கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கெலாம் களைகனாகித் திகழ்ந்து தொபாயோ பகுதியில் அருளாட்சி புரிந்து வரும் ஸ்ரீ அன்னை வைராவி மட காளியம்மன் ஆலயத்தின் முத்திரைத் திருவிழாவான ஸ்ரீநவாக்க்ஷரி லட்ச ஜப மஹா யாகம் மார்ச் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. தலைமை அர்ச்சகர் கணேஷ் குமார் சிவாச்சார்யார் தலைமையில் வேத விற்பன்னர்கள் பங்கேற்ற இந்த யாகம் அப்பகுதியையே விழாக் கோலம் பூணச்செய்தது.
வான் மழை வளாது தொடரவும் கோன் உயர் ஆட்சி செழித்தோங்கவும் – உலக உயிர்கள் யாவும் பிணியற்ற வாழ்வு பெற்று குறைவற்ற செல்வம் பெருகவும் இந்த சிறப்பு யாஹம் செய்யப்படுகிறது.ஒரு லட்சம் மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு பத்தாயிரம் ஹோமப் பொருட்களைக் கொண்டு பூர்ணாஹீதி செய்யப்படுவது பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது. 17 ஆம் தேதி வஸ்த்ர சமர்ப்பண வழிபாட்டில் 108 புடவை சமர்ப்பணத்தில் பெருந் திரளான மகளிர் பங்கேற்றது குறிப்பிடத் தகுந்ததாகும்.
19 ஆம் தேதி அன்னை ஸ்ரீ காளியம்மனுக்கு ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்ற போது பக்தப் பெருமக்கள் உணர்ச்சிப் பெருக்கில் “ ஓம் சக்தி...பராசக்தி .....ஓம் சக்தி பராசக்தி “ என முழங்கியது பக்திப் பெருக்கைச் சுட்டியது.நிறைவு நாளான மார்ச் 18 ஆம் தேதி காலை 8.15 க்கு சங்கல்பம் – விக்னேஸ்வர பூஜை - யஜமான சங்கல்பம் – கலச பூஜையுடன் நிகழ்வு தொடங்கியது. 8.30 மணிக்கு நவாக்க்ஷரி ஹோமம் நிறைவு – த்ரவ்யாஹீதி நடைபெற 9.15 க்கு கோ பூஜை – கன்யா பூஜை – சுமங்கலி பூஜை நடைபெற்றன.
9.45 மணிக்கு வசோர்த்தாரா – வஸ்திர சமர்ப்பணம் – மகா பூர்ணாஹீதி – தீபாராதனை தொடர்ந்தது. 10.30 மணிக்கு யாக சாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித கடம் ஆச்சாரியப் பெருமக்கள் சிரமேற்றாங்க மங்கல இசையும் பக்தர்களின் சரண கோஷமும் முழங்க ஆலயம் வலம் வந்து அன்னைக்கு கலசாபிஷேகம் நடைபெற்ற போது பக்தப் பெருமக்கள் உணர்ச்சப் பிழம்பாக காட்சியளித்தனர். அருட்சக்திக் கும்பம் ஆலயம் வலம் வந்ததைக் காணாத கண் என்ன கண்ணே என அனைவரும் பரவசமாயினர். நிறைவாக மகா தீபாராதனை நடைபெற்று பங்கேற்றோர்க்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலையில் சர்வ அலங்கார நாயகியாக அன்னை எழுந்தருளி ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார். ஆலய மேலாண்மைக் குழுவினரும் தொண்டூழியர்களும் மிகச் சிறப்பாகப் பணியாற்றி பக்தர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்.
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.