'இப் புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்'-மகாகவி பாரதி.
வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 'ஆற்றல்மிகு பெண்கள் குழு' மார்ச் 11 ஆம் நாள் அருமையான அசத்தலான முறையில் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்களின் ஆற்றல் மிகு பேச்சு மற்றும் கலந்துரையாடல் என மிகச் சிறப்பான ஒரு நிகழ்வினை பன்னாட்டு மகளிர் நாளுக்காக நடத்தினர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது இந்நிகழ்வு. பேரவையின் தலைவர் முனைவர் பாலா சுவாமிநாதன் வாழ்த்துரை வழங்க, இக்குழுவின் தலைவர் சிவன் இளங்கோ வரவேற்புரை ஆற்ற இன்னிசை நிகழ்ச்சியுடன் ஆரம்பித்தது.
'ஆன் தி ஸ்ட்ரீட் ஆப் சென்னை' இசைக் குழுவினர் பெண்களை முன்னிலைப் படுத்தும் பல பாடல்கள் பாடினர். அருமையாக இருந்தது. இக்குழுவினர் சமூகம் சார்ந்த கருத்துக்களுடன் பல நிகழ்ச்சிகளை சென்னையில் கட்டணம் ஏதுமின்றி பொதுவெளியில் காவல்துறை மற்றும் மாநகராட்சியின் அனுமதியுடன் வழங்கி வருகின்றனர்! இந்நிகழ்வின் இறுதியில் மகாகவி பாரதியின் 'நின்னைச் சரணடைந்தேன்' பாடலை தானாகவே முன்வந்து பாடிய பண்பு பாராட்டத்தக்கது. அனைவருக்கும் வாழ்த்துகள்!
பன்னாட்டு பெண்கள் நாளில் சாதனைப் பெண்களைப் போற்றாமல் விடுவதெப்படி! கடந்த ஆண்டு நடந்த பேரவை விழாவில் 'சாதனைப் பெண்கள்' 20 பேரை நமது பேரவை மரியாதை செய்தது. அவர்களைப் பற்றிய காணொளித் தொகுப்பு காண்பிக்கப்பட்டது. இது பிற பெண்களுக்கும் உத்வேகம் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள் அனைவருக்கும்
இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கோதை அமுதனின் பேச்சு, பெண்மையின் மாண்பு அறியாது உறங்கிக்கொண்டிருப்போர் பலரைத் தட்டி எழுப்பும் விதமாக இருந்தது. மேலும் அவர் போராடி வெற்றி பெற்ற பெண்களை அழகாய் கோடிட்டுக் காட்டியது மிகச் சிறப்பு
அதனை அடுத்து சான் ஆண்டோனியோவைச் சார்ந்த அபிராமி சுப்ரமணியனின் 'கலைக்கூடம்' நடனக் குழுவினர் சிறந்ததொரு நடனம் வழங்கி மகிழ்வித்தனர். அவர்களுக்கு பாராட்டுக்கள்!
கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து முனைவர் பூங்குழலி கைலாஷ் அடுத்த சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தோரை அறிமுகப்படுத்தி வரவேற்றார்.
இக்குழுவின் இணைத் தலைமையாக இருக்கும் லாவண்யா அழகேசன் சிறப்பு விருந்தினர்களான வலிமைமிக்க வழக்கறிஞர்களிடம் பெண்களுக்கான பல பிரச்சனைகளை, கேள்வி-பதில் முறையாக இந்நிகழ்வில் சிறப்பாக வினவினார். மிகச் சிறந்த சேவைகள் பல புரிந்து வரும் ஒப்பற்ற வழக்குரைஞர்களான கவிதா ராமசாமி-நியூ ஜெர்ஸி, மேரி கென்னடி-சிகாகோ, ஆனந்த கோமதி- சென்னை ஆகியோர் பற்பல மிகப் பயனுள்ள ஆலோசனைகள் வழங்கினர்.
மீண்டும் பூங்குழலி கைலாஷ் நன்றியுரை கூற இப்பெண்கள் குழுவின் நிகழ்ச்சி சிறப்புடன் நடந்தேறியது.
இந்நிகழ்வு அனைத்தையும் ஷீலா ரமணன் இனிதே தொகுத்து வழங்கினார்.
இத்தகைய சிறந்ததொரு நிகழ்ச்சியின் காணொளி இதோ உங்களுக்காக!
https://www.youtube.com/watch?v=g3qqOlKWsOw
-நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.