சிங்கப்பூரில் காயல்பட்டினம் நலனபிவிருத்தி சங்கம் ஆற்றி வரும் சமூக நலப் பணிகளின் ஓர் அங்கமாக, புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஓரறை வாடகை வீட்டில் தனிமையாக வசித்து வரும் முதியோர் வீட்டைச் சுத்தம் செய்து வீடு முழுவதும் வர்ணம் பூசி, புதுப் பொலிவுடனும் மகிழ்ச்சியுடனும் நோன்புப் பெருநாளைக் கொண்டாட புத்தாடைகளை அன்பளிப்பாக வழங்கி சேவையாற்றியுள்ளது.
“ஈகைத் திருநாளாகிய நோன்புப் பெருநாளைக் கொண்டாடவிருக்கும் நாம், அன்போடும் பரிவோடும் ஈகை உள்ளத்துடன் தனிமையில் வசிக்கும் முதியோரையும் வசதிக் குறைந்தோரையும் அரவணைப்பதன் மூலம் நாம் ஒன்றுபட்ட சமூகமாகத் திகழமுடியும்” என்று குறிப்பிட்டார் சங்கத்தின் தலைவர் ஹாஜி முஹம்மது சர்ஜூன்.
முதியோர் வீட்டில் வர்ணம் பூசி நற்பணிகள் செய்வதற்கு ஆதரவு வழங்கிய சங்கத்தின் புரவலர், மை டெக் இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜனாப் அப்துல் ரஹீம் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார், சங்கத்தின் நிறுவனரும் மதியுரைஞருமான ஹாஜி பாளையம் முஹம்மது ஹசன்.
2004ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட காயல்பட்டினம் நலனபிவிருத்தி சங்கம், கடந்த 18 ஆண்டுகளாக கல்வி உபகார நிதி, மருத்துவ உதவி, நோன்புத் துறப்பு நல்லிணக்க நிகழ்ச்சிகள், உணவுப் பொருட்கள் நன்கொடை, கருத்தரங்குகள், மாணவ மாணவிகளுக்கானப் போட்டிகள் உள்ளிட்ட சமூகநலப் பணிகளை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்
அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.