சிங்கப்பூர் முஸ்லிம் லீக் சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் மகளிர் பிரிவான வளர்பிறை மகளிர் வட்டம் அனைத்துலக மகளிர் தின விழாவை மார்ச் 11 ஆம் தேதி மாலை முகநூல் மற்றும் வலையொளிவழி நேரலையாக மிகச் சிறப்பாக நடத்தியது. ஏராளமானோர் கண்டு களித்த இந்நிகழ்வுக்கு மூத்த சமூக அடித் தளத் தலைவரும் மகளிர் வட்ட ஆலோசகரும் புதிய நிலா இதழாசிரியருமான மு.ஜஹாங்கீர் தலைமை ஏற்றார்.
லிஷா மகளிர் பிரிவுத் தலைவர் ராஜலட்சுமி கண்ணப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். “ ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே “ எனும் சுந்தரி சாத்தப்பனின் இன்னிசைப் பாடல் நிகழ்வுக்குச் சுவை கூட்டியது. முத்தாய்ப்பு நிகழ்வாக “ பெண்களின் முன்னேற்றம் பெரிதும் சாத்தியமாவது மன வலிமையினாலேயே – சமூக சூழ்நிலையினாலேயே “ என்ற தலைப்பில் சிங்கையின் “ சிங்கப் பெண் – பாரதிமகள் “ மஹ்ஜபீன் நடுவர் பொறுப்பேற்க பலத்த கரவொலிக்கிடையே தொடங்கியது
நபிஸா நஸ்ரின் தலைமையில் செல்வி யாழினி கமலக் கண்ணன் மற்றும் நர்கீஸ் பானு ஆகியோர் மன வலிமையினாலேயே என வாதிட்டனர். இசக்கி செல்வி தலைமையில் மிஸ்காத் பேகம் மற்றும் நஸ்ரின் பானு ஆகியோர் சமூக சூழ்நிலையினாலேதான் என எதிர் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களுக்குமே பார்வையாளர்கள் உற்சாக வரவேற்பளித்து அசத்தினர். வலிமையான வாதங்ளை ஆராய்ந்து தீர்ப்பளித்த நடுவர் மன வலிமையினால் வென்ற இரு பெண்களின் உண்மைச் சம்பவங்களை மேற்கோள் காட்டினார். காபிடேவின் மாளவிகா ஹெக்டே மற்றும் இன்ஃபோஸிஸ் சுதா மூர்த்தி ஆகியோரின் தன்னம்பிக்கை நிலையே பெரிதும் முன்னேற்றத்திற்கு சாத்தியமாயிற்று எனத் தீர்ப்புக்கு வலிமை சேர்த்து விளக்கினார்.
அ.முஹம்மது பிலால் தமக்கே உரிய பாணியில் செந்தமிழ் மணக்க நிறைவுரை ஆற்றி மகிழ்வித்தார். நிகழ்வினை செல்வி முத்து சுவேதா சுவைபட நெறிப்படுத்தினார். கவியரங்கம் – கருத்தரங்கம் – உரையரங்கம் எனப் பற்பல நிகழ்வுகளை நடத்திய மகளிர் பிரிவு இந்நிகழ்வின்வழி மற்றுமொரு பெருமை பெற்றுள்ளது.
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.