புல்லாங்குழல், மிருதங்கம், பரதம், குச்சுப்புடி, சிலம்பம் போல நம் பாரம்பர்ய கலைகளை உள்ளூரில் எத்தனை பிள்ளைகள் படிக்கிறார்கள்; படிப்பிக்கப்படுகிறார்கள் என தெரியாது. இங்குள்ள ஆரவார- படிப்பு- டியூஷன்- சினிமா- தொலைக்காட்சி-சமூக வலைதள ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே மாணவர்களுக்கு இவற்றின் மேல் கவனம் என்பது சற்று கடினம்தான்.
ஆனால் வெளிநாடுகளில் குறிப்பாய் நவீன உலகமாய் பார்க்கப்படும் அமெரிக்காவில் இவற்றுக்கு பஞ்சமில்லை. ஊரை விட்டு தள்ளியிருப்பதால் நம் பாரம்பரியம்- கலாச்சாரங்களை பிள்ளைகள் அறியாமல் போய் விடக் கூடாது—தடம் மாறி விடக் கூடாது என்கிற பயமும் அக்கறையும் பெற்றோர்களிடம் இருப்பது நிஜம். அநேகமாய் இந்திய-குறிப்பாய் தென்னிந்திய குழந்தைகள் இந்த பயிற்சிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இதற்காக பஜன்ஸ், திருக்குறள், திருவாசகம்,இசைக்கருவிகள் பரதம், குச்சுபிடி,சிலம்பம் என நேரிடை பயிற்சி. அதற்கு வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ஆன்லைன்! அப்படி UK, US,சிங்கப்பூர், மலேசியா,அரபு நாடுகள், ஜெர்மனி என ஆன்லைனில் படிப்பித்து வருகிறார் புல்லாங்குழல் மாஸ்டரான உமா சங்கர்..
ஹைதராபாத்தைச் சேர்ந்த இவரின் பூர்வீகம் மைசூர். இவருடையது பாரம்பரிய மிருதங்க குடும்பம்!.இவரது தந்தை மந்தனா வெங்கடேஸ்வரராவ் ஒரு மிருதங்க சக்கரவர்த்தி.! மாநில அரசின் ஜவஹர் பால் பவனில் மிருதங்க ஆசிரியராக உள்ளார். வானொலியிலும் நிலைய வித்வான்.! குடும்ப பாரம்பர்யபடி உமா சங்கரும் இசை பயணத்தை தொடரவே எண்ணியிருந்தார். ஆனால் அப்பாவோ'பழைய கால-சூழல் இப்போது இல்லை.இசையின் விஞ்ஞான வளர்ச்சியில் பாரம்பர்ய வாத்தியங்களுக்கு எந்த அளவிற்கு வாய்ப்புகள் இருக்கும் என தெரியாது. ஆகையால் படித்து பொருளாதாரத்திற்காக வேறு துறையை தேர்ந்தெடுத்து ஓய்வு நேரத்தில் இசைத்தால் போதும் என்று வலியுறுத்தினார்.
அதன்படி,மந்தனா என அறியப்படும் உமாசங்கர் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் MBA முடித்தார். அதன் பின் SAP கன்சல்ட்டாக NTT data கம்பெனியில் பெரிய பொறுப்பு வகித்து வருகிறார். அத்துடன் மிருதங்கம், புல்லாங்குழல் கச்சேரிகளும் செய்கிறார்.அந்த கலைகள் அழிந்து போகாமல் இருக்க படிப்பிக்கவும் செய்கிறார். இதற்காகவே இவர்களது மோகனம் முரளி மியூசிக் அகடமி சிறப்பாய் இயங்கி வருகிறது. இங்கு 15 க்கும் மேற்பட்ட இசை ஆசிரியர்கள்! மிருதங்கம்,புல்லாங்குழல் மட்டுமின்றி அனைத்து வித வாத்தியங்களும், நடனங்களும் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.
மாலை நேரத்தில் இங்கு தொடர் வகுப்புகள் நடக்கின்றன. இவற்றை கற்று தருவதற்கென்றே இங்கு தனி கோர்ஸ்கள் உள்ளன. ஆறு வருட பாடத்திட்டம்! இதன் மூலம் மாணவர்கள், ஜூனியர் டிப்ளமோ,சீனியர் டிப்ளமோ என அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் பெறுகிறார்கள். இங்கு படிப்பவர்கள் CBSE பள்ளிகளில் ஆசிரியராக நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆதரவற்ற ஆசிரம பிள்ளைகளுக்கு இவர்களது பள்ளியில் இலவசமாக சொல்லித் தருகிறார்கள்.
இந்த இசைப் பள்ளியை உமா சங்கரின் மனைவி ஸ்ரீவாணி நிர்வகிக்கிறார்.இவர்களது மகள் ஸ்ரீ நிதியும் சிறந்த பாடகியாய் உருவெடுத்துள்ளார். மகளின் கச்சேரிக்கு மேடையில் அப்பா புல்லாங்குழலும் தாத்தா வெங்கடேஸ்வரராவ் மிருதங்கமும் வாசிப்பது விசேஷமான நிகழ்வு. அந்த அளவிற்கு பாரம்பர்யம் விட்டுப் போகாமல் இவர்கள் பாதுகாத்து வருகிறார்கள். உமா சங்கரை பொறுத்த வரை மிருதங்கம் வாசிப்பாளராகத்தான் முதலில் இருந்தார். T.R.மகாலிங்கத்தின் சிஷ்யரான T.N.சந்திரசேகர் இவருக்கு குரு.! அவர் இவருக்கு புல்லாங்குழல் கொடுத்த புல்லாங்குழை தான் இவர் பயன்படுத்தி வருகிறார்.
அதன்பின் இரண்டிலுமே இவர் மாஸ்டர்! தொடர்ந்து நிகழ்ச்சிகள் தருவதுடன் தனியாக ஆல்பங்களும் வெளியிடுகிறார்.இதற்காக விருதுகளும் பல பெற்றுள்ளார். புல்லாங்குழலுக்கு மூங்கில் தான் பிரதானம் என்றாலும் நவீனமாகவும் புதுப்புது டெக்னிக்கில் டிஜிட்டலிலும் நவீன மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் இசைப்பதும் அவற்றை கற்றுத்தருவதும் இவரது சிறப்பு.
உமாசங்கர் சௌதியில் பணிபுரிந்த போது அங்குள்ள பிள்ளைகளுக்கும் இசையை கற்பித்திருக்கிறார். புல்லாந்குலழை பொறுத்தவரை வெளிநாட்டினருக்கும் இதன் மேல் அதிக ஆர்வம் இருக்கிறதாம். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள்- நம் கலாச்சார வித்தைகளை தம் பிள்ளைகளுக்கும் கற்றுத்தர வேண்டும் என விரும்புகிறார்கள்.அங்கு அவற்றுக்கான வாய்புகள் இல்லாததால் உமாசங்கர் ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்து அதற்கு நல்ல வரவேற்பு.கிடைத்து வருகிறது.
இவரிடம் படித்த பிள்ளைகள் அமெரிக்கா முழுவதும் மேடை நிகழ்ச்சிகளும் தருகிறார்கள். கோயில் நிகழ்வுகளிலும் இசைக்கிறார்கள்.இந்த இசை சர்டிபிகேட்டை வைத்து முக்கிய கல்லூரியில் இடம் பெற்று படித்து- NASAவில் சேர்ந்தவர்களும் உண்டு. ஆன் லைன் மட்டுமின்றி வெளிநாடுகளில் நேரிடையான பள்ளிகளும் ஆரம்பித்து நமது கலாசாரம் காக வேண்டும் என்பது இவரது லட்சியம்.
-என்.சி.மோகன்தாஸ்
பட மிக்ஸ்; ஹரிலக்ஷ்மன்
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.