வண்ண மின் விளக்கு அருட்சுடராய்ப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் கோலாகலமாய் நடைபெற்ற கந்த சஷ்டி மஹோற்சவத்தின் நிறைவு விழாவாக அக்டோபர் 31 ஆம் தேதி வள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியப் பெருமானுக்குத் திருக் கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தெய்விக நாதஸ்வர இசை முழங்க மங்கல மகளிர் வரிசை எடுத்து ஆலயம் வலம் வர மணமக்கள் வரவேற்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோத்திர அறிவிப்புக்கு பின் திருமணச் சடங்குகள் தொடங்கின. தெய்விகத் தம்பதிகளின் சம்பந்திகள் தட்டு மாற்றிக் கொண்டு சங்கல்பம் செய்து கொண்டனர். அம்மி மிதித்து – அருந்ததி பார்த்து – அப்பளம் தட்டி – வரி சங்கம் நின்றோத - பூச்செண்டாட தெய்விகத் தம்பதிகள் மாலை மாற்றிக் கொண்டனர். தி
ருமாங்கல்யம் பக்தர்களிடை வலம் வந்து ஆசி பெற்றது. தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் மங்கல நாணைப் பக்தர்கள் பார்வைக்கு சமர்ப்பி்த்தார். அசுரர்களை வதம் செய்து கோழிக் கொடியாய் அருள்பாலித்த குமரன் – வேலாயுதன் கம்பீரமாக வீற்றிருக்க திருமண மந்திரங்கள் முழங்க வள்ளி தெய்வானைக்கு திருமாங்கல்யதாரணம் அற்புதமாக நடைபெற்றபோது பக்தப் பெருமக்கள் உருக்கத்தோடு “ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.... கந்தனுக்கு அரோகரா – கதிர் வேலனுக்கு அரோகரா என முழக்கமிட்டது விண்ணை எட்டியது.
சர்வ அலங்கார நாயகர்களாக சுப்பிரமணிய சுவாமி – வள்ளி – தெய்வானை தம்பதிகள் கருணையே வடிவாக எழுந்தருளி அருள்பாலித்தமை கண்கொள்ளாக் காட்சியாகும். பக்தர்கள் மொய் எழுதி வழிபட்டது அனைவரையும் ஈர்த்தது. திருமண இல்லத்தில் விருந்து இல்லாமலா ? அருள் விருந்தோடு அறுசுவை விருந்தும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேலாண்மைக் குழுத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் அனைத்து ஏற்பாடுகளும் அனைவரும் பாராட்டும் வண்ணம் செய்யப்பட்டிருந்தது. தொண்டூழியர்களின் சேவை பாராட்டுக்குரியது. ஒரு கிழமைக்காலம் நடைபெற்ற கந்த சஷ்டி விழா திருக்கல்யாணத்துடன் நிறைவு கண்டது.
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.