"மனதில் உறுதி பூண்டு செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம். விரும்பிய திசையில் பயணிக்கலாம். அதற்கான துணிவு வேண்டும். பிறரை சார்ந்து இருக்காமல் சொந்த காலில் நிற்க முனைவதிலும் ,நிற்பதிலும் தான் எனது வெற்றி அடங்கியிருக்கிறது!"
பெருமிதத்துடன் சொல்கிறார் காயத்ரி வெங்கடேஸ்வரன். இவர் காயத்ரிஸ் வீணாலயம்,YOGA BREEZE LLC மற்றும் GAVEN FINANCIAL groups என மூன்று நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.
கோவையைச் சேர்ந்தவர். அப்பா ராஜகோபால் மளிகை கடை,அம்மா விஜயா குடும்ப நிர்வாகத்துடன் வீட்டிலேயே தையல் என நெருக்கடியான கூட்டுக்குடும்பம்!
அண்ணா அக்காவிற்கு பின் இவர் கடைக்குட்டி!
பொதுவாய் கடைக்குட்டி என்றால் செல்லம் எல்லாம் கிடைக்கும் என்பார்கள்
அங்கே நேர் எதிர்ப்பதம் ! பொருளாதார நெருக்கடியில் இவரது விகிதத்துக்கு வரும் போது எதுவும் மிஞ்சாமல் போவதுமுண்டு. பொதுவாய் அதிர்ஷ்டத்திற்கும் அவருக்கும் ரொம்ப தூரம். எதிர்பார்க்கும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட நடப்பதில்லை.
அதற்கு ஒரு உதாரணமாய் ஆறாவது வரை செயின்ட் ஜோசப்பில் படித்த காயத்ரியும் அவரது அக்காவும் பணப் பிரச்சனையால் அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டதைச் சொல்லலாம்.
வீட்டில் வசதி பத்தாது என்றாலும் கூட அப்பாவும் அம்மாவும் முடிந்தவரை குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றி தருவர்.
அவர்களது குடும்பத்தில் பெண் பார்க்க வரும்போது பாட்டு பாடச் சொல்வார்கள் என்பதால் - சின்ன வயதிலிருந்தே அவர்களை பாட்டு கற்றுக் கொள்ள அனுப்புவார்கள்.அதன் காரணமாய் காயத்திற்கு இசையின் மேல் ஆர்வம் ஏற்பட்டிருந்தது.
கல்லூரிப் படிப்புக்கு வீட்டினரின் விருப்பத்திற்கு எதிராய் காயத்ரி -
மியூசிக் தான் படிப்பேன் என பிடிவாதமாய் இருந்தார்.
அந்த வருடம் கோவையில் தமிழ்நாடு இசைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட -வசதியாயிற்று. அதிலும் ஆறு மாதம் தாமதமாய் போய் அணுக - கடுமையான தேர்வில் வென்றால் தான் அட்மிசன் என்கிற நிலையில் அதையும் 97 மார்க்கில் பாசாகி சேர்ந்து பட்டம் பெற்றார்.
சின்ன வயதில் இருந்து காயத்ரி துறு..துறு! சுட்டி என்பதற்கும் அப்பால் -
வாய் துடுக்கு என தூற்றப்பட்டவர்.எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் பேசி விடுவது அவரது பழக்கம்.யோசிப்பதில்லை.. அஞ்சுவதில்லை !அந்த முகத்துக்கு நேரான பேச்சு பலம் என்றாலும் கூட அதுவே பலவீனமாகவும் பேசப்பட்டது.
காயத்ரி வீணை கற்றுக் கொண்டதே ஒரு சுவாரஸ்யம்! ஒரு சூழலில் - இவருக்கு வீணை வராது என ஒதுக்கப்பட்ட போது, தன்னாலும் முடியும் என பிடிவாதம் பிடித்து வீணை டீச்சரிடம் சேர்ந்து 10 மாதத்தில் கற்றுத் தெரிந்தார்.
தனக்கு முடியும் - என் திறமையை நிரூபிக்கிறேன் என மனதிற்குள் வெறி !
அதை ஒரு சவாலாக ஏற்று பயின்றதில் வெற்றி!
காயத்ரிக்கு ஃபேஷன் - டிசைனில் விருப்பமிருந்தாலும் கூட வைராக்கியம் அவரை இசைப்பக்கம் திருப்பிற்று. படிப்பின் போது நேரு யுவகேந்திரா ,காலேஜ் போட்டிகள் என கலந்து கொண்டு ஜெயித்திருக்கிறார்.
ஒன்றில் ஆசைப்பட்டால் காயத்ரி அதிலிருந்து பின் வாங்குவதில்லை.
துணிந்து இறங்குவார் - ஜெயிப்பார்.! அந்த அளவிற்கு தன்னம்பிக்கை!
சில விஷயங்கள் பணமுடையால் நடக்காமல் போகும் சூழல் ஏற்படும்.
அப்பாவின் கடையில் வருமானம் குறைந்த சமயம் - நாமே ஏன் நம் கைச் செலவுக்கு சம்பாதிக்க கூடாது என்று தன் தந்தையிடம் கடனாக பணம் பெற்று மொத்த விற்பனை கடையில் பொருள்கள் வாங்கி வெளியே விற்பார். அப்படி சம்பாதித்து அப்பாவிடம் பெற்ற கடனை அடைப்பார்.
பெண்ணாய் - லட்சணமாய் வீட்டில் அடங்கி கிடக்கணும் என்கிற கொள்கையை உடைத்து -தன்னாலும் முடியும் என்கிற வேட்கை ! தீ !
அதனால் அவர் கை வைப்பதிலெல்லாம் வெற்றி. பெற முடிந்தது.
பெண் பிள்ளைகள் தங்கள் சக்தியை அடக்கி வைக்காமல் சுயமாய் நிற்கனும் என்கிற அம்மாவின் ஊக்கம் அவருக்கு பெரிய பலமாய் அமைந்தது. காயத்ரி இசைப்பார்.இசை கற்றுத் தருவார். பெயிண்டிங் செய்வார். இரண்டு சக்கர வாகனம் பயிற்சி கொடுத்து ஏஜென்டுடன் சேர்ந்து லைசன்ஸ் வாங்கித் தருவார்!
இதற்கிடையில் யோகா முதல் டிகிரி அளவில் ஊரிலேயே கற்றார்.பிள்ளைகளுக்கு கீபோர்டும் சொல்லித் தருவார். இப்படி எத்தனை எத்தனையோ!
வீட்டில் வைத்து அதுவரை டியூஷன் சொல்லித் தந்த அக்கா, திருமணமாகி போய்விட அதை காயத்ரி தொடரவே அதன் மூலம் ஜே..ஜே என பிள்ளைகள் !
வருமானம் அதிகரித்தது.
ஒரு கட்டத்தில் குடியிருந்த வீடு டியூஷனுக்கு போதாமல் போக...தன் செலவிலேயே பெரிய வீடு பார்த்துக் குடும்பத்தை அமர்த்தினார்.
திருமணம் கூட காயத்ரிக்கு எளிதாய் அமைந்து விடவில்லை. பிரச்னை!
சவாலடிக்கிற மாதிரி செவ்வாய் தோஷம் விளையாடிற்று. இருந்தாலும் கூட வரதட்சணை கேட்காத மாப்பிள்ளை தான் தனக்கு வேண்டும் என பிடிவாதமாய் இருந்து அதிலும் அவருக்கு வெற்றி!
திருமண செலவும் இரண்டு பக்கமும் தான் ஏற்கனும் என்கிற இவரது கண்டிஷன் கணவரை அமைந்த வெங்கடேஸ்வரனுக்கும் பிடித்துப் போயிற்று.
தனக்கு இப்படித் துணிவான பெண் தான் வேணும் என்றுஅவரும் மனப்பூர்வம் சம்மதித்தார்.
கம்ப்யூட்டர் என்ஜினியரான வெங்கட் காயத்ரிக்கு கிடைத்த வரம்! உரமாகவும் இருக்கிறார். வெங்கடேஸின் உத்யோகம் மூலம் 1997 ல் இவர்கள் அமெரிக்கா போய் செட்டிலிட். வீட்டில் சாஸ்வத் , மோமோனீஷ் என இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை இரண்டு சம்பாத்யம் இருந்தால் தான் சுகமாய் குடும்பம் நடத்த முடியும். காயத்ரி அதற்கான வழிவகைகளை தானே தேடிக் கொண்டார்.சுயம்பு.!
வர்ஜினியாவின் YOGAVILLE எனும் இடத்தில் சுவாமி சச்சிதானந்தா ஆசிரமம் நடத்தி அதில் International YOGA கற்றுக் கொடுத்து வந்தார்..
ஏற்கனவே YOGA வில் முதல் டிகிரி முடித்திருந்த காயத்ரி அங்கு போய் தங்கி எட்டு டிகிரிகள் பெற்றிருக்கிறார். அதன் பின் வீட்டில் வைத்தே நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கிறார். டெக்ஸாஸ் தவிர அமெரிக்காவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் கூட ஆன்லைனிலும் படிப்பிக்கிறார்.
இதன் மூலம் கேன்சர் ,சர்க்கரை , இருதயம் , தைராய்டு போன்ற பல பிரச்சனைகளுக்கும் நல்ல பலன் கிடைக்கிறது என்பதால் காயத்ரி இதை ஒரு வேள்வியாகவே செய்து வருகிறார்.
ஏழு வீணைகள் வைத்து வீட்டிலும் ஆன்லைனிலும் சொல்லித் தருகிறார்.
இவரது வீணை பயிற்சி சான்றிதழ் அங்கு கல்லூரியில் சேரஅதிகாரப் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தவிர – காயத்ரி கணவருடன் சேர்ந்து பைனான்ஸ் தொழிலும் இறங்கியுள்ளார். இதற்காக இன்சூரன்ஸ் , படிப்பு , ரிட்டயர்மென்ட் பிளான் என்று பல நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுகிறார்.
பெண்களும் சுயமாய் கற்கனும் - செயல்படனும் என அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி தன் குழுவில் சேர்த்து பயிற்சி அளித்து அவர்களது சுய சம்பாத்யத்திற்கும் வழி வகுத்து தருகிறார்.குடும்ப அளவில் இது போல் பாதிக்கப் படும் பெண்கள் பலரும் இருக்கிறார்கள்.
ஊரிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவுகிறார். ஆதரவற்றோர் இல்லம் ஆரம்பித்து சேவையாற்ற வேண்டும் என்பது இவரது அடுத்த லட்சியம்.
--என்.சி.மோகன்தாஸ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.