இந்த பூமிப்பந்தில் சூரியபகவானால் சாயாதேவிக்கு பிறந்த சனீஸ்வரருக்கு பிரத்தியேகமானது எனக் கூறப்படும் திருநள்ளாறு தலத்தில் கூட தனிக் கோவில் இல்லாத சனீஸ்வரருக்கு, உலகத்தின் முதல் கோவிலான தனிக்கோவில் எமது திருகோணமலை நகரத்து மண்ணிலேயே கட்டப்பட்டது. மடத்தடிச் சந்திக்கு அருகாமையில் ஶ்ரீகிருஷ்ணன் கோவிலுக்கு எதிராகவும் வீரகத்திப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாகவும் உள்ள இந்த சனீஸ்வரன் கோவில்,
அன்றைய காலத்தில் அந்த ஶ்ரீகிருஷ்ணன் கோவிலின் ஆதீனகர்த்தராயிருந்த சிவஶ்ரீ கா.பஞ்சநாதக் குருக்களின் துணைவியாரான தர்மசம்ஹவவர்த்தினி அம்மையாருக்கு கிரகதோசம் காரணமாக சிக்கலான நோய்கள் ஏற்பட்டதனால் அந்த கிரகதோஷத்தை நீக்க அந்த தம்பதிகள் இந்த ஆலயத்தை அமைத்து தென் இந்தியாவில் இருந்து கருவறைக்குரிய விக்கிரகத்தை கொண்டு வரவைத்து 1885ம் ஆண்டு இந்தக் கோவிலை வழிபாட்டுக்காக பூரணப்படுத்தினர்.
காலம் எவருக்கும் கஷ்டத்தை தொடர்ந்து கொடுப்பதில்லை, வாழும் வாழ்க்கையில் ஏற்படும் தாழ்வும் உயர்வும் கிரகபலனாலோ இல்லை அதனால் இல்லையோ சிவஶ்ரீ கா.பஞ்ச நாதக் குருக்களுக்கும் அவரது தர்ம பத்தினி தர்மசம்ஹவவர்த்தினி அம்மையாருக்கும் ஏற்பட்ட சிக்கல்கள் யாவும் இந்த சனீஸ்வர பகவான் வழிபாட்டால் விலக அந்த கோவில் மீதும் சனீஸ்வரபகவான் மீதும் நம்பிக்கை கொண்ட எமது நகரத்து மக்களால் ஆலயம் சிறப்பாக பொலிவு பெற்றது என்பதோடு இது சனீஸ்வரன் மீதான பயமாக கூட இருக்கலாம் என்பது இந்த சிவனடியானின் கருத்தாகும்.
ஏனென்றால் இந்த சனீபகவான் நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் என்பதோடு, அந்த பரம்பொருள் எம்பெருமான் சிவனிடமே வரங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டவராவார்.
அத்தோடு இந்து மத நம்பிக்கையில் மனிதர்கள் அனைவருக்கும் வகுக்கப்பட்ட பன்னிரெண்டு ராசிகளிலும் சஞ்சாரம் செய்து அந்த ராசியை கடந்து சனிப் பெயர்ச்சி என்ற பெயரில் ஏழரைச் சனி, மங்கு சனி, பொங்கு சனி, தங்கு சனி, மரணச் சனி என நின்று தன்னை பக்தியுடன் வழிபடும் அனைவருக்கும் தோஷ நிவர்த்தி செய்யும் அந்த சனீஸ்வரருக்கு இந்த தலத்தில் “தாண்டிமரம்” தலவிருட்சமாக உள்ளது.
சிவஶ்ரீ கா.பஞ்சநாதக் குருக்களின் வம்சத்தவர்களினால் பரமரிக்கப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் சனிக்கிழமைகளிலும் புரட்டாதி சனீஸ்வர விரத காலங்களிலும் விசேட வழிபாடுகள் நடைபெறுகின்றன என்பதை பதிவு செய்து, உலகத்தின் முதல் தனிக் கோவிலாக எங்கள் திருகோணமலை நகரத்தில் உள்ள இந்த சனீஸ்வரன் கோவிலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளும் அந்த சனிபகவானுக்கு என் இந்த பதிவை சமர்ப்பணம் ஆக்குகின்றேன்.
- நமது செய்தியாளர் ஞானகுணாளன்
துபாய் நூலகத்துக்கு வழங்கப்பட்ட முதல் தமிழ் நூல்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.