ஸ்ரீ சண்டி யாகம் ஒரு பிரம்மாண்டமான யாகம். அன்னை பார்வதி தேவி பல காலங்களில் பல வடிவங்களில் எழுந்தருளி பிரபஞ்சத்தைக் காத்தருளி இருக்கிறார். அதில் ஒன்று அரக்கர்களை வதம் செய்ய அன்னை எடுத்த துர்க்கா தேவி வடிவம். அந்த துர்க்கா தேவிக்கு மங்கள சண்டிகா எனும் பெயரும் உண்டு. துர்க்கா தேவியின் அருளைப் பெறுவதற்குச் செய்யப்படும் ஒரு யாகம்தான் மஹா சண்டி யாகம்.
இந்த யாகத்தில் பல தெய்வங்களைப் பூஜித்தும் எழுநூறுக்கு மேற்பட்ட சக்தி வாய்ந்த மந்திர ஜபங்களை உருவேற்றியும் பூஜை செய்வதால் பூஜை செய்பவர்களுக்கு நிச்சயமான பலன்களை நல்கும் .பூஜையின் நிறைவாக பெண் குழந்தைகளை துர்க்கா தேவியாகப் பாவித்து கன்யா பூஜை செய்து அவர்களுக்குப் புத்தாடைகள் வழங்குவது பெரும் நன்மை பயக்கும். கோ மாதா பூஜை செய்வது விசேஷமாகும்.
சண்டி யாகம் செய்வதால் வாழ்வில் ஏற்படும் தடைகள் – தாமதங்கள் நீங்கும். திருஷ்டிகள் – மறைமுக எதிரிகள் – துஷ்ட சக்தி பாதிப்புகள் – குல சாபங்கள் அனைத்தையும் போக்கி செல்வம் பெருகும். நீண்ட ஆயுள் மற்றும் நோய்கள் அணுகாத சுபிட்ச வாழ்க்கை உண்டாகும்.
சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் இத்தகு மகத்தான யாகம் மார்ச் 18 – 19 ஆம் தேதிகளில் இரண்டு காலமாக வெகு விமரிசையாக வேத விற்பன்னர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித கடம் ஆலயம் வலம் வரப் பெற்று கலசாபிஷேகம் நடைபெற்றது மெய் சிலிர்க்க வைத்தது. 19 ஆம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு பூர்ணாஹீதி – மகா தீபாராதனை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
இரவு ஏழு மணிக்கு குங்கும திரிசதி அர்ச்சனை நடைபெற்றது. யாகத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ கருமாரியம்மன் சிலை மற்றும் வெள்ளிப் பதக்கத்தை பக்தப் பெருமக்கள் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத் தகுந்ததாகும். ஆலய மேலாண்மைக் குழுவினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தமை அனைவராலும் பாராட்டப்பட்டது.
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.