சிங்கப்பூர் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் ஸ்ரீ கந்த சஷ்டி மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு நாட்கள் பக்தப் பெருமக்கள் கடும் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபடுவர்.இவ்வாலயத்தில் அக்டோபர் 25 முதல் 30 வரை சஷ்டித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
நாள்தோறும் கந்தர் அனுபூதி திருப்புகழ் பாராயணமும் சத்ரு சம்ஹார த்ருஸதி அர்ச்சனையும் நடைபெற்றன. முருகப் பெருமானுக்கு விசேஷ அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. 29 ஆம் தேதி ஸ்ரீ விசாலாட்சி அம்பிகையிடமிருந்து முருகப் பெருமான் வேல் வாங்கிய காட்சி பக்தப் பெருமக்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. முப்பதாம் தேதி மாலை முருகப் பெருமான் சர்வ அலங்கார நாயகராக கோபாக்கினியாக எழுந்தருளி கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன் உள்ளிட்ட அசுரர்களை வதைத்த காட்சியின் போது பக்தர்கள் உருக்கமாக “ வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா “ என்று முழங்கியது மெய்சிலிர்க்க வைத்து விண்ணை எட்டியது.
சண்முகா அர்ச்சனை, தீப மங்கல ஆராதனை கண்கொள்ளாக் காட்சியாக மிளிர்ந்தது. பெருந்திரளான பக்தப் பெருமக்கள் கலந்து கொண்டு முத்தமிழ்த் தெய்வமாம் முருகப் பெருமானை தரிசித்து அருள்பெற்றுச் சென்றனர். நிறைவாக திருக் கல்யாண உற்சவமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆலய மேலாண்மைக் குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தொண்டூழியர்களின் ஒத்துழைப்பு பாராட்டத் தக்கதாக அமைந்தது. பங்கேற்ற அனைவரும் அருட்பிரசாதத்துடன் அன்னப் பிரசாதமும் பெற்று மகிழ்ந்தனர்.
- நமது சிங்கப்பூர்ச் செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.