ஜெர்மனியில் தமிழர்களுக்கு சூரியகாந்தி எண்ணெய் தட்டுப்பாடு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

ஜெர்மனியில் தமிழர்களுக்கு சூரியகாந்தி எண்ணெய் தட்டுப்பாடு

மே 13,2022 

Comments

உலகில் யாரும் தன்னிச்சையாக இயங்க முடியாது என்பதை ரஷ்ய உக்ரைன் போர் அழுத்தந்திருத்தமாக மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. உக்ரைனில் விழுந்த அடி, ஐரோப்பிய எண்ணெய் மார்க்கெட்டில் மிகப்பெரிய வீக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது. உலகின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யா தான் சூரியகாந்தி எண்ணெயினை சப்ளை செய்து வந்தது. எந்த ஒரு விஷயமுமே நல்லபடியாக நடந்து கொண்டிருக்கும் போது அதன் அருமை யாருக்கும் தெரியாது. பிரச்சினை வரும் போதுதான் என்ன, ஏது என்று காரணங்களை மக்கள் தேட ஆரம்பிக்கின்றனர். அந்த வகையில் இந்த யுத்தம் சூரியகாந்தி எண்ணெய்க்கான சப்ளைசெயினை மக்கள் விரும்பாமலேயே வெட்டி துண்டாடியிருக்கிறது.

ஐரோப்பிய சந்தையைப் பொறுத்தவரையில் இந்த வருட பெப்ருவரி மாதத்தில் 1000 லிட்டர் எண்ணெய் 1433 ஈரோ வாக இருந்தது. போரின் உக்கிரத்தால் ஒரே மாதத்தில் 2885 ஈரோ வாக உயர்ந்தது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கணக்கு படி, மார்ச் மாதத்தில் மட்டும் 23.2 சதவீதம் வெஜிடபிள் எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை நிரந்தரமாக குறைய வேண்டுமென்றால், பிற நாடுகளும் சூரியகாந்தி பயிரிட்டு, எண்ணெய் விற்பனைக்கு வந்தால் மட்டுமே சாத்தியம். தற்போது ஐரோப்பிய எண்ணெய் வியாபாரிகள், தென் அமெரிக்காவில் சூரியகாந்தி விதைகளை வாங்கி எண்ணெய் உற்பத்தியை தொடங்கியுள்ளனர்.

ஜெர்மனியைப் பொறுத்தவரையில் போரின் தொடக்கத்தில், கடைகளில் ஒரு ஆளுக்கு ஒரு லிட்டர் பாட்டில் மட்டுமே கொடுக்கப்படும் என்று பேப்பரில் எழுதி ஒட்டி இருந்தார்கள். மேலதிக பாட்டில் எடுத்திருப்பவர்களிடமிருந்து பணம் கட்டும் இடத்தில் இருக்கும் ஊழியர், திரும்ப வாங்கிக் கொள்வார். மார்ச் மாத கடைசியில் அந்த ஒரு பாட்டிலும் கிடைக்காமல் போனது. கடைக்குள் நுழைத்து சூரியகாந்தி எண்ணையை இருக்குமிடத்தைப் பார்த்தல் காலியாகத்தான் இருக்கும். பலரின் பார்வைகள், பணம் வாங்காமலேயே அங்கு காவல் காத்துக்கொண்டிருக்கிறது. சில கடைகளில் நான் கேட்கும் போது இன்னும் ஒரு மாதம் ஆகும் என்ற பதிலே வந்தது.

கடந்த மாத தொடக்கத்தில் பிராங்க்ஃபர்ட் ல் உள்ள தமிழ் கடைக்கு சென்றிருந்தேன். சூரியகாந்தி எண்ணைக்கான கூட்டம் அலை மோதியது. விளைவு - அங்கேயும் விலை கூடியது. இந்த சமயத்தில் ஜெர்மானிய கடைகளில் ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெயின் விலை 4.99 ஈரோ வரை சென்றது. ஜெர்மானியர்கள் உபயோகிக்கும் ஆலிவ் போன்ற மற்ற எண்ணெய்களை நம் அன்றாட சமையலில் (தாளிக்க, மற்றும் இறைச்சி, மீன் பொறிக்க) உபயோகிக்க முடியாததால் மீண்டும் இந்திய மற்றும் தமிழ் கடைகளில் கூட்டம். ஒரு கட்டத்தில், சூரியகாந்தி எண்ணெய் அங்கேயும் தீர்ந்துபோக, மாற்றாக கடலை எண்ணெய் ஆபத்பாந்தவனாக கை கொடுத்தது.

நேற்று ஒரு ஜெர்மன் கடைக்கு சென்றிருந்தேன். தாய் தந்தை மற்றும் 5 வயது சிறுமி என மூவரும் கடையிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் கையிலும் ஒரு சூரியகாந்தி எண்ணெய் பாட்டில். தேவை தான் பிறரை ஏமாற்றத் தூண்டுகிறதோ?

-நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us