தமிழ் மொழி விழா 2022ன் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கம், தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆதரவில், ஞாயிற்றுக்கிழமை 17 ஏப்ரல் 2022 அன்று ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) “நிற்க அதற்குத் தக” எனும் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சியை இணையம் வழியாக மிகச் சிறப்பாக நடத்தியது. யூனோய தொடக்கக் கல்லூரி மாணவி அனுமிதா முரளி பாடிய “வாழ்க தமிழ் மொழி” எனும் தமிழ்வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது.
சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர் வழங்கிய வரவேற்புரையில் “சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக நலப்பணிகளை தொடர்ந்து ஆற்றி வரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை 111 நிகழ்ச்சிகளை நடத்தி சாதனைப் படைத்துள்ளது என்றும், தமிழ் மொழி விழாவில் பல அமைப்புகளை ஒருங்கிணைத்து 44 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை வளர்தமிழ் இயக்கம் மெய்ப்பித்திருக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட மாணவர் அங்கத்தில் “புத்தாக்கம்” எனும் தலைப்பில் சிற்றுரையாற்றினார் நன் சியாவ் தொடக்கப்பள்ளி மாணவர் முஹம்மது ஷேய்க் ஷஹீம். அவரை ஊக்குவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் சு. மனோகரன் வழங்கிய வாழ்த்துரையில் “தமிழ் மொழி விழாவின் முக்கிய அம்சங்கள் தமிழ் மொழியைக் கொண்டாடுவதும், தமிழ் மொழியை வளர்ப்பதுமாகும் என்றும், தமிழ் மொழி விழாவில் எல்லா வயதினருக்கும் பொருத்தமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றும் எடுத்துரைத்தார்.
2021ஆம் ஆண்டு பொதுக்கல்வி உயர்நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற டி. பி. எஸ். சர்வதேசப் பள்ளி மாணவர் முஹம்மது முஹ்சின் கான் கல்வியில் சிறந்து விளங்குவதைப் பாராட்டி ஊக்குவிக்கும் வண்ணம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
“நிற்க அதற்குத் தக” என்ற தலைப்பில் தமிழாசிரியரும் பிரபல பேச்சாளருமான கவிஞர் ஜோ. அருள் பிரகாஷ் தமிழ் மொழியின் அழகையும் சிறப்பியல்புகளையும் நகைச்சுவைக் கலந்து ஒரு மணி நேரம் சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய சிறப்புரையில் “சேமித்த அறிவும் சிந்தித்த அறிவும் ஒரு பேச்சாளருக்கு அவசியம். திருக்குறளைப் பிரித்தால் பூ! இணைத்தால் மாலை! வணிகத்தில் தர்மம் கிடையாது; தர்மத்தில் வணிகம் கிடையாது. அழும்போதுகூட ஒழுங்குமுறையோடு அழுபவன் தமிழன். அடுத்தவர் துன்பத்தை தன் துன்பமாக நினைப்பதே அறிவுடைமை. மனித வாழ்வு சிறக்க வள்ளுவம் ஒன்றே போதும்! கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவசியம். தமிழ் மொழி வாழ்வியலைச் சொல்லிக் கொடுக்கிறது. படைப்பிலக்கியங்கள் தொடர்ந்து படைக்கப்படுவதால், தமிழ் மொழி இளமையாகவே உள்ளது. எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்; தமிழ் மொழியின் மீது பற்றுக் கொள்! சிந்தித்து சிந்தித்து செதுக்கப்பட்ட மொழி தமிழ் மொழி”என்று அரிய பல கருத்துக்களைச் சுவையாக எடுத்துரைத்தார்.
சங்கத்தின் செயலவை உறுப்பினர் ரியாஜ் அகமது இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக வழிநடத்தினார். சங்கத்தின் துணைத் தலைவர் கலந்தர் மொகிதீன், செயலவை உறுப்பினர் அப்துல் சுபஹான் ஆகியோரின் தகவல் தொழில்நுட்ப உதவியோடு தமிழ் மணம் கமழ இனிதே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.