சிங்கப்பூரிலுள்ள கூத்தாநல்லூர் சங்க வெள்ளி விழா அக்டோபர் திங்கள் 16 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஜலான் புசார் நகர மன்றத் தலைவரும் கோளம் ஆயர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான டாக்டர் வான் ரிஜால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கவுரவித்தார். வெள்ளி விழாவோடு குடும்ப தினம், ஹஜ்ஜீப் பெருநாள் ஒன்றுகூடல் – மற்றும் இஸ்லாமியப் புத்தாண்டு முஹர்ரத்தைப் பல இன சகோதரர்களுடன் இணைந்து நடத்தியது சிறப்பாகும்.
நிகழ்வில் இளைஞர்கள், –சிறார்களுக்கான மணல் கலைச் சிற்பங்கள் செயல் விளக்கம், சுவாரஸ்யமான மேஜிக் ஷோ முதலியவைகளும் இடம் பெற்றன. மணல் சிற்பங்களைக் கையில் எடுப்பதற்கும் மணல் கலைச் சிற்பங்களைச் செயல் முறையில் செய்து காட்டிய சிற்பிகளிடமிருந்து கற்கவும் நீண்ட வரிசையில் சிறார்கள் காத்திருந்தது அவர்களின் ஆர்வத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. சிறார்களுடன் குடும்பத் தலைவர்களும் பங்கேற்றது உற்சாகத்தை அளித்தது.
முத்தாய்ப்பு நிகழ்வாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் பயிற்சி மூன்றாவது பிரிவு வாரண்ட் அதிகாரி ரசாலி பின் ஒத்மான் தமது குழுவினருடன் பங்கேற்று இதய மீட்பு போன்ற முதலுதவித் திறன்களை அறிந்து கொள்ளுவதன் முக்கியத்துவத்தை விளக்கினார். திடீரென ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உயிரைக் காப்பாற்ற ஏ ஈ டி பயன்படுத்துவது பற்றியும் செயல்முறை விளக்கமளித்தார். எட்டு முதல் எண்பது வயது வரையுள்ளோர் இதில் பங்கேற்றனர்.
நஸ்ஹத் பஹீமா, பவித்ரா நந்தனன் மேனன் ஆகியோர் மகளிர்க்கான தன்முனைப்பு உரையாற்றி ஊக்குவித்தனர். நூருல் ஹீதா குழுவினரின் இஸ்லாமிய மெல்லிசைப் பாடல்கள் பலத்த கரவொலியோடு வரவேற்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட கூத்தாநல்லூர் சங்கம் மக்களுக்குப் பயன்தரத் தக்க பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செய்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்று வருவது குறிப்பிடத் தகுந்ததாகும். அமைப்பின் இளைய சங்கத் தலைவர்கள் மற்றும் செயலவை உறுப்பினர்களைக் கொண்ட குழு விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
அமைப்பின் தலைவர் சடையன் அப்துல் அலீம் ஏற்பாட்டுக் குழுத் தலைவராகவும் ஆதம் சாஹீல் ஹமீது துணைத் தலைவராகவுமிருந்து நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக அமைய மேற்கொண்ட முயற்சியை அனைவரும் பாராட்டினர். கடந்த மூன்று ஆண்டுகளாக கோவிட் பெருந்தொற்றால் நடைபெறாமலிருந்து இவ்வாண்டு வெள்ளி விழாவாகப் பரிணமித்தது அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. பெருந் திரளாக இப்பகுதி மக்கள் கலந்து கொண்டது ஏற்பாட்டாளர்களைக் குதூகலிக்கச் செய்தது.
- நமது சிங்கப்பூர்ச் செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.