ஜப்பான் கசாய் மக்கள் அரங்கத்தில் தோக்கியோ வாழ் தமிழர்கள் ஒன்று கூடி பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடினார்கள். 92 ஆம் ஆண்டு துவங்கிய பொங்கல் விழா கொண்டாட்டம் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட இரு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு முப்பதாம் ஆண்டு பொங்கல் விழாவாக தோக்கியோ பொங்கல் விழாக் குழுவினரால் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது.
தோக்கியோ மட்டுமல்லாது ஜப்பானின் கான்தோ பகுதியின் மற்ற இடங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாக திரண்டு வந்து ஆர்வத்துடன் பங்கு கொண்டார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட சிறார்களின் ஆடல் பாடலுடன் ஜப்பான் தமிழர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் நிகழ்வாக அமைந்தது. முந்தைய ஆண்டுகளில் மேடைப் பின்புலத்தை அலங்கரித்த பிளக்ஸ் பேனரை தவிர்த்து ஒளிப்படங்கள் மூலம் உயிரூட்டியது அழகாகவும் அதே சமயம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஒரு செய்தியாகவும் அமைந்திருந்தது.
மாலை ஆறு மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, பாடல், நடனம், நாடகம் என்று பல்சுவை நிகழ்ச்சிகள் மூன்று மணி நேரம் பார்வையாளர்கள் நேரம் போவதே தெரியாமல் ரசித்து மகிழ்ந்தனர். நடனங்களில் பங்கு கொண்ட ஜப்பானியர்களும் திரைப்படப் பாடல்களின் தாளங்களுக்கேற்ற அசைவுகள் மட்டுமல்லாது பாடல் வரிகளை வாயசைத்துக் கொண்டு ஆடியது அனைவரையும் கவர்ந்தது. ஒவ்வொரு கலை நிகழ்ச்சி முடிந்த உடனேயே அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஆர்வலர்களை மேடைக்கு அழைத்து கௌரவித்தது பலராலும் பாராட்டப்பட்டது.
பெருந்தொற்றின் கோரப்பிடியிலிருந்து உலகம் மீண்டு வந்துள்ள இந்த வேளையில் நடைபெற்ற பொங்கல் விழா கலந்து கொண்டவர்கள் மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியுடனும் மட்டுமல்லாது கையில் பொங்கல் விருந்து அடங்கிய உணவுப் பெட்டியுடன் வீடு திரும்பினார்கள் என்பது நிகழ்ச்சியின் நிறைவான முத்தாய்ப்பு
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.