந்த யாவகப் பெண்ணின் கனவில் தோன்றி அவர் தலைமுடியை காணிக்கை ஆக்கச் சொல்லி அன்னை கேட்டதாகவும் அந்த பெண்ணும் அதன் படி செய்ய அவர் திரும்பிய தலை சரியானதாகவும் ஒரு கதை உண்டு.
இதனை விட முற்காலத்தில் இக் கோவிலில் பூசை செய்துவந்த பிராணத் தம்பதிகளுக்கு ஒரு பெண்குழந்தையுடன் பாம்பும் பிறந்ததாகவும் அந்த பெண்குழந்தை திருமண வயதை அடைந்த போது சொத்து பாம்பிற்கும் சமமாக பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டதாகவும் தனக்கு எழுதிய சொத்துப்பத்திரத்தை அப்பாம்பு பெண்ணுக்கு கொடுத்ததாகவும் கூறும் கர்ணபரம்பரை கதை,ஒருநாள் ஆலயத்திற்கு வேண்டிய சமையல் பணிகள் நடக்கும் போது இந்த ஆலயத்தில் சுருண்டு படுத்திருந்த பாம்பின் மீது பாரமான பெரிய கிடாரமொன்றை தவறுதலாக வைத்தபோது இறக்கும் தருவாயில் அந்த சர்ப்பம் இட்ட சாபத்தினால் அதன் பிறகு இந்த ஆலயத்தில் பூசை செய்து வந்த அந்தணர் பரம்பரையில் எழு தலை முறை வரைக்கும் பெண்குழந்தைகள் மட்டும் பிறந்ததாகவும் மேலும் கூறுகின்றது.
இதற்கு எல்லாம் மேலாய் இந்த ஆலயத்தை பரிபாலித்து வரும் 'வேதாகமாமணி' சிவஸ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்களின் பெரிய தந்தையாராகிய பிரம்மஶ்ரீ சு.கு.குமாரசுவாமி குருக்களே ஏழாவது தலைமுறையில் பிறந்த முதலாவது ஆண் வாரிசாவர்.இந்த மரியாதைக்குரிய சு.கு.குமாரசுவாமி அவர்களே இன்றைய கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் அன்றைய கோணேஸ்வர வித்தியாலயத்தின் முதல் அதிபர் ஆனதால் தன் தம்பியாராகிய பிரம்மஶ்ரீ சு.கு. சோமாஸ்கந்தரிடம் காளி கோவிலை கையளித்தார்
அந்தவகையில் இன்றுவரை சிறப்பாக சிவஸ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்கள் அவர்கள் நிர்வகித்து வருகின்றார்.அத்தோடு இந்த திருக்கோவில் பங்குனி உத்தரத்தை தீர்த்தோற்ச்சவமாகக் கொண்டு பத்து நாட்கள் மகோற்ச்சவம் நடைபெறுகிறது.ஒன்பதாம் நாள் நடைபெறும் இரதோற்ச்சவத்தில் அங்கப் பிரதட்சணை செய்யும் ஆண் பக்தர்களும் அடிஅழிக்கும் பெண்பக்தைகளும் திரள காவடியும் பால் செம்பும் கற்பூர சட்டியும் அடியவர்கள் ஏந்த மோர்பந்தல் அன்னதானம் என எம் ஊரே விழக்கோலம்பூணும்.
இந்த திருவிழாவோடு
1. வைகாசிப் பொங்கல்
2. நவராத்திரி
3. கும்பவிழா
4. இலட்ச்சார்சனை
5. கேதாரகெளரி விரதம்
போன்றவை இந்த ஆலயத்தின் சிறப்பான திருவிழாக்களாகும்.
பேங்காக் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய விநாயகர் சதுர்த்தி விழா...
அஜ்மான் இந்திய சங்கத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.