தொன்னூறு ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க, தமிழ்த்தாத்தா உ.வே.சா.கருவில் உதித்து, வாகீச கலாநிதி கி.வா.ஜ.வால் வளர்க்கப்பட்டு, கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியத்தால் போஷிக்கப்பட்டு, திருவேங்கட ராஜனால் பிரகாசித்து தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் வலம் வரும் இலக்கியத் திங்கள் இதழ் ஏற்பாடு செய்த கலைமகள் விருது வழங்கு விழா ஏப்ரல் 17 ஆம் தேதி ஞாயிறு சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹா ஸ்வாமிகள் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கலைமகள் விருது வழங்கு விழா, கி.வா.ஜ. சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா, கா.ஸ்ரீ.ஸ்ரீ. கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா, மறக்க முடியாத மயிலை நூல் வெளியீட்டு விழா என அரங்கம் அதிர கலைமகள் சுவைஞர்கள் நிரம்பி வழிந்த அரங்கத்தில், முத்தாய்ப்பு நிகழ்வாக விருது வழங்கு விழா இடம் பெற்றது.
ஐஸ்வர்யா நடராஜன் இறை வணக்கப் பாடலுடன் நிகழ்வு தொடங்கியது. மூத்த வழக்கறிஞரும் இந்திய கூடுதல் சொலிஸிடர் ஜெனரலுமான ஆர்.சங்கரநாராயணன் தலைமை ஏற்றுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். வழக்கறிஞர் கே.சுமதி சிறப்புரை ஆற்றினார்.
முதல் நிகழ்வாக கி்.வா.ஜ.சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற அனுராதா ஜெய்ஷங்கர், நந்து சிந்து, மதுரா ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அடுத்து கா.ஸ்ரீ.ஸ்ரீ. கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசளித்துச் சிறப்பிக்கப்பட்டது. பாரதநாடு சுதந்திரம் பெற்ற 75 ஆம் ஆண்டினைச் சிறப்பிக்கும் வகையில் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் சிங்கப்பூர் மூத்த பத்திரிகையாளர் வெ.புருஷோத்தமன் உள்ளிட்ட பன்னிருவர் பரிசு பெற்றனர்.
முத்தாய்ப்பு நிகழ்வாக பலத்த கரவொலிக்கிடையே கலைமகள் விருது பெற்றவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் மூத்த பத்திரிகையாளர் வெ.புருஷோத்தமன், ஆடிட்டர் கலைமாமணி ஜெ.பாலசுப்பிரமணியன், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் என்.விஜயராகவன் ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர் ஆர்.சங்கரநாராயணன் பொன்னாடை போர்த்தி, எழிலார்ந்த கலைமகள் உருவச் சிலை பரிசளித்து விருது வழங்கி கவுரவித்தார். ஸ்ரீநிவாஸாசார்யா ராஜன் தொகுத்த மறக்கமுடியாத மயிலை நூல் வெளியீடு கண்டது.
முன்னதாக கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அறிமுக உரையாற்றினார். பி.டி.சுவாமிநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். கலைமாமணி சி.வி.சந்திரமோகன் நிகழ்வினைச் சுவைபட நெறிப்படுத்தினார். தேஜஸ் பவுண்டேஷன் அறங்காவலர் பேராசிரியர் கே.ஜி.ரகுநாதன் நன்றி நவில நிகழ்வு பெற்றது.
- தினமலர் வாசகர் தமிழ்க்கோ
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.