நாற்பதாண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது முத்திரைத் திருவிழாவான கவியரசு கண்ணதாசன் விழாவை நவம்பர் 19 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடத்தியது. கண்ணதாசன் பாடல் போட்டி – விருது வழங்கல் – சிறுவர்க்கான பாடல் போட்டி – நாட்டியாஞ்சலி – சூழலுக்கேற்ற பாடல் எழுதுதல் போட்டி என பல்சுவை நிகழ்ச்சிகளாகக் கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவுக்கு கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமை ஏற்றார்.
தேசிய நூலக வளாக அரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சிங்கப்பூர் அமைச்சு சமூக கலாச்சார – இளையர் துறை மூத்த நாடாளு மன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கவுரவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த இசைக்கவி ரமணன் “ கவியரசின் திரைப்பாடல்களில் இலக்கிய நயம் “ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இவ்வாண்டுக்கான கண்ணதாசன் விருது பலத்த கரவொலிக்கிடையே சுபாசினிக்கு வழங்கப்பட்டது. கழகத்தின் மேனாள் செயலாளர் அமரர் சுப.அருணாசலம் நினைவாக நடைபெற்ற சூழலுக்கான பாடல் எழுதும் போட்டியில் கவிஞர் சீர்காழி உ.செல்வராஜ் முதல் பரிசு பெற்றார். சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் பற்றி எழுதப்பட்ட பாடலில் முதற் பரிசு பெற்ற இப்பாடல் இசையமைக்கப்பட்டு விழாவில் ஒலியேற்றப்பட்டது.
பாட்டுத் திறன் போட்டியில் பதினான்கு வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கான போட்டியில் ஆதர்ஷ அக்னி முதற் பரிசு பெற்றார். சிங்கப்பூரின் பிரபல இலக்கியப் பேராசான் முனைவர் மன்னை ராஜகோபாலன் தலைமையில் பாட்டுப் போட்டிக்கான நடுவர் குழு அமைக்கப்பட்டு பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சக்தி நுண்கலைக் கழக தேவி வீரப்பன் நாட்டிய மணிகள் திருவருட்செல்வர் திரைப்படத்தில் இடம் பெற்ற “ மன்னவன் வந்தானடி “ என்ற பாடலுக்கு நாட்டியமாடி விழாவுக்கு முத்தாய்ப்பு வைத்து அசத்தினர்.
பாரதி முரளியன் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. கழகச் செயலாளர் கிருத்திகா வரவேற்புரை ஆற்ற கவிஞர் கோ. இளங்கோவன் நன்றி நவில அரங்கம் நிறைந்த கண்ணதாசன் விழா நிறைவு கண்டது.
- நமது செய்திளயாளர் : வெ.புருஷோத்தமன்
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.