அயர்லாந்து தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்படும் தன்னார்வ அமைப்பான அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்தின் முதலாம் ஆண்டு விழா கடந்த சனியன்று சிறப்பாக நடைபெற்றது. கடந்த இரு ஆண்டுகளாக, கொரானா பாதிப்பால் காணொளி வாயிலாகவே நிகழ்வுகள் நடத்தப்பட்ட நிலையில், பொதுவெளியில் நிகழ்த்தப்பட்ட இந்நிகழ்விற்கு, அயர்லாந்து முழுவதிலுமிருந்து அயர்லாந்து கல்விக்கழக மாணாக்கரும், பெற்றோரும் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
விழாவைத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றிய அயர்லாந்துக்கான இந்தியத் தூதர் அகிலேஷ் மிஷ்ரா தமிழ் மொழியின் தொன்மை, உலகளவில் தமிழர்களின் சமூக, பொருளாதார பங்களிப்பு, தமிழர்களின் தாய்மொழிப் பற்று குறித்தும் உரையாற்றினார். அடுத்த தலைமுறைக்கு தாய்மொழியையும், பண்பாட்டையும் கொண்டு சேர்க்கும் அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்தின் தமிழ்த் தொண்டையும் மனந்திறந்து பாராட்டினார். தன்னார்வப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்தியத் தூதர் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்.
விழாவில், மாணாக்கர் வழங்கிய தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகள் பார்ப்போரைக் கவரும் விதத்தில் அமைந்திருந்தன. இவ்விழாவிற்காகக் குழந்தைகள் தமிழ்நாடு மற்றும் இந்தியா குறித்து வரைந்த ஓவியங்களும், செய்த மாதிரிகளும் காண்போரை வியப்பில் ஆழ்த்தின. ஆண்டு விழாவை முன்னிட்டு அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழக மாணாக்கருக்கு நடத்தப்பட்ட கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கருக்கு வெற்றிப் பதக்கம், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அயலகத்தில் நிகழும் இத்தகைய விழாக்களே, தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பதாக விழாவில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் பற்றி:
கடந்த 2020 - ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், அயர்லாந்தின் தமிழ் ஆர்வலர்கள் ஒன்பது பேர் இணைந்து, அயர்லாந்து அளவில், தமிழ்க் கற்றுக்கொடுக்கப்படத் தேவையான பாடத்திட்டத்தையும், வரையறைகளையும் தீர்மானித்து - தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாக - அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்தைத் தன்னார்வ அமைப்பாக உருவாக்கி, தமிழ்மொழிக் கல்வி, கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களைக் கற்றுக் கொடுப்பதை முதன்மை நோக்கமாகத் தீர்மானித்தனர். பல்வேறு நிலைகளில் கல்வியாளர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு, திட்டங்கள் தீட்டப்பட்டு - அயர்லாந்து தமிழ்க் கல்விக் கழகத்தின் நோக்கம் மற்றும் தொலைநோக்கு இறுதி வடிவம் பெற்றது.
இதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் அறிஞர்களின் வழிகாட்டுதலோடு, கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி எனும் இலட்சிய வாக்கோடு 2020 ஆண்டு அக்டோபர் இரண்டாம் வாரத்தில் அயர்லாந்திற்கான அப்போதைய இந்தியத் தூதர் மேதகு. சந்தீப் குமார் அவர்களால் இணையம் வழியாக, முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. ஆரம்ப நாள் முதலே, சாதி, சமய, அரசியல் சார்பற்ற, இலாப நோக்கமற்ற, தமிழ் மொழி, தமிழ் கலாச்ச்சாரப் பண்பாட்டு விழுமியங்களை இளம் தலைமுறையினர் மத்தியில் எடுத்துச் செல்லப் பணியாற்றும் தன்னார்வ அமைப்பாகச் செயல்பட உறுதி பூண்டு, பல்வேறு சவால்களைக் கடந்து திறம்பட பணியாற்றி வருகிறது. தற்போது, அயர்லாந்தில் வாழும் தமிழ்க் குழந்தைச் செல்வங்களுக்கு 30-ற்கும் மேற்பட்ட தன்னார்வ ஆசிரியர்கள் நம் தாய்மொழியைப் பயிற்றுவிக்கின்றனர். கலிஃபோர்னிய தமிழ்க் கல்விக்கழகத்தின் பாடத்திட்டத்தைத் தழுவிய இத்தமிழ்க் கல்வி வகுப்புகள் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. தங்களது பணிச் சுமைகளுக்கு மத்தியில், தன்னார்வ ஆசிரியர் பெருமக்கள் சேவை உள்ளத்தோடு - நம் தாய்மொழியைச் சிறப்புற கற்றுத் தருகிறார்கள்.
மேலும், பெரியவர்கள் மத்தியில் தமிழ் மொழியையும், கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களையும் எடுத்துச் செல்லவும் தொடர்ந்து கருத்தமர்வுகளையும் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறது.
நோக்கம்
உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழியின் மொழி வளம், வாழ்வியல் நெறிமுறைகள், பண்பாட்டு விழுமியங்களைப் பரந்துபட்ட புரிதலோடு, அனைத்து மக்களுக்கும் தமிழ்க் கல்வி மூலம் கொண்டு சேர்த்தல்.
தொலை நோக்கு
அயர்லாந்து தமிழ்க் கல்விக் கழகம் தமிழ் மொழியின் மேன்மையைப் பறைசாற்றி, உலகளாவிய பார்வையோடு, உயர்தரத் தமிழ் மொழிவளர் மையமாக உருவெடுத்து, அனைவரின் ஒத்துழைப்போடு தமிழ் மொழி,கலை, இலக்கியம், பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றும்.
- நமது செய்தியாளர் ரமேஷ் குருநாதன்
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
மே 4, காணொலி வழி திப்பு சுல்தான் நினைவேந்தல் நிகழ்ச்சி...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.