சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் எழுந்தருளி சிங்கை மக்களுக்கு அருள் வெள்ளத்தை அள்ளித் தரும் கருணையே வடிவான அன்னை ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயத்தில் அக்டோபர் முப்பதாம் தேதி சூர சம்ஹார மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இருபத்தைந்தாம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவில் பக்தப் பெருமக்கள் பக்தி வெள்ளத்தில் மிதந்தனர்.
ஆறு படை வீடுகளும் – குன்றுதோராடி வரும் குமரனோடு சர்வ அலங்கார நாயகர்களாக வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்த அற்புதக் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. கந்தனின் அலங்காரத்தைக் கண்ணாரக் காண நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 29 ஆம் தேதி அன்னை ஸ்ரீ காளிகாம்பாவிடமிருந்து கந்த வேள் ஞானவேலைப் பெற்ற காட்சி பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
31 ஆம் தேதி மாறுபடு சூரரை வதைத்த காட்சியைக் காணாத கண் என்ன கண்ணே எனுமாறு தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டது. கஜமுகா சூரன், சிங்கமுகாசூரன் உள்ளிட்ட அசுரர்களை ஆக்ரோஷத்தோடு ஆறுமுகன் வதைத்த காட்சி கண்டு பக்தப் பெருமக்கள் உருக்கத்தோடு “ வெற்றி வேல்...வீர வேல் ...கந்தனுக்கு அரோகரா, கதிர் வேலனுக்கு அரோகரா ..” என முழங்கியது விண்ணை எட்டியது. நிறைவாக சுப்பிரமணியரின் வேலால் வதம் செய்யப்பட்டு கோழியாக உருவெடுத்த சூரனைக் கருணைக் கடலான கந்தப் பெருமான் அருள்பாலித்து தமது கொடியாகப் பரிணமித்து உய்வித்த காட்சி பக்தர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
31 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவத்துடன் மஹோற்சவம் நிறைவு பெற்றது. பெருந்திரளாகப் பங்கேற்ற பக்தர்களுக்குத் தரிசிக்கவும் பிரசாதம் பெறவும் விரிவான ஏற்பாடுகளை மேலாண்மைக் குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.