மறக்க முடியாத மதுரை பயணம் -ஷீலா ரமணன் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

மறக்க முடியாத மதுரை பயணம் -ஷீலா ரமணன்

ஆகஸ்ட் 12,2022 

Comments

 அமெரிக்காவில் இருந்து ஆறு வார விடுமுறையில் இந்தியா பயணம். திட்டமிட்டபடி நடுவில் இரண்டு நாட்கள் மதுரைக்கு போக நானும் என் கணவர் வெங்கட்டும் முடிவெடுத்தோம். எனது தம்பியின் ஹோண்டா காரில் கிளம்பினோம். சென்னையில் இருந்த நாட்கள் முழுவதும் காரை எங்களுக்கே கொடுத்து விட்டான். தம்பிக்கு இரு டிரைவர்கள் உண்டு. ஆண்ட்ரூ மற்றும் விஜி. இருவருமே நன்றாக வண்டி ஓட்டுபவர்கள். அன்று டிரைவர் ஆண்ட்ரூ எங்களை அழைத்துச் சென்றார்.

காலை ஆறு மணி அளவில் சென்னையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டோம். முதலில் எங்கள் தினமலர்  இணையதள செய்திப் பிரிவு ஆலோசகர் மற்றும் எனக்கு தந்தை போல விளங்கும் திரு.இளங்கோவன் அவர்களையும் அம்மாவையும் சந்திக்க முடிவு செய்திருந்தோம். அவர்களை சந்திக்க வேண்டும் என்பது நான்கு வருட பிளான்!

சென்னையில் இருந்து போகும் வழியில் எல்லாம் பலவித ஹோட்டல்கள். அமெரிக்காவில் நம் சவுத் இந்தியன் உணவு அதுவும் வெஜிடேரியன் ஹோட்டல்கள், பயணம் மேற்கொள்ளும் வழிகளில் கிடையவே கிடையாது. இங்கு பயண வழிகளில் உணவுக்கு பஞ்சமே இல்லை. வழியில் எங்கு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

அவ்வாறே 'முருகன் இட்லியில்' சுடச்சுட சர்க்கரைப் பொங்கலுடன் காலை உணவும் காபியும் சாப்பிட்டு விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். மதியம் பனிரெண்டரை மணியளவில் இளங்கோவன் அப்பா வீட்டிற்குச் சென்றோம். ஆவலோடு காத்திருந்த அம்மா பெருமகிழ்வுடன் வரவேற்றார். மதிய உணவுடன் அன்பும் சேர பேசிக்கொண்டே சாப்பிட்டோம். மிக இனிமையான நேரங்கள் அவை! எங்கள் மேல் வைத்திருந்த அன்பின் வெளிப்பாடு மிக நன்றாகத் தெரிந்தது. அவரிடம் பணியாற்றும் ஒரு செய்தியாளர் ஆக என்னை நினைக்கவில்லை,சொந்த மகளிடம் காட்டும் பாசத்தைக் காட்டினார்கள் இருவரும்! சில மணி நேரங்கள் இருந்துவிட்டு பிரியாவிடையுடன் நண்பர் ராஜகுரு-சுதா மற்றும் அவர்கள் குடும்பத்தை சந்திக்க கிளம்பினோம்.

போகும் வழியில் நான் மதுரையில் ஏதாவது வாங்கியே ஆகணும், சாஸ்திரம் என்று என் கணவருக்கு செலவு வைக்க ‘மேக்ஸ்’ எனும் உடை கடைக்குள் சென்று மனதுக்கு திருப்தியாக சில டிரஸ்கள் வாங்கிக்கொண்டேன்.

மாலை ஆறு மணி அளவில் ராஜகுருவை சந்தித்தோம். அவர் தமிழக அரசின் கொடி பறக்கும் சைரன் வைத்த இன்னோவா காரில் வந்திருந்தார். சுதாவையும் ராஜகுருவின் அம்மா அவர்களையும் சந்தித்த பின் நான் அந்தக் காரில் ஏறிக் கொண்டேன். ராஜகுருவும் சஞ்சய்யும் எங்கள் காரில் என் கணவரோடு இணைந்து கொண்டனர். இன்னோவா காரை ஓட்டி வந்த டிரைவர் கார்த்திகேயனைப் பற்றி நிறைய சொல்லலாம்.

கார்த்தி அவ்விரு நாட்களும் டிரைவர் மட்டுமல்ல, நல்லதோர் கைடாகவும் திகழ்ந்தார். மதுரையைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரிந்திருந்த எங்களுக்கு அவ்விரு நாட்களும் ஒவ்வொரு சந்து-பொந்து, தெரு வீதிகளின் சிறப்புகள், வழியில் தென்பட்ட கட்டிடங்கள், கடைவீதிகள், எங்கெங்கு எதுவெல்லாம் சாமான்கள் கிடைக்கும் என கலகலப்பாகவும்,விளையாட்டாகவும் மிக விளக்கமாகக் கூறியபடியே வந்தார். அதுமட்டுமல்ல 'கள்ளழகர்' வைகை ஆற்றில் வந்து இறங்கும் கதையை அவரது நேட்டிவிட்டி மதுரைத் தமிழில் அழகாக கூறியது மறக்க இயலாது.

பல அரசியல் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் முதல் நேற்றைய முதலமைச்சர் என பலர் அந்த வண்டியில் வந்த கதைகளும் காமெடியாக கூறினார். எங்களை குஷிப்படுத்த ரோட்டில் இரண்டு முறை சைரன் ஒலிக்கச் செய்து அரசு மரியாதையாக மக்கள் வழிவிட நாங்கள் சென்றது மிகவும் வேடிக்கை!

இரவு உணவிற்கு முன் நாங்கள் 'தெப்பக்குளம்' காணச் சென்றோம். ஓர் சுற்றுலா இடம் போல மக்கள் குளத்தைச் சுற்றி குடும்பத்தோடு கூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், புகைப்படங்கள் எடுத்தபடியும் குதூகலித்துக் கொண்டிருந்தனர். பின் 'புதுமண்டபம்' சென்று சிறிது நேரம் ஷாப்பிங்! பின்பு 'ஹோட்டல் சபரீஷ்' சென்றோம்,அங்கு உணவு சிறப்பாக இருக்கும் என்றனர். அதுபோலவே அனைத்து ரகங்களும் சுவையாகவே இருந்தன. ஊத்தப்பம் வெரைட்டி அங்கு பிரபலம்!

அன்று இரவு ராஜகுரு மதுரையில் கட்டியுள்ள புது வீட்டில் தங்கினோம். 6 வீடுகள் கொண்ட மிக அழகான அபார்ட்மெண்ட். மேல் மாடியில் தங்களுக்கென்று ஓர் 'பென்ட் ஹவுஸ்' காட்டியுள்ளார். அங்கு தான் தங்கினோம். நம் டிரைவர் ஆண்ட்ரூ விற்கும் தனி ரூம் கொடுத்து விட்டார். அவர்கள் அம்மாவும் குடும்பமும் நம்மை மிக அருமையாக கவனித்துக் கொண்டனர்.

மறுநாள் விடியற்காலை உலகப் பிரசித்தி பெற்ற 'மீனாட்சி அம்மன்' கோவிலுக்குச் செல்ல திட்டம். பல தடவை பார்த்த கோவில் என்றாலும் அதன் தல வரலாற்றுச் சிறப்பும், கோவிலின் அம்சங்களும் புது ஈர்ப்பை எப்போதும் ஏற்படுத்தும்! அன்று குழந்தை சியா விற்கு பிறந்தநாள். சுதாவின் (தம்பிகள்) மாமா மகன்கள் சுரேஷ்-வசந்த் வந்து இரவு 12 மணியளவில் அவளுக்கு 'கேக்' வெட்டி சந்தோஷப்படுத்தினர். சியாவிற்கு இது மறக்க முடியாத பிறந்த நாளாக இருக்கும்.

சியாவிற்கு மட்டுமல்ல எங்களுக்கும் மறக்க முடியாத காமெடி ஒன்று நடந்தது. அது புத்தம்புது வீடு என்பதால் சில வேலைகள் இன்னும் நடந்து கொண்டிருந்தது. அதில் ஒன்று அன்று மின்விளக்குகள் அணைந்தும்-எரிந்துமாக சில பிரச்சனைகள் ஏற்படவே சுதாவின் தம்பி சுரேஷ் சரி பார்க்கத் துவங்கினார். போனில் யாரிடமோ பேசியபடி வெளியே சென்ற அவர், மீண்டும் உள்ளே வரும்போது ஒரு பையனுடன் வந்தார். இருவரும் நேரே உள்ளே சென்றனர்.

எனக்கோ ஆச்சரியம்! இரவு பதினோரு மணிக்கு கூட மதுரையில் எலக்ட்ரீசியன் கிடைத்துவிட்டாரே என்று நான் சொல்ல சுதா குபீர் என்று சிரித்தபடி,'ஷீலா, அது என் தம்பி வசந்த்’ எனக் கூற, எனக்கோ வெட்கமாகிவிட்டது. அடச்சே, சொந்தக்கார பையனை,அதுவும் கூப்பிட உடன் ஓடி வந்த பையனை எலக்ட்ரீசியன் என்று கூறிவிட்டோமே என்று. ஆனால் அவர்கள் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் கேலி கிண்டலுடன் அன்று இரவு அமர்க்களமாய் இருந்தது.

திட்டமிட்டபடி மறுநாள் காலை 6 மணியளவில் கோவிலுக்கு கிளம்பினோம். நான் சொன்னேன் அல்லவா டிரைவர் கார்த்தியைப் பற்றி. அன்று அவருக்கு இருக்கும் செல்வாக்கையும் காண்பித்தார். கோவிலின் உள்ளே கூட்டத்தில் நிற்காமல் நாம் விரைவில் உள்ளே சென்று அழகு தெய்வமான 'ஸ்ரீ மீனாட்சி அம்மனை' கண்குளிர இரு முறை மிக அருகில் தரிசிக்கவும் உதவினார்! அவருக்கு நன்றி கூறி விட்டு பிரகாரத்தில் அருமையான பிரசாதம் வாங்கி சாப்பிட்டோம்.

நன்கு தரிசனம் முடிந்து ஹோட்டல் ஆனந்த பவனில் காலை உணவு உண்டோம். நாங்கள் சென்னைக்கு திருப்பும் பயணம் இருப்பதால்,வீட்டிற்குத் திரும்பி அவர்களிடமிருந்து விடை பெறுகையில் ராஜகுருவின் அம்மா,கலங்கிய கண்களுடன் 'தொலைதூரத்தில் இருக்கீங்க, அண்ணன்-தம்பி போல ஒத்துமையா இருங்க' என ஆசிர்வதித்து வழி அனுப்பியது என்றும் மறக்க இயலாது. நாங்கள் சென்னைக்கு கிளம்பினோம்,அவர்களும் கிராமத்திற்கு கிளம்பினார்கள்.

இது ஒரு நட்பும் உறவும் கலந்த மறக்க இயலாத ஓர் சந்திப்புப் பயணம்!
Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us