ஸ்வீடன் நாட்டின் தென்கோடியில் உள்ள மால்மோ, லுண்ட் மற்றும் அருகிலுள்ள பிற நகர வாழ் தமிழ்க் குடும்பங்கள் ஒன்றிணைந்து தென் ஸ்வீடன் தமிழ்ச் சங்கம் சார்பாக ஏழாம் ஆண்டு பொங்கல் விழாவினை தமிழர் கலாச்சார முறைப்படி பாரம்பரிய உடை அணிந்து உற்சாகத்துடன் கொண்டாடினர். கொரோனா கால கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைய வழியாக நடந்த பொங்கல் விழா இந்த வருடம் அரங்கத்தில் நடந்ததால் கூடுதல் உற்சாகத்துடன் திரளாக கலந்து கொண்டனர்.
மங்கலகரமான நாதஸ்வர இசை முழங்க, குத்துவிளக்கு ஏற்றி துவங்கிய விழா பலவித வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது. வயது பேதமின்றி அனைவரும் குழந்தைகளைப் போல் துள்ளலுடன் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். தம்பதிகள் நடத்திய ஆடை அணிவகுப்பு நடனம் விழாவிற்கு மெருகூட்டியது. குழந்தைகள் வரைந்திருந்த பொங்கல் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கலை நிகழ்ச்சிகளின் நடுவே சிறுசிறு போட்டிகள் உற்சாகத்துடன் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் அனைவரும் தங்கள் நண்பர்களுடன் விளையாடி சிரித்து மகிழ்ந்ததும் மற்றும் இளைஞர்களும் பெரியவர்களும் தங்கள் நண்பர்களுடன் அளவளாவி மகிழ்ந்ததும் விழாவினை மேலும் மெருகேற்றியது.
சொந்த தேசம் விட்டு தொலை தூரத்தில் வசிக்கும் குடும்பங்கள் சொந்தங்களைப் போலும், சகோதரத்துவத்துடனும் ஒன்றிணைந்து கொண்டாடிய பொங்கல் விழா மாத நாட்காட்டி பரிசுடனும், அறுசுவை விருந்துடன் இனிதே நிறைவுற்றது.
- தினமலர் வாசகர் பாலமுருகன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.