தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரம் கோயம்புத்தூரின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல் பதித்துள்ளார் ஷாஜெய்ப் ஷானவாஸ் தப்ரேஸ். கோயம்புத்தூரை சேர்ந்த 11 வயதான ஷாஜெய்ப், 'ஜெர்மனி செஸ் கூட்டமைப்பு' நிர்வாகத்தினர் நடத்திய 5 கட்ட செஸ் போட்டிகளில் அனைத்திலும் முதல் இடத்தை பிடித்து ஜெர்மனியின் தற்போதைய கிராண்ட் மாஸ்டர் டேனியல் ஃபிரீட்மன் கையால் சான்றிதழும் 300 யூரோ பணமும் வென்றுள்ளார்.
2022-23 ஆம் ஆண்டுக்கான அமெச்சூர் செஸ் விளையாட்டு போட்டி ஜெர்மனியின் கோப்பிளான்ஸ் நகரத்தில் நடைபெற்றது. 7 வயது சிறுவர் முதல் 85 வயது பெரியவர் வரை உள்ள மக்களுக்காக நடத்தப்படட போட்டியில் 8 குழுவாக வயதுக்கு ஏற்றபடி பங்கு பெற்றவர்கள் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ளவர்கள் ஐந்து போட்டிகளில் பங்கு பெற வேண்டும். இந்த போட்டியில் தான் கோயம்புத்தூரை சேர்ந்த சேர்ந்த ஷான் என்பவரின் மகன் ஷாஜெய்ப், அனைத்து போட்டிகளிலும் வென்று முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக பாவ்பார்க் நகரத்தில் நடக்கும் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
தன் தந்தையின் வேலை காரணமாக கோயம்புத்தூரிலிருந்து ஜெர்மனியின் லாங்கன் நகருக்கு குடிபெயர்ந்த ஷாஜெய்ப் தற்போது ஜெர்மனியில் படித்துவருகிறார். சிறு வயது முதலே செஸ் விளையாட்டு போட்டியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் ஷாஜெய்ப். பல டோர்னமெண்ட்களில் விளையாடி இதுவரையிலும் 13 ட்ராபிக்களையும் மூன்று மடல்களையும் வென்றுள்ளார்.
சதுரங்கம் மட்டுமல்லாமல் கீபோர்டு மற்றும் பியானோ வாசிப்பதிலும் வல்லவர். கராத்தேயில் ஆரஞ்சு பெல்ட் வாங்கி இருக்கிறார். கர்நாடக இசையில் கிரேட் 2 வரை முடித்துள்ளார். செஸ் விளையாட்டில் புதிர்கள் அமைப்பதில் மட்டுமல்லாமல் அதை சேலன்ச் ஆக எடுத்து வெற்றி பெறுவதிலும் கை தேர்ந்தவர்.இவர் ஒரு யூ-டியூப்பரும் கூட.
உலக அளவில் செஸ் விளையாட்டில் இவரின் இலோ ஸ்கோர் 1210. அதுவே ஜெர்மனி அளவில் 1376. இப்போது இந்த டோர்னமெண்டில் வெற்றி பெற்றதன் மூலம் இவரின் ஸ்கோர் இன்னும் உயரும். கடந்த மாதம் 25ஆம் தேதி ஜெர்மனியின் லாங்கன் நகரில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியிலும் இவர் முதல் பரிசு பெற்றுள்ளார். செஸ் விளையாட்டில் மேலும் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள் ஷாஜெய்ப்!
- நமது செய்தியாளர் ஜேஸு ஞானராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.